ரஷியாவின் சைபீரியாவில் இர்குட்ஸ்க் மாகாணத்தில் உள்ள பிளேக் தடுப்பு ஆராய்ச்சி மையத்தில் பாக்டீரியாக்கள் இருந்த டெஸ்ட் டியூப் தவறுதலாக கீழே விழுந்து உடைந்த நிலையில், தொற்று பரவியதால் பெண் ஆராய்ச்சியாளருக்கு நிமோனியா காய்ச்சல் ஏற்பட்டு உயிரிழந்தார்.
இதனால் அந்த மையத்தில் பணியாற்றியவர்கள் மற்றும் பெண் ஆராய்ச்சியாளருக்கு சிகிச்சை அளித்த டாக்டர்கள், நர்சுகள் என 200 பேர் தனிமைப்படுத்தப்பட்டு கண்காணிக்கப்பட்டு வருகிறார்கள்.
இதன் காரணமாக ரஷியாவில் பிளேக் நோய் பரவிவருவதாக பரபரப்பு ஏற்பட்டுள்ளது. இந்த நிலையில் பிளேக் நோய் பரவல் தொடர்பாக ரஷிய அதிபர் புதினுடன் விரைவில் பேச உள்ளதாக அமெரிக்க அதிபர் டிரம்ப் தெரிவித்து உள்ளது.
இதுதொடர்பாக அவர் கூறுகையில்,"ரஷியாவின் சைபீரியாவில் உள்ள ஒரு ஆராய்ச்சி நிறுவனத்தில் பிளேக் பாதிப்பு இருக்கலாம் என்பது குறித்து விவாதிக்க, ரஷிய அதிபர் புதினுடன் தொலைபேசியில் பேச திட்டமிட்டு உள்ளேன். இந்த விவகாரம் குறித்து அமெரிக்க உளவுத்துறை மிக ஆழமான விவாதங்களில் ஈடுபட்டுள்ளது.
இதுகுறித்து அனேகமாக நாளை அறிக்கை வெளியிடப்படலாம்” என்றார்.
இதற்கிடையே ரஷியாவில் உள்ள அமெரிக்கர்கள் அங்கிருந்து வெளியேறுமாறு மாஸ்கோவில் உள்ள அமெரிக்க தூதரகம் அறிவுறுத்தி உள்ளது.
மேலும், அமெரிக்க வெளியுறவுத்துறை கூறும்போது," ரஷியாவில் தற்போதுள்ள அமெரிக்கக் குடிமக்கள் உடனடியாக வெளியேற வேண்டும் என்றும், தவறான முறையில் தடுத்து வைக்கப்படும் அபாயம் மற்றும் பாதுகாப்பு கவலைகள் காரணமாக, அந்நாட்டிற்கு பயணம் செய்ய வேண்டாம் என்றும் தெரிவித்து உள்ளது.