அமெரிக்காவில் 45 நாட்களாக பிடிபடாமல் ஆட்டம் காட்டி வந்த செம்மறி ஆட்டுக்குட்டியை பதின்மூன்று வயதான ரீகன் க்ரம்ப்ளர் என்ற சிறுமி தனது குதிரையின் உதவியுடன் நீண்ட போராட்டத்திற்கு பிறகு பிடித்தார்.
அமெரிக்காவின் வாட்ஸ்வெர்த் பகுதியில் கடந்த செப்டம்பர் 27 ஆம் தேதி, பழுப்பு மற்றும் கருப்பு நிறத்திலான ஒரு செம்மறியாடு வீதிகளில் அலைந்து திரிவதாகவும், நெடுஞ்சாலைகளில் ஆபத்தான முறையில் ஓடுவதாகவும் விலங்கு நல மீட்பு குழுவினருக்கு பொதுமக்கள் தகவல் தெரிவித்தனர்.
இந்த அரிய வகை இனத்தை சேர்ந்த செம்மறி ஆடு, மிகவும் சுறுசுறுப்பாகவும், வேகமாக ஓடும் திறனையும், அதிக உயரத்திற்கு தாண்டும் திறனையும் பெற்றுள்ளது.
இதையடுத்து அந்த பகுதியில் உள்ள ஒரு வீட்டின் முற்றத்தில் ஆடு மேய்ந்து கொண்டிருந்ததை பார்த்த நபர் ஒருவர், ரெபேக்கா ராக்ஸ்பெர்ரி என்ற உள்ளூர் விலங்கு மீட்பாளருக்கு தகவல் தெரிவித்தார்.
இதைத்தொடர்ந்து செம்மறி ஆடு ஒரே பாதுகாப்பான இடத்தில் தங்குவதற்காக, ஒவ்வொரு நாளும் ரெபேக்கா உணவு வைத்து வந்தார்.
மேலும் அந்த ஆட்டை பார்க்கும் அக்கம்பக்கத்தினர் தனக்கு தகவல் தெரிவிப்பதற்காக, பேஸ்புக் பக்கத்தையும் ரெபேக்கா தொடங்கினார்.
இதையடுத்து கிட்டத்தட்ட இரண்டு மாதங்களாக ரெபேக்கா, உள்ளூர் காவல்துறையினர் உதவியுடன் ட்ரோன்கள் மூலம் முயற்சி செய்தும், செம்மறி ஆட்டை பிடிக்க முடியாமல் போனது.
மேலும் உலோக கூண்டு வைத்து பிடித்தால், செம்மறி ஆடு பீதியடைந்து கம்பிகளில் பாய்ந்து காயம் ஏற்படக்கூடும் என கால்நடை மருத்துவர்கள் எச்சரித்தனர்.
இந்த சூழ்நிலையில் சுருக்கு கயிற்றால் விலங்குகளை பிடிக்க தெரிந்த ஒருவர் இருந்தால், தன்னை தொடர்புகொள்ளுமாறு ரெபேக்கா இணையத்தில் பதிவிட்டார்.
இந்த பதிவை பார்த்த 13 வயதான ரீகன் க்ரம்ப்ளர் என்ற சிறுமி, திறமையான குதிரையேற்ற வீரரும், சுருக்கு கயிறில் கை தேர்ந்தவருமாக இருந்தார்.
இதையடுத்து அந்த சிறுமி, தான் அந்த செம்மறி ஆட்டை பிடித்து தருவதாக கூறினார். இதைத்தொடர்ந்து நவம்பர் 11 அன்று, ரீகன் தனது குதிரையுடன் நெடுஞ்சாலைக்கு அருகில் உள்ள ஒரு வயலுக்குள் சென்றார்.
இந்த சம்வத்தை சுற்றி இருந்த மக்கள் பார்த்து ஆரவாரம் செய்தனர், அப்போது தனது குதிரையில் வேகமாக சென்ற சிறுமி, சுருக்கு கயிற்றை துல்லியமாக வீசி செம்மறியாட்டின் கழுத்தை பிடித்தார்.
இதையடுத்து கிட்டத்தட்ட 44 நாட்களாக ஆட்டம் காட்டி வந்த செம்மறி ஆட்டை, சிறுமி தனது திறமையால பிடித்தார்.
இதைத்தொடர்ந்து செம்மறி ஆட்டை பிடித்து கொடுத்த சிறுமியை கெளரவிக்கு வகையில், அந்த செம்மறி ஆட்டுக்கு ஜெர்ரி ரீகன் என பெயரிடப்பட்டது.
தற்போது அந்த செம்மறி ஆட்டை, விலங்கு பாதுகாவலர் தங்களது பண்ணையில் பாதுகாப்பாக வளர்த்து வருகின்றனர்.
மீட்கப்பட்ட இந்த செம்மறி ஆட்டின் உடலில் அடையாள அட்டையோ, எந்தவிதமான மைக்ரோசிப்போ இல்லாததால், அதன் உரிமையாளர் யார் என்று தெரியாமல் உள்ளது.
இந்த நிலையில் மீட்கபட்ட செம்மறி ஆடு, தங்கள் பண்ணையில் நிரந்தமரமாக தங்க வைக்கப்படும் என விலங்கு நல மீட்புக்குழுவினர் தெரிவித்துள்ளனர்.