அமெரிக்காவில் கடந்த ஆறு ஆண்டுகளாக வசித்து வந்த இளவரசர் ஹாரி மற்றும் மேகன் மார்க்கிள் தம்பதியினர் இங்கிலாந்துக்கு திரும்புவதால், அவர்கள் இங்கிலாந்தின் மதிப்புமிக்க வரிச் சலுகைகளை இழக்க நேரிடும் என மிச்செல்மோர்ஸ் சட்ட நிறுவனத்தின் வரி, அறக்கட்டளை மற்றும் வாரிசுரிமை பார்ட்னரான தனா சபாநாதன் தெரிவித்துள்ளனர்.
இங்கிலாந்து மன்னரான மூன்றாம் சார்லஸ்-ன் இளைய மகனும், இளவரசருமான ஹாரி, அமெரிக்காவை சேர்ந்த மேகன் மார்க்கிள் என்பவரை திருமணம் செய்து கொண்ட பின்பு, அரச குடும்பத்தின் மூத்த உறுப்பினர்கள் என்ற பொறுப்பில் இருந்து விலகி, 2020-ஆம் ஆண்டு இங்கிலாந்தில் இருந்து அமெரிக்காவிக்கு தனது மனைவியுடன் குடிபெயர்ந்தார்.
இதையடுத்து கடந்த 6 ஆண்டுகளாக அமெரிக்காவில் வசித்து வந்த தம்பதியினர், தற்போது மீண்டும் இங்கிலாந்திற்கு குடிபெயர உள்ளனர்.
இந்த நிலையில் இளவரசர் ஹாரி தனது மனைவி மேகனுடன், அமெரிக்காவின் மாண்டெசிட்டோ மாளிகையில் இருந்து லண்டனுக்கு வெளியே உள்ள நகரத்தில் குடிபெயர உள்ளனர்.
இந்த நிலையில் இளவரசர் ஹாரி இங்கிலாந்து திரும்பும் முடிவு குறித்து தனா சபாநாதன் அதில் உள்ள சாதக பாதகங்களை குறித்து விளக்கியுள்ளார்.
இதுகுறித்து அவர் கூறுகையில், “அவர்கள் திரும்புவது வரவேற்கத்தக்க செய்தி என்றாலும், இன்னும் சிறிது காலம் அவர்கள் இங்கிலாந்துக்கு வெளியே இருந்திருந்தால், அவர்களுக்கு மிகச் சிறந்த வரி பலன் கிடைத்திருக்கும்.
இங்கிலாந்தில் வசிக்காதவராக தொடர்ச்சியாக 10 வரி ஆண்டுகளை நிறைவு செய்திருந்தால், ஹாரி நாட்டிற்கு திரும்பிய பிறகு நான்கு ஆண்டுகளுக்கான வெளிநாட்டு வருமானம் மற்றும் ஆதாயங்கள் (FIG) வரி விலக்கை பெற்றிருக்க முடியும்.
இந்த சலுகையானது, சம்பந்தப்பட்ட காலத்தில் தகுதிவாய்ந்த வெளிநாட்டு வருமானம் மற்றும் முதலீட்டு ஆதாயங்களை இங்கிலாந்திற்கான வரி விதிப்பின்றி, இங்கிலாந்து நாட்டிற்குள் கொண்டு வந்திருக்க முடியும்.
மாறாக ஆறு ஆண்டுகளுக்கு பிறகு திரும்புவதன் மூலம், ஹாரி அந்த சலுகைகளை பெறும் தகுதியை இழக்க நேரிடும். இதன்மூலம், அவர் இங்கிலாந்திற்கு திரும்பிய பிறகு, தகுதிவாய்ந்த வெளிநாட்டு வருமானம் மற்றும் முதலீட்டு ஆதாயங்கள் இங்கிலாந்தின் வரிவிதிப்புக்கு உட்பட நேரிடலாம்.
மேலும், தம்பதியினர் நீண்ட காலமாக வெளிநாட்டில் வசித்து வந்ததால், அவர்களுக்கு கிடைக்கும் சில வாரிசுரிமை வரி சலுகைகளையும் இழக்க நேரிட வாய்ப்புள்ளது.
ஹாரி மற்றும் மேகனின் மொத்த சொத்து மதிப்பு சுமார் 570 கோடியாக (60 million dollar) உள்ளது. இங்கிலாந்தில் வாரிசுரிமை வரி 40 சதவீதம் வரை விதிக்கப்பட்டு வருகிறது. அதன்படி ஹாரியின் வெளிநாட்டு சொத்துக்களுக்கான வரி விதிப்பு குறிப்பிடத்தக்க நிதி விளைவுகளை ஏற்படுத்தக்கூடும்.
ஹாரி 10 ஆண்டுகளாக இங்கிலாந்துக்கு வெளியே இருந்திருந்தால், அவர் நாடு திரும்பிய பிறகு ஒரு குறிப்பிட்ட காலத்திற்கு அவருடைய இங்கிலாந்து அல்லாத சொத்துக்கள் வாரிசுரிமை வரியின் வரம்பிற்கு வெளியே இருந்திருக்கும்.
ஆனால் அவர்கள் இங்கிலாந்திற்கு வெளியே ஆறு ஆண்டுகள் இருந்ததால், மூலதன ஆதாயங்களுக்கான அந்நாட்டின் தற்காலிக குடியுரிமையற்றோர் விதிகளை அவர்கள் கடந்துவிட்டனர்.
மக்கள் தற்காலிகமாக இங்கிலாந்தை விட்டு வெளியேறி, வெளிநாட்டில் இருக்கும்போது ஆதாயங்களை ஈட்டி, வரி ஏய்ப்பு செய்வதற்காக சிறிது காலத்திற்கு பிறகு தாயகம் திரும்புவதை தடுக்கும் வகையில், இந்த விதிகள் வடிமைக்கப்பட்டுள்ளன.
ஐந்து ஆண்டுகளுக்குள் திரும்பும் தனிநபர்கள், வெளிநாட்டில் ஈட்டிய சில ஆதாயங்களுக்கு இங்கிலாந்தில் வரி விதிக்கப்பட வாய்ப்புள்ளது.
ஹாரி தம்பதியினர் இங்கிலாந்தில் வசிக்காத காலத்தில், அவர்கள் நெட்ஃபிளிக்ஸ் மற்றும் ஸ்பாட்டிஃபை ஒப்பந்தங்கள், ஆஸ் எவர் பிராண்ட் மூலம் கிடைத்த வருமானங்களுக்கு, அவர்கள் இங்கிலாந்தில் வருமான வரி தாக்கல் செய்யும்போது, அவை வரி விதிக்க உட்படுத்தப்படக்கூடாது.
ஹாரி அமெரிக்க குடியுரிமை பெற்றதாக தெரியவில்லை. இதனால் அவர் இங்கிலாந்துக்கு குடிபெயரும் போது, அமெரிக்க குடியுரிமை அடிப்படையிலான வரி விதிகளுக்கு அவர் உட்படமாட்டார்.
ஆனால் அமெரிக்காவில் பிறந்த மேகன் இங்கிலாந்துக்கு குடிபெயரும்போது, அமெரிக்க வரி கடமைகளை அவர் தொடர்ந்து செலுத்த வேண்டியிருக்கும்” என்று அவர் கூறினார்.