பாகிஸ்தான் ஆக்கிரமிப்பு காஷ்மீரில் (PoJK) அப்பாவி பொதுமக்கள் மற்றும் போராட்டக்காரர்கள் படுகொலை செய்யப்படுவதைக் கண்டித்து, ஜம்மு-காஷ்மீர் தலைநகர் ஸ்ரீநகரில் உள்ள ஐக்கிய நாடுகள் சபை அலுவலகத்திற்கு வெளியே நேற்று அமைதியான கண்டனப் போராட்டம் நடைபெற்றது. காஷ்மீரி ஆர்வலர் ஜாவேத் பெய்க் தலைமையில் ஸ்ரீநகரில் உள்ள ஐநா ராணுவ கண்காணிப்பாளர் குழு அலுவலகத்தின் முன் மக்கள் திரண்டு அடையாளப் போராட்டத்தில் ஈடுபட்டனர்.
ஆக்கிரமிப்பு காஷ்மீரில் பாகிஸ்தான் அரசு நடத்தி வரும் மனித உரிமை மீறல்கள் மற்றும் அடக்குமுறைகளை சர்வதேச சமூகமும் ஐக்கிய நாடுகள் சபையும் உடனடியாகக் கவனித்து, அங்குள்ள மக்களின் பாதுகாப்பை உறுதி செய்ய வேண்டும் என்று வலியுறுத்தப்பட்டது. போராட்டம் நடத்தியவர்கள் ஐநா அலுவலகத்தில் ஒரு கோரிக்கை மனுவைச் சமர்ப்பித்தனர். அதில், பாகிஸ்தான் ஆக்கிரமிப்பு காஷ்மீர் பகுதியில் ஏற்பட்டுள்ள உயிரிழப்புகள் மற்றும் உண்மையான நிலவரத்தைக் கண்டறிய ஐநா ஒரு உண்மைக்கண்டறியும் குழுவை அங்கு அனுப்ப வேண்டும் என்று கோரப்பட்டுள்ளது. பாகிஸ்தான் ஆக்கிரமிப்பு காஷ்மீரில் கடந்த சில நாட்களாக 'ஜாயிண்ட் அவாமி ஆக்ஷன் கமிட்டி' (JAAC) என்ற அமைப்பின் தலைமையில் மக்கள் தொடர் போராட்டங்களை நடத்தி வருகின்றனர்.
மிகக் கடுமையான பணவீக்கம், கட்டுப்படியாகாத மின்சாரக் கட்டணம், கோதுமை உள்ளிட்ட அத்தியாவசியப் பொருட்களின் தட்டுப்பாடு மற்றும் பாகிஸ்தான் அரசு தங்களுக்கு அளித்த 38 அம்சக் கோரிக்கைகளை நிறைவேற்றாதது ஆகியவற்றை எதிர்த்து மக்கள் வீதியில் இறங்கினர். ஜூன் 7, 2026 அன்று இரவு, PoJK-இன் ராவலாகோட் மற்றும் முசாஃபராபாத் ஆகிய நகரங்களில் போராட்டக்காரர்களுக்கும் பாகிஸ்தான் பாதுகாப்புப் படையினருக்கும் இடையே மிகக் கடுமையான மோதல்கள் வெடித்தன. அமைதியான முறையில் போராடிய மக்கள் மீது பாகிஸ்தான் ராணுவமும் போலீசாரும் நேரடித் துப்பாக்கிச் சூடு மற்றும் கண்ணீர்ப்புகைக் குண்டுகளைப் பயன்படுத்தியதாகக் கூறப்படுகிறது.
இந்த வன்முறையைத் தொடர்ந்து, ஆக்கிரமிப்பு காஷ்மீர் முழுவதும் இணையச் சேவைகள் மற்றும் தொலைபேசி இணைப்புகள் பாகிஸ்தான் அரசால் முழுமையாகத் துண்டிக்கப்பட்டுள்ளன. இதனால், அங்கு நிகழ்ந்துள்ள துல்லியமான உயிரிழப்பு விபரங்களைச் சேகரிப்பதில் பெரும் சவால்கள் நீடிக்கின்றன. 4 உயிரிழப்புகள் குறித்த அதிர்ச்சியூட்டும் தகவல்கள்வெளியாகியுள்ள பல்வேறு ஊடக அறிக்கைகள் மற்றும் ரகசிய ஆவணங்களின்படி இந்த வன்முறை ஒடுக்குமுறையில் 30-க்கும் மேற்பட்ட பொதுமக்கள் கொல்லப்பட்டுள்ளனர் என்றும், 200-க்கும் மேற்பட்டோர் படுகாயமடைந்துள்ளனர் என்றும் தகவல்கள் தெரிவிக்கின்றன.
இதில் பல குழந்தைகள் மற்றும் பெண்களும் பாதிக்கப்பட்டுள்ளதாக அதிர்ச்சித் தகவல்கள் வெளியாகியுள்ளன. மோதலில் 4 பாகிஸ்தான் போலீசாரும் உயிரிழந்துள்ளதாக அதிகாரிகள் தரப்பில் தெரிவிக்கப்பட்டுள்ளது. புதுடெல்லியில் செய்தியாளர்களைச் சந்தித்த இந்திய வெளியுறவு அமைச்சகத்தின் செய்தித் தொடர்பாளர் ரந்தீர் ஜெய்ஸ்வால் பாகிஸ்தானின் இந்த அடக்குமுறைக்குக் கடும் கண்டனம் தெரிவித்துள்ளார்.
"பாகிஸ்தான் ஆக்கிரமிப்பு ஜம்மு-காஷ்மீரில் கடுமையான போலீஸ் அத்துமீறல்களால் பல போராட்டக்காரர்கள் கொல்லப்பட்டிருப்பது மிகுந்த கவலையளிக்கிறது. பாகிஸ்தான் தனது சொந்த தோல்விகளையும், மனித உரிமை மீறல்களையும் மூடிமறைக்க போலியான செய்திகளையும், வீடியோக்களையும் பரப்பி திசைதிருப்பப் பார்க்கிறது. சர்வதேச சமூகம் பாகிஸ்தானின் இந்த அத்துமீறல்களுக்கு அவற்றுக்குரிய பொறுப்பை ஏற்குமாறு செய்ய வேண்டும்." என்று இந்தியா வலியுறுத்தியுள்ளது.