POK  
உலகம்

POK பேரணி.. பாகிஸ்தான் பாதுகாப்பு படை நடத்திய தாக்குதலில் 30 பொதுமக்கள் பலி

இணையம் மற்றும் தொலைத்தொடர்பு சேவைகளை பாகிஸ்தான் அரசு முற்றிலும் முடக்கியுள்ளது.

பாகிஸ்தான் ஆக்கிரமிப்பு காஷ்மீரில் (PoK) கடந்த சில தினங்களில் பாகிஸ்தான் பாதுகாப்புப் படைகள் நடத்திய தாக்குதலில், 30க்கும் மேற்பட்ட பொதுமக்கள் உயிரிழந்துள்ளனர். 33க்கும் அதிகமானோர் படுகாயமடைந்துள்ளனர்.

பாகிஸ்தான் ஆக்கிரமிப்பு காஷ்மீர்

ஜம்மு காஷ்மீரின் 35 சதவீத நிலம் பாகிஸ்தான் வசம் உள்ளது. பாகிஸ்தான் ஆக்கிரமிப்பு காஷ்மீர் (POK) என அழைக்கப்படும் இந்த பகுதிக்கு தனி ஜனாதிபதி, பிரதமர், சட்டசபை உள்ளது.

இங்கு மக்களுக்கு எதிராக பாகிஸ்தான் அரசின் அடக்குமுறை, உரிமைகள் மறுப்பு, விலைவாசி உயர்வு உள்ளிட்டவற்றால் மக்கள் பெருமளவில் அதிருப்தியில் இருந்து வருகின்றனர்.

தேர்தல்

பாக்கிஸ்தான் ஆக்கிரமிப்பு காஷ்மீரில் ஜூலை 27 முதற்கட்ட சட்டசபைத் தேர்தல் நடைபெற்றது. ஜாயிண்ட் அவாமி ஆக்ஷன் கமிட்டி (JAAC) என்ற அமைப்பு மக்களை தேர்தலை புறக்கணிக்கச் செய்து போராட்டங்களை முன்னெடுத்து வருகிறது.

துப்பாக்கிச்சூடு

ஜூலை 27, 28,29 ஆகிய நாட்களில் ராவலாகோட்டில் இருந்து முசாபராபாத் நோக்கி JAAC அமைப்பின் தலைமையில் மக்கள் சென்ற பேரணியில் பாகிஸ்தான் பாதுகாப்புப் படைகள் துப்பாக்கிச்சூடு மற்றும் பிற வகைகளில் தாக்குதல் நடத்தின.

இந்த தாக்குதலில் 30க்கும் மேற்பட்ட அப்பாவிப் பொதுமக்கள் கொல்லப்பட்டனர். இதில் JAAC மத்தியக் குழு உறுப்பினர் உமர் நசீரின் சகோதரர் உஸ்மான் நசீர் என்பவரும் உயிரிழந்துள்ளார்.

மூடி மறைப்பு

பாகிஸ்தான் ராணுவத்தின் இந்த அத்துமீறல்கள் வெளியுலகிற்குத் தெரியாமல் இருக்க, PoK பகுதி முழுவதும் இணையம் மற்றும் தொலைத்தொடர்பு சேவைகளை பாகிஸ்தான் அரசு முற்றிலும் முடக்கியுள்ளது.

இந்த கொலைகள் குறித்து உடனடியாகச் சுதந்திரமான விசாரணை நடத்தக் கோரியும், வன்முறையை உடனடியாக நிறுத்தக் கோரியும் ஐக்கிய நாடுகள் மனித உரிமைகள் பேரவை மற்றும் சர்வதேச மனித உரிமை அமைப்புகளுக்கு JAAC அதிகாரப்பூர்வமாக முறையீடு செய்துள்ளது.

தேர்தல் புறக்கணிப்பு

மீர்பூர் பிரிவில் நடைபெற்ற முதல்கட்டத் தேர்தலில், மக்களின் தேர்தல் புறக்கணிப்பு காரணமாக 10 சதவீதத்திற்கும் குறைவான வாக்குகளே பதிவாகியுள்ளதாக அறிக்கைகள் தெரிவிக்கின்றன.

இருப்பினும், பாகிஸ்தான் அரசு 45% வாக்குப்பதிவு நடந்ததாகக் கணக்கு காட்டியுள்ளது.

இந்தியா காட்டம்

பாகிஸ்தான் ஆக்கிரமிப்பு காஷ்மீரில் பாகிஸ்தான் அரசு நடத்தும் இந்தத் தேர்தலானது, தனது சட்டவிரோத ஆக்கிரமிப்பையும், அப்பகுதியில் நடத்தும் மனித உரிமை மீறல்களையும் மூடி மறைப்பதற்காக நடத்தப்படும் ஒரு நாடகம் என இந்திய வெளியுறவுத் துறை அமைச்சகம் கடுமையாக விமர்சித்துள்ளது.