உலகம்

பாகிஸ்தான்: பலுசிஸ்தானில் பயிற்சி காவலர்கள் 20 பேர் துப்பாக்கி முனையில் கடத்தப்பட்டதால் பரபரப்பு

சரக்குகள் ஏற்றப்பட்ட லாரிகளுக்கு தீ வைத்ததாகத் தகவல்கள் தெரிவிக்கின்றன.

பாகிஸ்தானின் பலுசிஸ்தானில் 20 பயிற்சி காவலர்கள் துப்பாக்கி முனையில் கடத்தப்பட்ட சம்பவம் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.

பாகிஸ்தானின் பலுசிஸ்தான் மாகாணத்தின் மஸ்துங் மாவட்டத்தில் கோர்கினா பகுதியில் நேற்று மாலை, பலுசி பிரிவினைவாதிகள் என சந்தேகிக்கப்படும் ஆயுதம் ஏந்திய நபர்கள் ஒரு வேனை வழிமறித்து, பயிற்சியில் காவலர்கள் 20 கடத்திச் சென்றனர்.

தேடுதல் வேட்டை

கடத்தப்பட்டவர்கள் கலாத் பயிற்சி மையத்திலிருந்து விடுப்பில் தங்கள் சொந்த ஊர்களுக்குச் சென்று கொண்டிருந்த காவலர்கள் ஆவர்.

இந்தக் கடத்தலை தொடர்ந்து, பாகிஸ்தான் பாதுகாப்புப் படைகள் மஸ்துங் மற்றும் அதன் சுற்றுவட்டாரப் பகுதிகளில் சோதனைச் சாவடிகளை அமைத்து, தேடுதல் வேட்டை நடத்தி வருகிறது.

தீ வைப்பு

மற்றொரு சம்பவத்தில், ஆயுதம் ஏந்திய பலூச் பிரிவினைவாதிகள் சில துர்பத் அருகே சரக்குகள் ஏற்றப்பட்ட லாரிகளுக்கு தீ வைத்ததாகத் தகவல்கள் தெரிவிக்கின்றன. இந்தச் சம்பவங்கள் குறித்த விசாரணை நடைபெற்று வருகிகிறது.

காணாமல் ஆக்கப்படுவோர்

இதனிடையே பலுசிஸ்தானில் பாகிஸ்தான் பாதுகாப்புப் படைகளுக்கு எதிராக நீண்ட காலமாக இருந்து வரும் குற்றச்சாட்டுகள் மீண்டும் கவனம் பெற்று வருகிறது.

சமீபத்தில், பஸ்னியில் பர்வேஸ் என்ற பள்ளி ஆசிரியரின் உடல் கண்டெடுக்கப்பட்டது. ஒரு நாள் முன்னதாக, பலுசிஸ்தான் போஸ்ட் பத்திரிக்கை, அவர் தனது குடும்ப உறுப்பினர்கள் முன்னிலையில் பாகிஸ்தான் பாதுகாப்புப் படையினரால் கைது செய்யப்பட்டதாக செய்தி வெளியிட்டிருந்தது.

பர்வேஸின் கைது மற்றும் மரணம் குறித்து பாகிஸ்தான் அதிகாரிகள் இதுவரை எந்த அதிகாரப்பூர்வ அறிக்கையையும் வெளியிடவில்லை.

இந்த ஆண்டு இதுபோன்ற சம்பவங்கள் அதிகரித்துள்ளதாக மனித உரிமை அமைப்புகள் குற்றம் சாட்டியுள்ளன.

ஆகஸ்ட் மாதம், பஞ்ச்கூரைச் சேர்ந்த ஹதிம் பலோச் என்ற மற்றொரு ஆசிரியர் அடையாளம் தெரியாத நபர்களால் கடத்தப்பட்டார். அவரது உடல் சில வாரங்களுக்குப் பிறகு கண்டெடுக்கப்பட்டது.

இதேபோல், கடந்த ஆண்டு அக்டோபரில் பாகிஸ்தான் படைகளால் தடுத்து வைக்கப்பட்ட அயாஸ் பலோச் என்ற ஆசிரியரின் உடல், இந்த ஆண்டு ஜனவரியில் கண்டெடுக்கப்பட்டது.

SCROLL FOR NEXT