உலகம்

ஒரே நாளில் 25% உயர்ந்த விலை... இலங்கையில் ஒரு லிட்டர் பெட்ரோல் ரூ.398க்கு விற்பனை

இலங்கை அரசு ஒரே நாளில் ஒரு லிட்டர் சாதாரண பெட்ரோல் விலையை 81 ரூபாய் உயர்த்தியுள்ளது.

மாலை மலர்

கச்சா எண்ணெய் மற்றும் இயற்கை எரிவாயு வளமிக்க பகுதியான மேற்கு ஆசியாவில் போர் பதற்றம் நாளுக்கு நாள் அதிகரித்துவரும் நிலையில், இலங்கை இன்று ஒரேநாளில் பெட்ரோலின் விலையை 25% உயர்த்தியது.

ஒரேநாளில் ஒரு லிட்டர் சாதாரண பெட்ரோலின் விலை 317 ரூபாயிலிருந்து 398 ரூபாயாக உயர்த்தப்பட்டுள்ளது. டீசலின் விலை 79 ரூபாய் அதிகரித்து 382 ரூபாயாக உயர்ந்துள்ளது.

"சமீபத்திய விலை உயர்வின் மூலம் எரிபொருள் பயன்பாட்டில் 15% முதல் 20% வரை குறைப்பை அடைய முடியும் என நம்புகிறோம்," என்று இலங்கை பெட்ரோலியக் கூட்டுத்தாபன அதிகாரிகள் தெரிவித்துள்ளனர்.

ஏற்கனவே எரிபொருள் தட்டுப்பாட்டால் புதன்கிழமையையும் பொதுவிடுமுறை நாளாக இலங்கை அறிவித்துள்ளது. மேலும் சாத்தியமான இடங்களில் வீட்டிலிருந்தே வேலைசெய்யுமாறும் நிறுவனங்களுக்கு அறிவுறுத்தப்பட்டுள்ளது.

இலங்கை தனது எண்ணெய் தேவைகள் அனைத்தையும் இறக்குமதி செய்வதுடன், மின்சார உற்பத்திக்காக நிலக்கரியையும் கொள்முதல் செய்கிறது.

இலங்கை சுத்திகரிக்கப்பட்ட பெட்ரோலியப் பொருட்களை சிங்கப்பூர், மலேசியா மற்றும் தென் கொரியாவிலிருந்து வாங்குகிறது; அதேவேளை, ஈரானால் கட்டப்பட்ட அதன் சுத்திகரிப்பு நிலையத்திற்கான கச்சா எண்ணெயையும் மேற்கு ஆசியாவிலிருந்து பெறுகிறது

மேலும் மத்திய கிழக்கில் தற்போது நடைபெற்றுவரும் போர், 2022-ஆம் ஆண்டின் பொருளாதார வீழ்ச்சியிலிருந்து மீண்டு வருவதற்கான அரசாங்கத்தின் முயற்சிகளைப் கடுமையாகப் பாதிக்கக்கூடும் எனவும் தெரிவித்துள்ளது.

2022-ஆம் ஆண்டில், இலங்கையிடம் அந்நியச் செலாவணி தீர்ந்துபோனதை அடுத்து, அந்நாடு தனது 46 பில்லியன் டாலர் வெளிநாட்டுக் கடனைத் திருப்பிச் செலுத்தத் தவறியது. அதன் பின்னர், கொழும்பு சர்வதேச நாணய நிதியத்திடம் இருந்து 2.9 பில்லியன் டாலர் மீட்பு நிதியைப் பெற்றுள்ளது.