கிட்டத்தட்ட 11 மாதங்களாக ஒத்திவைக்கப்பட்டிருந்த தீர்ப்பை வழங்க நீதிபதி மறுத்ததைக் கண்டித்து, பாகிஸ்தானின் ஹைதராபாத் நகரில் உள்ள நீதிமன்றத்தில் வழக்கறிஞர் ஒருவர் வியாழக்கிழமை தனது இருக்கைக்கு தீ வைத்ததாக அதிகாரிகள் தெரிவித்தனர்.
நவாப்ஷா தொடர்பான ஒரு நிலத்தகராறு வழக்கில், ஒத்திவைக்கப்பட்ட தீர்ப்பை வழங்க போவதில்லை என்று சிந்து உயர் நீதிமன்றத்தின் ஹைதராபாத் வட்டார அமர்வு நீதிபதி ஜவாத் அக்பர் சவானா கூறியதை தொடர்ந்து இந்த பரபரப்பான சம்பவம் நிகழ்ந்தது.
இந்த வழக்கில் ஒரு தரப்பின் சார்பில் ஆஜரான சிக்கந்தர் பட்டி, அந்த அறிவிப்பை தொடர்ந்து தனது அதிகாரப்பூர்வ நீதிமன்ற இருக்கைக்குத் தீ வைத்ததாக அதிகாரிகள் தெரிவித்தனர்.
"கடந்த 11 மாதங்களாகத் தீர்ப்பு நிலுவையில் உள்ள நிலையில், வழக்கறிஞர் சிக்கந்தர் பட்டி இன்று நீதிமன்றத்தில் இறுதியாகத் தனது பொறுமையை இழந்தார்," என்று ஹைதராபாத் உயர் நீதிமன்ற வழக்கறிஞர் சங்கத்தின் தலைவர் அயாஸ் துனியோ கூறினார்.
இந்தச் சம்பவம் குறித்து சங்கம் விசாரணை நடத்தும் என்று கூறிய அவர், நீதிபதி சவானா முன் பல ஒத்திவைக்கப்பட்ட தீர்ப்புகள் மாதக்கணக்கில் நிலுவையில் இருப்பதால் வழக்காடுபவர்கள் விரக்தியடைந்துள்ளதாகவும் மேலும் தெரிவித்தார்.
இந்த வழக்கில் பட்டியின் சொந்தக் குடும்பம் சம்பந்தப்பட்டிருந்ததாலும், இது நவாப்ஷாவில் பல ஆண்டுகளாக நிலுவையில் இருந்த ஒரு நிலத்தகராறு சம்பந்தப்பட்டிருந்ததாலும் அவர் குறிப்பாகக் கலக்கமடைந்திருந்தார் என்று நீதிமன்ற வட்டாரம் தெரிவித்தது.
சமீப நாட்களில் வழக்கறிஞர்கள் நீதிபதி சவானாவை அவரது அறையில் சந்தித்து, பல வழக்குகளில் ஒத்திவைக்கப்பட்ட தீர்ப்புகளை வழங்குவதைப் பரிசீலிக்குமாறு கோரிக்கை விடுத்ததாக துனியோ கூறினார்.
பாகிஸ்தான் நீதிமன்றங்களில் ஏற்படும் தாமதங்கள் மற்றும் தேங்கியிருக்கும் வழக்குகள் குறித்த கவலைகள் அதிகரித்து வரும் வேளையில் இந்தச் சம்பவம் நிகழ்ந்துள்ளது.
சமீபத்திய மாதங்களில், பல்வேறு பிரச்சினைகள் தொடர்பாக வழக்கறிஞர் அமைப்புகளுக்கும் சிந்து காவல்துறைக்கும் இடையே பதற்றம் நிலவி, அது போராட்டங்களுக்கும் மோதல்களுக்கும் வழிவகுத்ததாகவும் தகவல்கள் வெளியாகியுள்ளன.
இருப்பினும், நேற்று (வியாழக்கிழமை) நடந்த சம்பவம், பாகிஸ்தான் நீதிமன்றங்களில் உரிமையியல் மற்றும் குற்றவியல் வழக்குகளை தீர்ப்பதில் ஏற்படும் நீண்ட தாமதங்கள் குறித்து வழக்காடுபவர்கள் மற்றும் வழக்கறிஞர்களிடையே நிலவும் விரக்தியை மீண்டும் கவனத்திற்கு கொண்டுவந்துள்ளது.