ஐக்கிய அரபு அமீரகத்தின் துபாயிலிருந்து, இஸ்ரேலின் டெல் அவிவ் நோக்கிச் சென்றுகொண்டிருந்த ஃப்ளைதுபாய் விமானத்தில் விமானிகள் திடீரென தாக்கிக் கொண்ட சம்பவம் பெரும் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.
பயணத்தின்போது ஒரு விமானி, மற்றொரு விமானியைக் கத்தியால் தாக்கியதால், விமானம் திடீரென கட்டுப்பாட்டை இழந்து, ஒரே நிமிடத்தில் 17,000 அடி கீழே செங்குத்தாக சரிந்தது.
இது விமானத்தில் இருந்த பயணிகளிடையே பெரும் அச்சத்தை ஏற்படுத்த அவர்கள் சேர்ந்து விமானிகளுக்கு இடையேயான மோதலை தடுத்துள்ளனர். பின்னர் விமான சவுதி அரேபியாவில் தரையிறக்கப்பட்டுள்ளது.
இதனைத்தொடர்ந்து ஒரு விமானி, மற்றொரு விமானியைக் கத்தியால் குத்தியதுடன், விமானத்தை மோதச் செய்யவும் முயன்றதாக இஸ்ரேலியப் பிரதமர் பெஞ்சமின் நெதன்யாகு பரபரப்பு குற்றச்சாட்டை முன்வைத்துள்ளார்.
இச்சம்பவம் தற்போது பெரும் பரபரப்பை ஏற்படுத்தியுள்ள நிலையில், தற்போதுவரை கிடைத்துள்ள தகவல்களின்படி, இதன் முழுவிவரம் குறித்து காண்போம்.
ஃப்ளைதுபாயின் FZ1073 என்ற பயணிகள் விமானம் இன்று அதிகாலை 03:05 மணிக்கு துபாய் சர்வதேச விமான நிலையத்தில் இருந்து இஸ்ரேலின் டெல் அவிவிற்கு புறப்பட்டுள்ளது. விமானத்தில் சுமார் 180 பயணிகள் இருந்ததாகவும், பெரும்பாலானோர் இஸ்ரேலியர்கள் எனவும் கூறப்படுகிறது.
புறப்பட்ட சிறிது நேரத்திலேயே, ஏதாவது பிரச்னை என்றால் விமானத்தில் இருந்து கொடுக்கப்பட்டும் ‘Squawk 7700’ எனப்படும் பொதுவான அவசர நிலைக்கான சிக்னல் விமானத்தில் இருந்து கொடுக்கப்பட்டுள்ளது.
இந்த சமிஞ்சை கொடுக்கப்படுவதற்கு முன்பே, 05:21 மணியளவில் ஏறத்தாழ 34,000 அடி உயரத்தில் பறந்துக் கொண்டிருந்த விமானம், இரண்டு நிமிடங்களுக்கும் குறைவான நேரத்தில் 17,000 அடிக்கும் அதிகமாக கீழே செங்குத்தாக இறங்கியுள்ளது.
இது பயணிகளை பதற்றமடைய செய்துள்ளது. பின்னர்தான் எச்சரிக்கை சமிக்ஞை விமானத்தில் இருந்து கொடுக்கப்பட்டுள்ளது. பின்னர், விமானக் கடத்தலைப் புகாரளிக்கும் வகையில் அதனை ஸ்குவாக் 7500 குறியீட்டிற்கு மாற்றியது.
இதனிடையே விமானத்தின் முன்பகுதியில் சத்தங்களையும், விமானிகளுக்கு இடையேயான வாக்குவாதத்தையும் பயணிகள் கேட்டுள்ளனர். ஜோர்டானில் பறந்துக் கொண்டிருந்தபோது பயணிகள் இந்த சத்தத்தை கேட்டுள்ளனர்.
இதனைத்தொடர்ந்து ஒரு பயணியும், விமானத்தில் பணியில் இருந்த ஒரு விமானப் பணியாளரும் இணைந்து விமான அறைக்குள் புகுந்து, தலைமை விமானியை தாக்கிய மற்றொரு விமானியை போராடி தடுத்துள்ளனர்.
