உலகம்

விண்வெளியில் மிதந்த 'பிகாச்சு' பொம்மை: சுபான்ஷு சுக்லா உட்பட விண்வெளி வீரர்கள் பொம்மைகளை எடுத்து செல்வது ஏன்?

முதன்முதலாக ஸ்லிங்கி , யோ-யோ , பேடில் பால் மற்றும் பொம்மை கார் ஆகியவை விண்வெளிக்கு எடுத்து செல்லப்பட்டது.

சர்வதேச விண்வெளி நிலையத்தில் அழகான 'பிகாச்சு' பொம்மை ஒன்று காற்றில் மிதந்து விளையாடும் நெகிழ்ச்சியான வீடியோவை ஐரோப்பிய விண்வெளி முகமை பகிர்ந்துள்ளது.

இது சமூக வலைதளங்களில் வைரலாகி வரும் வேளையில், விண்வெளி வீரர்கள் தங்களின் பயணத்தின் போது ஏன் பொம்மைகளை எடுத்துச் செல்கிறார்கள் என்ற சுவாரசியமான அறிவியல் பின்னணி வெளிவந்துள்ளது.

இந்தியாவின் முன்னணி விண்வெளி வீரரான சுபான்ஷு சுக்லா உட்பட பல விண்வெளி வீரர்கள் இந்த நீண்ட கால விண்வெளி மரபைத் தொடர்ந்து பின்பற்றி வருகின்றனர்.

விண்வெளிக்கு பொம்மைகளை எடுத்துச் செல்வது ஏன்?

விண்வெளி வீரர்கள் இந்த மென்மையான பொம்மைகளை வெறும் பொழுதுபோக்கிற்காகவோ அல்லது நினைவிற்காகவோ எடுத்துச் செல்வதில்லை. அவற்றுக்குப் பின்னால் ஒரு மிக முக்கியமான அறிவியல் காரணம் உள்ளது.

விண்கலமும் அதில் உள்ள வீரர்களும் விண்வெளியை அடைந்து, புவியீர்ப்பு விசை இல்லாத நிலையை எட்டிவிட்டனர் என்பதைத் தங்களுக்குள் காட்சிப்பூர்வமாக உறுதிப்படுத்திக் கொள்ள இந்த மென்மையான பொம்மைகள் உதவுகின்றன.

விண்கலம் புவியீர்ப்பு விசையைத் தாண்டி விண்வெளியில் மிதக்கத் தொடங்கும் போது, இந்த பொம்மைகளும் காற்றில் மிதக்கத் தொடங்கும். இதைக் கொண்டு விண்வெளி வீரர்கள் தாங்கள் பாதுகாப்பாக விண்வெளியை அடைந்துவிட்டதை அறிந்துகொள்வர் என்று நாசா விளக்கியுள்ளது.

விண்வெளிக்குச் சென்ற 5 பிரபலமான மாஸ்காட் பொம்மைகள்

1. விண்வெளியில் பிகாச்சு - 2026

உலக விண்வெளி வாரத்தை கொண்டாடும் விதமாக, ESA மற்றும் போகிமான் நிறுவனம் இணைந்து இந்த பிகாச்சு பொம்மையை விண்வெளிக்கு அனுப்பின.

பிரெஞ்சு விண்வெளி வீராங்கனை சோஃபி அடெனோட் மேற்கொண்ட விண்வெளிப் பயணத்தின் ஒரு பகுதியாக, இந்த பொம்மை ஏப்ரல் 11 முதல் ஜூன் 17 வரை 67 நாட்கள் விண்வெளி சுற்றுப்பாதையில் கழித்தது.

எதிர்கால சந்ததியினருக்கு விண்வெளி ஆராய்ச்சியின் மீது ஆர்வத்தை ஏற்படுத்தவே இந்த முயற்சி என்று ESA தெரிவித்துள்ளது.

2. சுபான்ஷு சுக்லா எடுத்துச் சென்ற 'ஜாய்' - 2025

சர்வதேச விண்வெளி நிலையத்திற்குச் சென்ற இந்திய விண்வெளி வீரர் சுபான்ஷு சுக்லா, தன் பயணத்தின் போது 'ஜாய்' என்று பெயரிடப்பட்ட ஒரு அழகான அன்னப் பறவை பொம்மையைக் கொண்டு சென்றார்.

இது குறித்து விண்வெளியில் இருந்து நேரலையில் பேசிய அவர், 'இந்திய கலாச்சாரத்தில் அன்னப் பறவைக்கு மிக முக்கிய இடமுண்டு. அன்னம் என்பது ஞானத்தின் சின்னம். எதில் கவனம் செலுத்த வேண்டும், எதை தவிர்க்க வேண்டும் என்று பிரித்தறியும் குணம் அதற்கு உண்டு.

எனவே இது வெறும் Zero-G காட்டி மட்டுமல்ல, அதைத் தாண்டிய கலாச்சாரப் பெருமை' என்று குறிப்பிட்டார்.

3. ஸ்னூபி - 2019

'பீனட்ஸ்' காமிக்ஸ் கதைகளில் வரும் உலகப் புகழ்பெற்ற நாய் கதாபாத்திரமான ஸ்னூபி, விண்வெளிப் பயணங்களுடன் நீண்ட காலத் தொடர்பு கொண்டது. இது 2019-ஆம் ஆண்டில் சர்வதேச விண்வெளி நிலையத்திற்கு அனுப்பப்பட்டது.

4. பேபி யோடா - 2020

அமெரிக்கா மற்றும் ஜப்பானைச் சேர்ந்த நான்கு விண்வெளி வீரர்கள் 2020-ல் விண்கலத்தில் பயணித்த போது, ஸ்டார் வார்ஸ் கதைகளில் வரும் புகழ்பெற்ற 'பேபி யோடா' பொம்மையை தங்களுடன் கொண்டு சென்றனர்.

விண்வெளி நிலைய நேரலையின் போது விண்வெளி வீரர்களுடன் இந்த பொம்மையும் மிதந்து வந்து உலக ரசிகர்களைக் கவர்ந்தது.

5. ஓலாஃப் - 2014

டிஸ்னியின் புகழ்பெற்ற 'புரோசன்' திரைப்படத்தில் வரும் பனிமனிதன் கதாபாத்திரமான 'ஓலாஃப்' பொம்மை 2014-ல் சோயுஸ் விண்கலம் மூலம் விண்வெளிக்குச் சென்றது.

ரஷிய விண்வெளி வீரர் ஆண்டன் ஷ் கப்லெரோவின் 8 வயது மகள், தன் தந்தைக்கு ஒரு பாதுகாப்பு தாயத்தாக இருக்க வேண்டும் என்று இந்த பொம்மையைக் கொடுத்து அனுப்பியிருந்தார்.

விண்வெளிக்குச் சென்ற முதல் பொம்மைகள் எது?

இந்த மரபு 1985-லேயே தொடங்கிவிட்டது. 1985-ஆம் ஆண்டில் நாசாவின் 'டிஸ்கவரி' (Discovery - STS-51D) விண்கலப் பயணத்தின் போது, விண்வெளி வீரர்கள் முதன்முதலாக ஸ்லிங்கி , யோ-யோ , பேடில் பால் மற்றும் ஒரு சிறிய பொம்மை கார் ஆகியவற்றை விண்வெளிக்கு எடுத்துச் சென்றனர் என்பது குறிப்பிடத்தக்கது.

SCROLL FOR NEXT