உலகம்

Fuel Prices | கடும் எதிர்ப்பு எதிரொலி: ஏற்றிய வேகத்தில் பெட்ரோல் விலையை குறைத்த பாகிஸ்தான்

பாகிஸ்தானில் ஒரு மாதத்தில் 2-வது முறையாக பெட்ரோல், டீசல் விலை கடுமையாக உயர்த்தப்பட்டது.

அமெரிக்கா-ஈரான் போருக்கு மத்தியில் சர்வதேச அளவில் கச்சா எண்ணெய் விலை அதிகரித்துள்ளது. இதன் எதிரொலியாக பாகிஸ்தானில் ஒரு மாதத்தில் 2-வது முறையாக பெட்ரோல், டீசல் விலை கடுமையாக உயர்த்தப்பட்டது.

பாகிஸ்தானில் டீசல் விலை 54.9 சதவீதமும், பெட்ரோல் விலை 42.7 சதவீதமும் அதிகரித்துள்ளது. அங்கு 2-வது முறையாக பெட்ரோல், டீசல் விலை உயர்ந்துள்ளது. அங்கு ஒரு லிட்டர் டீசல் இந்திய பணத்தில் ரூ.173-க்கு விற்கப்படுகிறது. இது பாகிஸ்தான் பணத்தில் ரூ.520 ஆகும். பெட்ரோல் விலை இந்திய பணத்தில் ரூ.152-க்கு விற்கப்படுகிறது. இது பாகிஸ்தான் பணத்தில் ரூ.458 ஆகும். இந்த விலை உயர்வு நேற்று முதல் அமலுக்கு வந்தது.

சர்வதேச சந்தையில் கச்சா எண்ணெய் விலையில் ஏற்பட்டு உள்ள திடீர் உயர்வு காரணமாக இந்த விலை உயர்வு தவிர்க்க முடியாதது என அந்நாட்டின் பெட்ரோலியத்துறை மந்திரி அலி பர்வேஸ் மாலிக் தெரிவித்துள்ளார்.

இந்நிலையில், பாகிஸ்தான் பிரதமர் ஷபாஸ் ஷெரீப் நாட்டு மக்களிடம் டிவியில் உரையாற்றினார். அப்போது அவர் பேசுகையில், பெட்ரோல் விலை லிட்டருக்கு ரூ.458 என விற்பனை ஆகிறது. இந்த நிலையை சற்று சீராக்கும் வகையில் பெட்ரோல் விலையை 80 ரூபாய் குறைக்க அரசு முடிவு செய்துள்ளது. இதன்மூலம் ஒரு லிட்டர் பெட்ரோல் ரூ.378 என விற்பனை செய்யப்படும். மேற்காசிய போர் முடிவுக்கு வந்தவுடன் பெட்ரோல், டீசல் விலை போருக்கு முந்தைய நிலையை நாட்டில் எட்டும் என தெரிவித்தார்.

வரலாறு காணாத வகையில் பெட்ரோல் விலை உயர்த்தப்பட்டதற்கு எதிராக எழுந்த கடும் எதிர்ப்புகளையும் நாடு தழுவிய போராட்டங்களையும் தொடர்ந்து பாகிஸ்தான் அரசு பெட்ரோல் விலையை குறைத்துள்ளது.