தொடர்ந்து அதிர்ஷ்டவசமாக, அதே விமானத்தில் பயணித்துக்கொண்டிருந்த மாற்று விமானிகள் உடனடியாக காக்பிட்டுக்கு வந்து விமானத்தின் கட்டுப்பாட்டைத் தங்கள் கையில் எடுத்துள்ளனர்.
இதனைத்தொடர்ந்து சவுதி அரேபியாவின் வடகிழக்குப் பகுதியில் உள்ள தபூக் விமான நிலையத்தில் காலை 06:58 மணிக்கு விமானம் தரையிறக்கப்பட்டுள்ளது.
தரையிறங்கலைத் தொடர்ந்து வன்முறையில் ஈடுபட்ட விமானியை சவுதி அரேபிய அதிகாரிகள் உடனடியாக கைது செய்து விசாரணைக்கு அழைத்துச் சென்றனர். இந்தத் தாக்குதலில் காயமடைந்த தலைமை விமானியையும், மற்றொரு விமானியும் மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டுள்ளனர்.
எச்சரிக்கை சமிஞ்சை கிடைத்த சிறிது நேரத்திலேயே, இஸ்ரேலிய மற்றும் சவுதி அரேபிய விமானப் படைகள், போர் விமானங்களை அனுப்பியுள்ளன. அதே நேரத்தில் இஸ்ரேல் பிரதமர் நெதன்யாகு அவசர ஆலோசனைகளையும் நடத்தியுள்ளார்.
தொடர்ந்து இஸ்ரேல் அரசு இந்த சம்பவத்தை பயங்கரவாத தாக்குதல் முயற்சியாக கருதி விசாரணை நடத்தி வருகிறது. மேலும் இஸ்ரேல் பயணிகளை தாய்நாடு அழைத்து வருவதற்கான முயற்சிகளை மேற்கொண்டு வருவதாகவும் இஸ்ரேல் பிரதமர் அலுவலகம் தெரிவித்தது.
இந்நிலையில் இந்த சம்பவம் திட்டமிட்டு செய்யப்பட்டதாக பிரதமர் பெஞ்சமின் நெதன்யாகு குற்றம் சாட்டியுள்ளார்.
விமானத்தில் இருந்தவர்களில் பெரும்பாலானோர் இஸ்ரேலியர்கள் என்றும், இதனால் விமானத்தை மோத செய்யவேண்டும் என்பதை நோக்கமாக கொண்டு இந்த சம்பவம் அரங்கேற்றப்பட்டதாக அவர் குற்றம் சாட்டியுள்ளார்.
“விமானத்தில் இருந்த பயணிகள் அனைவரும் ஏறக்குறைய இஸ்ரேலியர்களே. விமானம் நாட்டை நெருங்கிக்கொண்டிருந்தபோது, விமானி ஒருவரால் மற்றொரு விமானி கத்தியால் குத்தப்பட்டார்; மேலும், விமானத்தில் இருந்த அனைவருடனும் சேர்த்து விமானத்தை மோதி விபத்துக்குள்ளாக்க அவர் முயன்றதாகத் தெரிகிறது.
நான் இஸ்ரேலியப் பயணி ஒருவரிடம் பேசினேன். விமானம் சுழன்று கீழ்நோக்கிப் பாயத் தொடங்கியதாக அவர் என்னிடம் கூறினார்.
எப்படியோ, விமானக் குழுவைச் சேர்ந்த ஒருவருடன் இணைந்து காக்பிட் பகுதிக்குள் நுழைந்ததாகவும், விமானத்தின் அமைப்புகளைச் சீர்குலைக்க முயன்ற அந்த விமானியைத் தாங்கள் இருவரும் இணைந்து கட்டுப்படுத்தியதாகவும் அவர் தெரிவித்தார். விமானத்தில் இருந்த மற்றொரு பணியாளர் காக்பிட்டிற்குள் நுழைந்து விமானத்தைச் சீரான நிலைக்குக் கொண்டுவந்தார்.
