மேற்கு கொலம்பியாவில் உள்ளூர் நேரப்படி காலை 7:34 மணிக்கு, 7.4 ரிக்டர் அளவிலான நிலநடுக்கம் பதிவானதாக அமெரிக்க புவியியல் ஆய்வு மையம் தெரிவித்துள்ளது.
கொலம்பியாவின் பசிபிக் கடலோரப் பகுதியான சோகோ மாகாணத்தில் 7.4 ரிக்டர் அளவில் சக்திவாய்ந்த நிலநடுக்கம் ஏற்பட்டுள்ளது. இந்த நிலநடுக்கம் சான் ஜோஸ் டெல் பால்மார் என்ற கிராமத்திற்கு அருகில், சுமார் 107 கிலோமீட்டர் ஆழத்தில் மையம் கொண்டிருந்ததாகக் கொலம்பியா புவியியல் ஆய்வு மையம் தெரிவித்துள்ளது.
நிலநடுக்கம் ஏற்பட்ட சோகோ மாகாணத்தின் தலைநகரான கிப்டோ மற்றும் பிற பகுதிகளில் உள்ள கட்டடங்கள் பலத்த சேதமடைந்துள்ளன. பலர் காயமடைந்துள்ளதாக முதற்கட்டத் தகவல்கள் தெரிவிக்கின்றன.
சாண்டியாகோ டி கலி நகரில் குறைந்தது 20 கட்டடங்கள் இடிந்து விழுந்துள்ளதாகவும், இடிபாடுகளுக்குள் சிக்கியவர்களை மீட்கும் பணிகள் தீவிரமாக நடந்து வருவதாகவும் அந்நகர மேயர் தெரிவித்துள்ளார்.
இந்த நிலநடுக்கத்தின் அதிர்வுகள் நாட்டின் தலைநகரான பொகோட்டா மட்டுமன்றி, அண்டை நாடுகளான ஈக்வடார் மற்றும் வெனிசுலா வரையிலும் உணரப்பட்டுள்ளது. பொகோட்டாவில் உள்ள உயரமான கட்டடங்களில் இருந்து மக்கள் அலறியடித்துக்கொண்டு தெருக்களில் தஞ்சமடைந்தனர்.