ஷெபாஸ் ஷெரீப், அசிம் முனீர்  
உலகம்

அசிம் முனீருக்கு ஏகபோக அதிகாரம்.. புதிய ராணுவ சட்டங்களை நிறைவேற்றிய பாகிஸ்தான்

பிரதமரின் முதன்மை ராணுவ ஆலோசகராக அசிம் முனீர் செயல்படுவார்.

பாகிஸ்தான் ராணுவத்தின் உச்சபட்ச பதவியான பீல்டு மார்ஷல் பதவியில் உள்ள அசிம் முனீருக்கு புதிய ராணுவ சட்டங்கள் மூலம் மேலும் பல அதிகாரங்கள் வழங்கப்பட்டுள்ளன.

பாகிஸ்தான் ராணுவ தலைமை தளபதியாக இருந்த அவருக்கு கடந்த ஆண்டு இந்தியாவுடன் ஏற்பட்ட மோதலுக்கு பின்னர் இந்த பீல்டு மார்ஷல் பதவி வழங்கப்பட்டது.

பாகிஸ்தான் அரசு நிர்வாகத்தில் அசிம் முனீரின் ஆதிக்கம் இருப்பதாக நம்பப்பட்டு வரும் நிலையில் அவரின் அதிகாரங்கள் மேலும் அதிகரிக்கப்பட்டுள்ளன.

ராணுவ நடவடிக்கைகள் அனைத்தையும் கட்டுப்படுத்துவது மூத்த அதிகாரிகள், வீரர்கள் மற்றும் பணியாளர்கள் விவகாரங்கள் மீதான முழுமையான கட்டுப்பாடு ஆகியவை அசிம் முனீர் கைக்கு நேரடியாக சென்றுள்ளது.

ராணுவ சட்டம்

முப்படைகள் மீதும் முனீருக்கு முழுமையான அதிகாரத்தை வழங்கும் இந்தப் புதிய ராணுவ சட்டங்கள் எதிர்க்கட்சிகளின் வெளிநடப்பிற்கு மத்தியில் நாடாளுமன்றத்தில் நேற்று நிறைவேற்றப்பட்டன.

‘பாதுகாப்புப் படைகள் சட்டம், 2026’, 'தேசிய கட்டளை ஆணைய திருத்தச் சட்டம்' ஆகிய இந்த சட்டங்கள் மூலம் தரைப்படை, கடற்படை மற்றும் விமானப்படை ஆகிய மூன்று படைகளும் பீல்டு மார்ஷல் முனீரின் ஒற்றைக் கட்டுப்பாட்டின் கீழ் கொண்டுவரப்பட்டுள்ளன.

ஏகபோக அதிகாரம்

இந்த புதிய சட்டங்கள் மூலம் பாதுகாப்புப் படைகளின் தலைமையகம் உருவாக்கப்பட்டு, அதன் சுப்ரீம் கமாண்டராக அசிம் முனீர் செயல்படுவார்.

நாட்டின் பாதுகாப்பு, ராணுவம் மற்றும் தேசிய முக்கியத்துவம் வாய்ந்த விவகாரங்களில் பிரதமரின் முதன்மை ராணுவ ஆலோசகராக அசிம் முனீர் செயல்படுவார்.

ராணுவ ஆட்சேர்ப்பு, குறைப்பு, பணியாளர்களின் ஓய்வு, பணிவிடுவிப்பு, பணிநீட்டிப்பு மற்றும் ஓய்வூதிய சேவை வரம்புகளை மாற்றி அமைக்கும் முழு அதிகாரமும் அவருக்கு கிடைத்துள்ளது.

இப்புதிய நடைமுறைகளை செயல்படுத்துவதில் ஏதேனும் முரண்பாடுகள் அல்லது சிக்கல்கள் எழுந்தால், அதைத் தீர்க்கும் அதிகாரம் குடியரசுத் தலைவருக்கு வழங்கப்பட்டுள்ளது.

வரலாற்று ரீதியாகப் பலமுறை ராணுவ ஆட்சியைக் கண்டுள்ள பாகிஸ்தானில், ஒரே ஒரு ராணுவ தளபதியின் கைகளில் இவ்வளவு அதிகாரங்கள் குவிக்கப்படுவது நாட்டின் ஜனநாயக சூழலில் மிகப்பெரிய தாக்கத்தை ஏற்படுத்தும் என்று அரசியல் ஆய்வாளர்கள் கருதுகின்றனர்.