சிறப்பான சமயோசித புத்தியையும், துணிச்சலையும் வெளிப்படுத்திய அந்த நாயகர்களை நான் பாராட்டுகிறேன். அவர்கள் பல உயிர்களைக் காப்பாற்றினர்; ஒரு பெரும் பேரழிவைத் தடுத்தனர்.
விமானம் சவுதி அரேபியாவின் தபூக் விமான நிலையத்தில் பாதுகாப்பாகத் தரையிறங்கியது. பயணிகள் அனைவரும் ஆபத்திலிருந்து மீண்டுவிட்டனர். கத்தியால் குத்திய விமானி கைது செய்யப்பட்டு, தற்போது சவுதி அதிகாரிகளால் விசாரிக்கப்பட்டு வருகிறார்.
கூடுதல் அச்சுறுத்தல்கள் ஏதேனும் ஏற்படின் அதை எதிர்கொள்ளத் தயாராக இருக்குமாறு பாதுகாப்புப் பிரிவினருக்கு நான் உத்தரவிட்டுள்ளேன்.
நாங்கள் தொடர்ந்து நிலைமையை கண்காணித்து வருகிறோம். சூழலைப் பொறுத்து தொடர்ந்து தகவல்களை தெரிவிப்போம்” என நெதன்யாகு தெரிவித்துள்ளார்.
தலைமை விமானி இந்தியாவைச் சேர்ந்தவர் என தற்போது தகவல்கள் வெளியாகி உள்ளன. கத்தியால் குத்தப்பட்ட ஃப்ளைதுபாய் விமானி ஸ்மித் மச்சார் இதற்கு ஸ்பைஸ்ஜெட் நிறுவனத்தில் பணியாற்றியவர் என்றும் தகவல் வெளியாகி உள்ளது. தாக்குதலில் ஈடுபட்ட இணை விமானி ஓமன் நாட்டைச் சேர்ந்தவர் எனக் கூறப்படுகிறது.
கத்தியால் குத்தியது மட்டுமின்றி, இணை விமானி விமானத்தின் கட்டுப்பாட்டு அமைப்புகளைச் செயலிழக்கச் செய்து, விமானத்தை கீழே மோத செய்ய முயன்றாகவும் கூறப்படுகிறது.
இதனால் இது உண்மையிலேயே நெதன்யாகு குறிப்பிட்டவாறு பயங்கரவாத தாக்குதல் முயற்சியா அல்லது விமானிகள் இருவருக்கும் இடையேயான முன்விரோதம் அல்லது சண்டையால் ஏற்பட்ட மோதலா என தற்போது கேள்வி எழுந்துள்ளது.
இருப்பினும் இந்த சம்பவத்திற்கு பின் இருக்கும் முழுமையான காரணம் இன்னும் தெரிய வரவில்லை என ஃபிளைதுபாய் நிறுவனம் தெரிவித்துள்ளது.
இந்தச் சம்பவம் நடந்ததற்கான அடிப்படை காரணங்களோ அல்லது பின்னணி நோக்கங்களோ இன்னும் கண்டறியப்படவில்லை. இது தற்போதைய சூழலில் முறையான விசாரணைக்கு உட்படுத்தப்பட்டுள்ளது என தெரிவித்துள்ளது.
உண்மை என்னவென்று அதிகாரிகள் கண்டறியும் வரை, இந்த விவகாரத்தில் யாரும் முன்கூட்டியே வதந்திகளையோ அல்லது யூகங்களையோ பரப்ப வேண்டாம் என்றும் கேட்டுக்கொண்டுள்ளது.
மேலும் விமானத்தில் பயணித்த அனைத்து பயணிகளும், ஊழியர்களும் பாதுகாப்பாக உள்ளனர் எனவும் உறுதிப்படுத்தியுள்ளது. இந்தச் சம்பவத்தால் ஃப்ளைதுபாய் நிறுவனத்தின் மற்ற விமானச் சேவைகள் எதற்கும் எந்தப் பாதிப்பும் ஏற்படவில்லை என்றும் தெளிவுபடுத்தியுள்ளது.