வங்கதேசத்தில் 35 ஆண்டுகளுக்குப் பிறகு நாளை வாக்கெடுப்பு முறைமூலம் குடியரசுத் தலைவர் தேர்தல் நடைபெற உள்ளது. பிற்பகல் 2 மணி முதல் மாலை 5 மணி வரை தேர்தல் நடைபெற உள்ளது.
இந்த வரலாற்றுச் சிறப்புமிக்க தேர்தலை நேர்மையாகவும், அழகாகவும், ஒழுங்காகவும் நடத்துவதற்கான அனைத்துத் தேவையான ஏற்பாடுகளும் நிறைவடைந்துவிட்டதாக அந்நாட்டின் தலைமைத் தேர்தல் ஆணையர் ஏ.எம்.எம். நசீர் உத்தின் தெரிவித்துள்ளார்.
‘எங்கள் தயாரிப்புகளில் எந்தக் குறையும் இல்லை. இந்தத் தேர்தலில் சம்பந்தப்பட்ட அனைவரிடமிருந்தும் எங்களுக்கு ஒத்துழைப்பு கிடைத்து வருகிறது. எங்களால் ஒரு சிறப்பான தேர்தலை நடத்த முடியும் என்று நாங்கள் நம்புகிறோம்,” என்றும் தெரிவித்துள்ளார்.
வங்கதேசத்தின் 349 எம்.பி.க்களும் நாளை வாக்களிப்பார்கள் என்றும், வாக்குப்பதிவு முடிந்தவுடன் வாக்கு எண்ணிக்கை தொடங்கும், அதன் பிறகு முடிவுகள் அறிவிக்கப்படும் என தெரிவிக்கப்பட்டுள்ளது.
வாக்குப்பதிவு தொடர்ந்து நேரலையில் ஒளிப்பரப்பப்படும் எனவும் நசீர் உத்தின் தெரிவித்துள்ளார்.
சமீபத்தில் வங்கதேச அதிபர் முகமது ஷஹாபுதீன் உடல் நலக்குறைவைக் காரணம் காட்டி தனது பதவியை ராஜினாமா செய்தநிலையில், தற்போது தேர்தல் நடைபெறுகிறது.
கடந்த 1991 ஆம் ஆண்டிற்குப் பிறகு நடைபெற்ற அனைத்து அதிபர் தேர்தல்களிலும் வேட்பாளர்கள் போட்டியின்றி ஒருமனதாகவே தேர்வு செய்யப்பட்டு வந்தனர். தற்போது 35 ஆண்டுகள் கழித்து, இரண்டு வேட்பாளர்கள் களத்தில் இருப்பதால் முதன்முறையாக வாக்கெடுப்பு நடத்தப்படுகிறது.
தற்போது பிரதமர் தாரிக் ரஹ்மான் தலைமையிலான ஆளும் பங்களாதேஷ் தேசியவாத கட்சிக்கு நாடாளுமன்றத்தில் மூன்றில் இரண்டு பங்கு பெரும்பான்மை இடங்கள் உள்ளன. எனவே, அவர்களின் அதிகாரப்பூர்வ வேட்பாளரான மிர்சா ஃபக்ருல் இஸ்லாம் ஆலம்கீர் புதிய அதிபராக வெற்றிப் பெற அதிக வாய்ப்புகள் உள்ளதாகக் கருதப்படுகிறது.