அமெரிக்கா-ஈரான் இடையேயான மத்திய கிழக்கு போரில் ஹார்முஸ் ஜலசந்தியில் கப்பல் போக்குவரத்து பாதிக்கப்பட்டது. தங்களது அனுமதியின்றி செல்லும் கப்பல்கள் மீது ஈரான் தாக்குதல் நடத்துகிறது.
அதேபோல் ஈரான் துறைமுகங்களுக்கு செல்லும் மற்றும் அங்கிருந்து வெளியேறும் கப்பல்களை அமெரிக்க கடற்படை தடுத்து வருகிறது. இதில் இந்திய மாலுமிகள் பயணிக்கும் கப்பல்கள் மீது தாக்குதல்கள் நடத்தப்பட்டன.
இந்தநிலையில் இந்திய மாலுமிகள் இருந்த கப்பல் மீது மீண்டும் தாக்குதல் நடத்தப்பட்டு உள்ளது. லைபீரிய நாட்டு கொடியுடன் எம்.டி. புஜைரா எனர்ஜி என்ற சரக்கு கப்பல், பாரசீக வளைகுடாவை கடந்து சென்று கொண்டிருந்தது.
அந்த கப்பலில் 6 இந்திய மாலுமிகள் உள்பட 18 பேர் இருந்தனர். அப்போது கப்பல் மீது திடீரென்று தாக்குதல் நடத்தப்பட்டது. இதில் கப்பல் சேதம் அடைந்தது. உடனே மீட்புக்குழுவினர் விரைந்து சென்று கப்பலில் இருந்த மாலுமிகளை பத்திரமாக மீட்டனர்.
இந்த தாக்குதலில் ஒரு இந்தியர் உள்பட 4 மாலுமிகள் காயம் அடைந்தனர். அவர்களுக்கு லேசான காயங்கள் ஏற்பட்டு உள்ளதாக அதிகாரிகள் தெரிவித்தனர்.
இதுதொடர்பாக மத்திய அமைச்சர் சர்பானந்த சோனோவால் தனது எக்ஸ் வலைதள பக்கத்தில் கூறும்போது, " தாக்குதலுக்குள்ளான கப்பலில் இருந்த இந்தியர்கள் உள்பட 18 பேரும் பாதுகாப்பாக உள்ளனர்.
நாங்கள் இந்தச் சூழலைத் தொடர்ந்து கண்காணித்து வருகிறோம். மாலுமிகளின் பாதுகாப்பு, மருத்துவ வசதிகள் மற்றும் நல்வாழ்வை உறுதிசெய்ய, கப்பல் நிர்வாக நிறுவனத்துடன் தொடர்ந்து தொடர்பில் இருக்கிறோம்" என்றார்.