பெரு நாட்டில், நாஸ்கா நகருக்கு அருகில் சுற்றுலாப் பயணிகளை ஏற்றிச் சென்ற விமானம் ஒன்று வயல்வெளியில் விழுந்து நொறுங்கியதில் 13 பேர் உயிரிழந்தனர்.
இந்த விபத்து குறித்து நாஸ்கா அதிகாரிகள் வெளியிட்ட செய்தியில், விபத்தில் சிக்கிய அந்த விமானம் சுற்றுலாப் பயணிகளை நாஸ்கா கோடுகளைச் சுற்றிப் பார்ப்பதற்காக அழைத்துச் சென்றது.
நாஸ்கா கோடுகள் என்பவை, நூற்றுக்கணக்கான ஆண்டுகளுக்கு முன்பு பெரு நாட்டில் உள்ள பழங்குடி மக்களால், பாலைவனத்தில் செதுக்கப்பட்ட விரிவான புவிக்கோட்டு படங்களின் தொகுப்பாகும்.
இந்தக் கோடுகள் விலங்குகளின் உருவங்களை உருவாக்குகின்றன. அவற்றை விமானங்கள் அல்லது கண்காணிப்பு கோபுரங்களில் இருந்து மட்டுமே முழுமையாக ரசிக்க முடியும்.
இந்த காட்சியை பார்ப்பதற்காக இகா நகரிலிருந்து விமானம் ஒன்று நேற்று புறப்பட்டது. இந்த விமானத்தில் 11 வெளிநாட்டு சுற்றுலாப் பயணிகளும், இரண்டு விமானப் பணியாளர்களும் இருந்தனர்.
இந்த விமானம் திடீரென வயல்வெளியில் விழுந்து விபத்துக்குள்ளானது. இதில் விபத்தில் விமானத்தில் இருந்த 13 பேரும் உயிரிழந்தனர்.
அந்த விமானத்தில் ஜெர்மானியை சேர்ந்த இரண்டு பேர்களும், ஸ்பெயினை சேர்ந்த இரண்டு பேர்களும் மற்றும் ஏழு இத்தாலி சுற்றுலாப் பயணிகளும் இருந்ததாக பெருவின் வர்த்தக மற்றும் சுற்றுலா அமைச்சகம் அறிக்கையில் தெரிவித்துள்ளது.
இந்த விபத்து குறித்து விமான நிறுவனம் இணையதளத்தில் வெளியிட்ட செய்தியில், கடந்த 14 ஆண்டுகளாக செஸ்னா கிராண்ட் கேரவன் விமானங்களைப் பயன்படுத்தி நாஸ்கா எல்லைக் கோடுகளின் மீது ரம்மியமான விமானப் பயணங்களை சுற்றுலா பயணிகளுக்கு வழங்கி வருகிறோம் என்று தெரிவித்துள்ளது.
இதையடுத்து விமான விபத்து ஏற்பட்ட காரணம் குறித்து பெரு அதிகாரிகள் விசாரணை நடத்தி வருகின்றனர்.