பாகிஸ்தானின் ஆக்கிரமிப்பு காஷ்மீரில் தேர்தல் நடத்த எதிர்ப்பு தெரிவித்து ஜே.ஏ.ஏ.சி அமைப்பு சில நாட்களாக போராட்டம் நடத்தி வருகிறது.
இதில் போராட்டக்காரர்கள் மீது பாகிஸ்தான் பாதுகாப்பு படையினர் துப்பாக்கி சூடு நடத்தி வருகிறார்கள். கடந்த 2 நாட்களில் போராட்டக்காரர்கள் மீது பாகிஸ்தான் ராணுவம் நடத்திய துப்பாக்கிச் சூட்டில் 32 பேர் கொல்லப்பட்டனர். கடந்த ஜூன் 5-ந்தேதி முதல் தொடங்கிய இப்போராட்டத்தில் இதுவரை 90 பேர் உயிரிழந்து உள்ளனர்.
இந்த நிலையில் ஆக்கிரமிப்பு காஷ்மீரில் நடந்து வரும் போராட்டங்கள் குறித்து பாகிஸ்தான் பாதுகாப்பு அமைச்சர் கவாஜா சர்ச்சை கருத்தை தெரிவித்து உள்ளார்.
அவர் கூறும்போது, "ஆசாத் காஷ்மீர் (பாகிஸ்தான் ஆக்கிரமிப்பு காஷ்மீர்) போராட்டக்காரர்களை நான் இந்தியாவுடனான அதே பிரிவில் வைக்கிறேன். அவர்களையும் இந்தியாவைப் போலவே எதிரிகளாகக் கருதுகிறேன்" என்றார்.
பாகிஸ்தான் ஆக்கிரமிப்பு காஷ்மீரில் இயங்கி வரும் 'ஜம்மு காஷ்மீர் கூட்டு அவாமி நடவடிக்கைக் குழு' என்ற மனித உரிமை மற்றும் சிவில் சமூக அமைப்பு, பிராந்திய மக்களின் உரிமைக்காகவும் விலைவாசி உயர்வுக்கு எதிராகவும் நீண்டகாலமாகப் போராடி வருகிறது.
ஆக்கிரமிப்பு காஷ்மீர் சட்டசபைக்கான 53 இடங்களில், 12 இடங்கள் அகதிகளுக்காக (பிராந்தியத்தில் வசிக்காதவர்களுக்காக) ஒதுக்கப்பட்டிருப்பதை நீக்க வேண்டும் என அங்குள்ள மக்கள் தொடர்ந்து வலியுறுத்தி வந்தனர். ஆனால், இந்த கோரிக்கைகள் நிராகரிக்கப்பட்டதால், அப்பகுதி மக்கள் தேர்தலை முற்றிலுமாகப் புறக்கணிக்க முடிவெடுத்தனர்.
தேர்தல் புறக்கணிப்பைத் தொடர்ந்து, அவாமி நடவடிக்கைக் குழுவின் தலைமையில் ஆயிரக்கணக்கான மக்கள் 'ராவல்கட்' நகரிலிருந்து அம்மாநிலத் தலைநகரான 'முசாபராபாத்' நோக்கி அமைதிப் பேரணியாகச் செல்ல முயன்றனர்.
பேரணியைத் தடுக்க காவல்துறை மற்றும் பாகிஸ்தான் பாதுகாப்புப் படையினர் ராவல்கட்டின் முக்கிய சாலைகளில் கடுமையான தடைகளை ஏற்படுத்தினர். இருப்பினும், தடைகளை மீறிப் பேரணி முன்னேற முயன்றபோது, காவல்துறையினர் கண்ணீர்ப்புகைக் குண்டுகளை வீசியும், நேரடித் தோட்டாக்களைப் பயன்படுத்தியும் கண்மூடித்தனமாக துப்பாக்கிச் சூடு நடத்தினர்.
பாகிஸ்தான் ஆக்கிரமிப்பு காஷ்மீரில் நிலவும் அடக்குமுறை, அத்தியாவசியப் பொருட்களின் விலை உயர்வு, மின்கட்டண உயர்வு மற்றும் ராணுவத்தின் ஆதிக்கம் ஆகியவற்றுக்கு எதிராகக் கடந்த சில மாதங்களாகவே தொடர் போராட்டங்கள் நடைபெற்று வருகின்றன. காவல்துறையின் இந்த கொடூரத் தாக்குதலால் அப்பகுதியில் பதற்றம் உச்சகட்டத்தை எட்டியுள்ளது. பல இடங்களில் தொலைத்தொடர்புச் சேவைகள் முடக்கப்பட்டு, ராணுவத்தின் ரோந்துப் பணிகள் தீவிரப்படுத்தப்பட்டுள்ளன.