பாகிஸ்தானில் காவல் சோதனைச் சாவடி மீது பயங்கரவாதிகள் நடத்திய தாக்குதலில் 11 காவல்துறையினர் உயிரிழந்தனர்.
வடமேற்கு மாகாணமான கைபர் பக்துன்க்வாவில் உள்ள Hangu மாவட்டத்தில் ஆப்கானிஸ்தான் எல்லைக்கு அருகே அமைந்துள்ள சோதனைச் சாவடி மீது நேற்று பயங்கரவாதிகள் வெடிமருந்துகள் நிரப்பப்பட்ட டிரோன்களை பயன்படுத்தித் தாக்குதல் நடத்தினர்.
டிரோன் தாக்குதலைத் தொடர்ந்து, காவல்துறையினர் மீது பயங்கரவாதிகள் துப்பாக்கிச் சூடு நடத்தினர்.
இந்த மோதலின் போது, பயங்கரவாதிகள் 3 காவல் வாகனங்களுக்குத் தீ வைத்தனர்.
காவல் உதவி ஆய்வாளர் தியார் கான் தலைமையில் கூடுதல் படைகள் சம்பவ இடத்திற்கு விரைந்தன.
பல மணி நேரம் நடைபெற்ற துப்பாக்கிச் சூடில் 11 காவல்துறையினர் உயிரிழந்தனர் . இதில் தியார் கானும் அடங்குவார்.
மேலும் 28 காவல்துறையினர் காயமடைந்து மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டுள்ளனர்.
காவல்துறையினர் நடத்திய பதில் தாக்குதலில் 15 பயங்கரவாதிகள் சுட்டுக் கொல்லப்பட்டனர்.
இத்தாக்குதலுக்கு உடனடியாக எந்த அமைப்பும் பொறுப்பேற்கவில்லை என்றாலும், பாகிஸ்தானில் தடை செய்யப்பட்ட 'தெஹ்ரீக்-இ-தாலிபான் பாகிஸ்தான்' அமைப்பே இத்தாக்குதலை நடத்தியதாகக் காவல்துறை சந்தேகிக்கிறது.
பாகிஸ்தான் - ஆப்கானிஸ்தான் எல்லைப் பகுதிகளில் சமீபகாலமாக பாதுகாப்புப் படையினரைக் குறிவைத்து நடத்தப்படும் பயங்கரவாதத் தாக்குதல்கள் கணிசமாக அதிகரித்துள்ளன.
2021இல் ஆப்கானிஸ்தானில் தாலிபான்கள் ஆட்சியைக் கைப்பற்றியதில் இருந்து, TTP என அழைக்கப்படும் தெஹ்ரிக் இ பாகிஸ்தான் அமைப்பு கைபர் பக்துன்க்வாவில் வலுவடைந்துள்ளது.
TTP பயங்கரவாதிகள் ஆப்கானிஸ்தான் எல்லைப்பகுதிகளில் இருந்துகொண்டு அங்கிருந்து திட்டம் தீட்டி கைபர் பக்துன்க்வாவிற்குள் ஊடுருவி தாக்குதல் நடத்துவதாக பாகிஸ்தான் அரசு குற்றம்சாட்டுகிறது.
இதனால் இரு நாடுகள் இடையே ராணுவ மோதல் அவ்வப்போது வெடித்து அடங்குகிறது.
கைபர் பக்துன்க்வா பகுதியில் தொடர்ந்து நடைபெறும் துப்பாக்கிச் சூடு, வெடிகுண்டு தாக்குதல்கள் உள்ளூர் மக்களை கடுமையாக பாதித்துள்ளது. பலர் தங்கள் வீடுகளை விட்டு வெளியேறி பாதுகாப்பான இடங்களுக்கு இடம்பெயர்ந்து வருகின்றனர்.