உலகம்

இலங்கை அதிபரை சந்தித்து வாழ்த்திய பாதுகாப்பு துறை அமைச்சர் ராஜ்நாத் சிங்

38 ஆண்டுகளில் ஒரு இந்தியப் பாதுகாப்பு அமைச்சர் இலங்கைக்கு பயணம் மேற்கொள்வது இதுவே முதல் முறையாகும்.

பாதுகாப்பு அமைச்சர் ராஜ்நாத் சிங், இலங்கை அதிபர் அனுர குமார திசாநாயக்கவை சந்தித்து, பிராந்தியத்தின் பாதுகாப்பு, அமைதி மற்றும் செழிப்பை உறுதி செய்வதற்கான வழிகள் உள்ளிட்ட இரு நாடுகளுக்கும் இடையிலான பன்முக கூட்டாண்மை தொடர்பான விஷயங்கள் குறித்து கலந்துரையாடினார்.

மூன்று நாள் பயணமாக பாதுகாப்பு அமைச்சர் ராஜ்நாத் சிங் நேற்று (செவ்வாய்க்கிழமை) இலங்கை சென்றடைந்தார். பிரதமர் நரேந்திர மோடி நல்வாழ்த்துக்களை திசாநாயக்கவுக்கு தெரிவித்த அவர், இரு நாடுகளின் குடிமக்களும் வலுவான வரலாற்று மற்றும் நாகரிக பிணைப்புகளின் அடிப்படையில் ஆழ்ந்த நட்புறவை பகிர்ந்து கொள்கிறார்கள் என்பதையும் வலியுறுத்தினார் என பாதுகாப்பு அமைச்சகம் வெளியிட்ட அறிக்கையில் கூறப்பட்டுள்ளது.

இலங்கை அதிபருக்கு வாழ்த்து:

ராஜ்நாத் சிங், இலங்கை அதிபரின் அரசாங்கம் பதவியேற்று இரண்டு ஆண்டுகள் நிறைவடைந்ததை அடுத்து அவருக்கு வாழ்த்து தெரிவித்தார்.

"நாகரிக இரட்டையர்களாகவும், நெருங்கிய அண்டை நாடுகளாகவும், கடல்சார் பங்காளிகளாகவும், இந்தியாவும் இலங்கையும் பிராந்தியத்தின் பாதுகாப்பு, அமைதி, மற்றும் செழிப்பை உறுதி செய்வதற்காக இணைந்து செயல்படும் அதே வேளையில், மக்களின் வளர்ச்சி மற்றும் நலனுக்காகவும் தொடர்ந்து இணைந்து பணியாற்றும் என்பதை இரு தரப்பினரும் மீண்டும் உறுதிப்படுத்தினர்," என்று பாதுகாப்பு அமைச்சகம் தெரிவித்தது.

எக்ஸ் தள பதிவு:

38 ஆண்டுகளில் ஒரு இந்திய பாதுகாப்பு அமைச்சர் இலங்கைக்கு பயணம் மேற்கொள்வது இதுவே முதல் முறையாகும். இது குறித்த எக்ஸ் தளப் பதிவில், "இன்று கொழும்பில் இலங்கை அதிபர் அனுர குமார திசாநாயக்கவுடன் ஒரு சுமுகமான மற்றும் மிகவும் பயனுள்ள சந்திப்பு நடைபெற்றது.

பிரதமர் நரேந்திர மோடி சார்பாக அவருக்கு வாழ்த்துக்களை தெரிவித்ததோடு, அவரது அரசின் இரண்டு ஆண்டுகால வெற்றிகரமான நிறைவுக்கு வாழ்த்துகளையும் தெரிவித்தேன்," என்று ராஜ்நாத் சிங் குறிப்பிட்டார்.

பிரதமர் மோடியுடனான தனது உரையாடல்களை நினைவு கூர்ந்த திசாநாயக்க, இந்தியாவின் பாதுகாப்பு நலன்களுக்கு பாதகமான எந்தவொரு நடவடிக்கைகளுக்கும் இலங்கையின் நிலப்பரப்பு பயன்படுத்தப்படுவதை ஒருபோதும் அனுமதிக்காது என்று மீண்டும் வலியுறுத்தினார் என அந்த அறிக்கை தெரிவித்தது.

SCROLL FOR NEXT