ஈரான் மீது இன்றிரவு மிகக் கொடூர தாக்குதல் நடத்தப்படும் என்று அமெரிக்க அதிபர் டொனா்டு டிரம்ப் எச்சரிக்கை விடுத்த நிலையில், தற்போது தாக்குதலை ரத்து செய்வதாக அறிவித்துள்ளார். போரைத் தீவிரப்படுத்துவதாக அச்சுறுத்திய சில மணி நேரங்களிலேயே, ஈரான் மீதான புதிய ராணுவ தாக்குதல்களை ரத்து செய்துள்ளதாக அதிபர் டொனால்டு டிரம்ப் தெரிவித்தார்.
"இஸ்லாமிய குடியரசான ஈரானுடனான பேச்சுவார்த்தைகள் அந்நாட்டின் உயர்மட்ட தலைவர்களின் கவனத்திற்கு கொண்டு செல்லப்பட்டு, அவர்களால் அங்கீகரிக்கப்பட்டதன் அடிப்படையில்" இந்த முடிவு எடுக்கப்பட்டதாக அதிபர் டிரம்ப் தனது சமூக ஊடகப் பதிவில் குறிப்பிட்டார்.
அமெரிக்கா, இஸ்ரேல் மற்றும் பிராந்தியத்தில் உள்ள பிற நட்பு நாடுகளால் "கொள்கை அளவிலும் விரிவான விவரங்கள் அடிப்படையிலும் பேச்சுவார்த்தைகளும் இறுதி அம்சங்களும்" அங்கீகரிக்கப்பட்டுள்ளதாக குறிப்பிட்ட டிரம்ப், பலவீனமான நிலையில் உள்ள போர் நிறுத்தத்தை நீட்டிப்பதற்கான பேச்சுவார்த்தைகளில் முன்னேற்றம் ஏற்பட்டுள்ளதையும் சுட்டிக்காட்டினார். இருப்பினும், இது குறித்த கூடுதல் விவரங்களை அவர் வெளியிடவில்லை.
கடந்த சில வாரங்களாக பல சந்தர்ப்பங்களில், மோதலில் ஈடுபட்டுள்ள தரப்பினர் ஒரு ஒப்பந்தத்தை எட்டும் நிலைக்கு மிக அருகில் வந்திருப்பதாக டிரம்ப் கூறி வந்துள்ளார். ஆனால், இதுவரை எந்த ஒப்பந்தமும் நடைமுறைக்கு வரவில்லை.