உலகம்

போலந்தில் உச்சகட்ட அரசியல் மோதல்: பாதியில் பயணத்தை ரத்து செய்து திரும்பிய அதிபர்!

நீதிமன்ற வளாகத்திற்குள் போலீசார் மீது பொருட்கள் வீசப்பட்டு மோதல் வெடித்ததில் - 3 பேர் கைது.

ஐரோப்பிய நாடான போலந்தில் உள்ள நீதிமன்றத்தின் மீதான கட்டுப்பாட்டை யார் கையில் வைத்திருப்பது என்ற விவகாரத்தில், தற்போதைய அரசுக்கும் எதிர்க்கட்சிக்கும் இடையே வெடித்த மோதல் நள்ளிரவில் பெரும் அரசியல் நெருக்கடியாக மாறியுள்ளது.

நீதிமன்றம் போலீஸ் பாதுகாப்பு வளையத்திற்குள் கொண்டு வரப்பட்ட நிலையில், வெளிநாட்டுப் பயணத்தை பாதியிலேயே ரத்து செய்துவிட்டு அதிபர் அவசரமாகத் திரும்பியுள்ளார்.

என்ன நடந்தது?

போலந்தின் மிக உயரிய நீதிமன்றமான அரசியலமைப்பு நீதிமன்றத்தின் தலைமை நீதிபதி போக்டன் ஸ்வீச்கோவ்ஸ்கி மற்றும் துணைத் தலைவர் பார்ட்லோமீஜ் சோசான்ஸ்கி ஆகியோரை தற்காலிகமாகப் பணிநீக்கம் செய்வதாக நீதிமன்ற இணையதளத்தில் ஒரு அறிவிப்பு வெளியானது.

இந்த அறிவிப்பு வெளியான சில நிமிடங்களிலேயே அந்த இணையதளம் முடக்கப்பட்டது.

இதனைத் தொடர்ந்து, நீதிமன்ற வளாகத்திற்கு வெளியே நூற்றுக்கணக்கான எதிர்க்கட்சி ஆதரவாளர்கள் குவிந்து போராட்டத்தில் ஈடுபட்டனர். சிலர் பாதுகாப்பு வேலிகளைத் தாண்டி உள்ளே நுழைய முயன்றதால், கலகத் தடுப்பு போலீசார் குவிக்கப்பட்டனர். போலீசார் மீது பொருள்கள் வீசப்பட்டதால், அங்கு பெரும் தடியடி மற்றும் மோதல் வெடித்தது. இந்த வன்முறை தொடர்பாக 3 பேர் கைது செய்யப்பட்டுள்ளனர்.

நடுவானில் விமானத்தைத் திருப்பிய அதிபர்

இந்த நள்ளிரவு பரபரப்புக்கு மத்தியில், செனகல் நாட்டுக்கு அரசுமுறைப் பயணமாகச் சென்றுகொண்டிருந்த போலந்து அதிபர் கரோல் நவ்ரோக்கி, நாட்டின் நிலைமையைக் கருத்தில் கொண்டு தனது விமானத்தை நடுவானிலேயே திருப்பி வார்சாவுக்கு அவசரமாகத் திரும்பினார்.'

இப்படிப்பட்ட ஒரு இக்கட்டான சூழ்நிலையில் அதிபர் போலந்தில்தான் இருக்க வேண்டும். எனது செனகல் பயணத்தை ரத்து செய்துவிட்டு நான் தாயகம் திரும்புகிறேன்' என்று அதிபர் கரோல் நவ்ரோக்கி தனது எக்ஸ் தளத்தில் பதிவிட்டார்.

வார்சா திரும்பிய அதிபர், நள்ளிரவில் போலீஸ் தடையை மீறி நீதிமன்ற வளாகத்திற்குள் நுழைந்து, அரசுக்கு ஆதரவான புதிய தற்காலிக நீதிபதிகளின் நியமனம் செல்லாது என முழக்கமிட்டார்.

பின்னணி என்ன?

போலந்தில் கடந்த 2015 முதல் 2023 வரை தீவிர வலதுசாரிக் கொள்கை கொண்ட சட்டம் மற்றும் நீதி கட்சி ஆட்சியில் இருந்தது. அப்போது நீதிமன்றங்களில் தங்களுக்குச் சாதகமான நீதிபதிகளை அக்கட்சி நியமித்ததாக ஐரோப்பிய ஒன்றியம் குற்றம் சாட்டியது.

ஆனால், 2023-ல் ஐரோப்பிய ஒன்றிய ஆதரவாளரான டொனால்ட் டஸ்க் பிரதமராகப் பொறுப்பேற்றார். அவர் நீதிமன்றங்களை பி.ஐ.எஸ் கட்சியின் பிடியிலிருந்து மீட்டு, சட்டத்தின் ஆட்சியை நிலைநிறுத்தப் போவதாக உறுதியளித்தார்.

தற்போது நாடாளுமன்றத்தால் தேர்ந்தெடுக்கப்பட்ட புதிய நீதிபதிகளைப் பணியில் அமரவிடாமல் தலைமை நீதிபதி போக்டன் தடுத்ததாகக் கூறி, நீதித்துறை அமைச்சகம் அவர் மீது குற்றவியல் நடவடிக்கை எடுக்க முயன்றதே இந்த மோதலுக்கு முக்கியக் காரணம்.

இரு தரப்பு வாதங்கள்: "ஆட்சி கவிழ்ப்புச் சதி"

நீதிமன்ற தலைமை அரசாங்கத்தின் இந்த நடவடிக்கை சட்டவிரோதமானது என்றும், நீதிமன்றத்தைக் கைப்பற்ற நடக்கும் 'ஆட்சி கவிழ்ப்புச் சதி' என்றும் குற்றம் சாட்டியுள்ளது.

பிரதமர் டொனால்ட் டஸ்க்: "ஆண்டுகாலமாக பி.ஐ.எஸ் கட்சி செய்த சட்டமீறல்களைத் திருத்தி, சட்டத்தின் ஆட்சியை மீட்டெடுப்பது எங்களது கடமை. இது சவாலான, சில நேரங்களில் வலிமிகுந்த செயல்முறைதான். ஆனால் இதைத் தவிர வேறு வழியில்லை" என்று பிரதமர் டொனால்ட் டஸ்க் எக்ஸ் தளத்தில் நியாயப்படுத்தியுள்ளார்.

முன்னாள் நீதித்துறை அமைச்சர் இச்சம்பவத்தை "அரசியலமைப்பு ஒழுங்கின் மீதான கிரிமினல் தாக்குதல்" என்று எதிர்க்கட்சி கண்டனம் தெரிவித்துள்ளது.

தற்போதைய நிலை

நீதிமன்றம் முழுமையாகப் போலீஸ் கட்டுப்பாட்டில் உள்ளது. போலந்து நாட்டின் இந்த உச்சகட்ட அரசியல் மற்றும் அரசியலமைப்புச் சட்ட நெருக்கடியை சர்வதேச நாடுகள் உன்னிப்பாகக் கவனித்து வருகின்றன.

அடுத்த ஆண்டு போலந்தில் நாடாளுமன்றத் தேர்தல் நடக்கவுள்ள நிலையில், இந்த மோதல் அங்கு பெரும் அரசியல் திருப்புமுனையாகக் கருதப்படுகிறது.

SCROLL FOR NEXT