உலகம்

மெகா ஊழல், பணமோசடி வழக்கில் ஒரே விசாரணையில் பாகிஸ்தான் பிரதமரின் மகள், மருமகனை விடுவித்தது நீதிமன்றம்

மெகா ஊழல் தொடர்பான வழக்கில் பாகிஸ்தான் பிரதமர் ஷெபாஸ் ஷெரீஃபின் மகள் மற்றும் மருமகனை அந்நாட்டு நீதிமன்றம் விடுவித்துள்ளது.

பஞ்சாப் சாஃப் பானி நிறுவனம் தொடர்பான பல கோடி ரூபாய் ஊழல் வழக்கில் பாகிஸ்தான் பிரதமர் ஷெபாஸ் ஷெரீஃபின் மகள் ராபியா இம்ரான் மற்றும் அவரது கணவர் இம்ரான் யூசுஃப் ஆகியோருக்கு கடந்த 2022-ம் ஆண்டு நீதிமன்றம் கைது செய்வதற்கான நிரந்தர வாரண்டு பிறப்பித்தது.

இதனால் கைதியில் இருந்து தப்பிக்க இருவரும் இங்கிலாந்துக்கு தப்பி ஓடினர். இதனால் அறிவிக்கப்பட்ட குற்றவாளி என நீதிமன்றம் அறிவித்தது. கைது நடவடிக்கையில் இருந்து தப்பிப்பதற்காக 2022-ம் ஆண்டில் இங்கிலாந்துக்குச் சென்றிருந்த இந்தத் தம்பதி, அங்கிருந்து திரும்பியதும் தங்கள் வழக்கறிஞருடன் நீதிமன்றத்தில் நேரில் ஆஜரானார்கள். மே 7-ம் தேதி வரை அவர்களை கைது செய்யக்கூடாது என மத்திய புலனாய்வு முகமைக்கு (FIA) உத்தரவிட்டு முன்ஜாமீன் வழங்கியது.

பாகிஸ்தான் ஊழல் தடுப்பு அமைப்பான என்.ஏ.பி., வழக்கு நடைபெற்ற நீதிமன்றத்தில், அவர்களுக்கு எதிரான வாரண்ட்-ஐ ரத்து செய்தால், ஆனால் ஆட்சேபனை தெரிவிக்கமாட்டோம் எனத் தெரிவித்தது. இதனால் வாரண்ட் ரத்து செய்யப்பட்டு முன்ஜாமீன் வழங்கப்பட்டது.

இந்த நிலையில் இன்று வழக்கு விசாரணைக்கு வந்தது. அப்போது இருவரும் நிரபராதிகள் எனக் கூறி இருவரையும் வழக்கில் இருந்து விடுவிப்பதாக நீதிமன்றம் உத்தரவிட்டுள்ளது.

பஞ்சாப் சாஃப் பானி (Saaf Pani) நிறுவன ஊழல் மற்றும் பணமோசடி வழக்கில், பிரதமரின் மகளுக்கும் மற்றும் அவரது கணவருக்கும் எதிராக எவ்வித ஆதாரங்களும் இல்லாததால், இவ்வழக்கில் அவர்களுக்கு தொடர்பு இருப்பதாகக் கண்டறியப்படவில்லை என்று ஊழல் தடுப்பு அமைப்பு ஊழல் தடுப்பு நீதிமன்றத்தில் தெரிவித்தது. இதனைத் தொடர்ந்து நீதிமன்றம் அவர்களை விடுவித்துள்ளது.