பாகிஸ்தானின் முக்கிய எதிர்க்கட்சி தலைவர்கள் இருவர், சிறையில் அடைக்கப்பட்டுள்ள முன்னாள் பிரதமர் இம்ரான் கான் மற்றும் அவரது மனைவி புஷ்ரா பிபி ஆகியோரின் உடல்நிலை மோசமடைந்து வருவதை கருத்தில் கொண்டு, நீதித்துறை உடனடியாக தலையிட வேண்டும் என்று கோரி, அந்நாட்டின் உயர் நீதிமன்ற அமைப்புகளை அணுகியுள்ளனர்.
முன்னாள் கிரிக்கெட் வீரரும், பாகிஸ்தான் தெஹ்ரீக்-இ-இன்சாஃப் (பிடிஐ) கட்சியின் நிறுவனருமான இம்ரான் கான், 2023-ஆம் ஆண்டு முதல் சிறையில் உள்ளார். அவர் மீது ஊழல் மற்றும் வன்முறையை தூண்டியது உள்ளிட்ட 100-க்கும் மேற்பட்ட வழக்குகள் உள்ளன.
அவரது மனைவி புஷ்ரா பிபி, மற்றொரு வழக்கில் கைது செய்யப்பட்டு, தம்பதியினர் இருவருக்கும் தண்டனை விதிக்கப்பட்டுள்ளது.
பிடிஐ கட்சி மற்றும் அவர்களின் வழக்கறிஞர்களின் கூற்றுப்படி, இருவரும் பார்வை குறைபாடு உள்ளிட்ட பல்வேறு உடல்நல பிரச்சினைகளை எதிர்கொண்டு வருகின்றனர்.
தேசிய அவை மற்றும் செனட் சபையில் பி.டி.ஐ. கட்சியால் பரிந்துரைக்கப்பட்டு ஆதரிக்கப்படும் எதிர்க்கட்சி தலைவர்களான மஹ்மூத் கான் அச்சாக்சாய் மற்றும் அல்லாமா ராஜா நசீர் அப்பாஸ் ஆகியோர், கூட்டாட்சி அரசியலமைப்பு நீதிமன்றம், உச்ச நீதிமன்றம் மற்றும் இஸ்லாமாபாத் உயர் நீதிமன்றம் ஆகியவற்றின் தலைமை நீதிபதிகளுக்கு கடிதம் எழுதியுள்ளனர்.
சிறையில் உள்ள பிடிஐ நிறுவனரின் வழக்கறிஞர் காலித் யூசுப் சௌத்ரி, திங்களன்று 'டான்' நாளிதழிடம் கூறுகையில், இந்த விண்ணப்பத்தை ஒரு மனுவாக கருதி, அடிப்படை உரிமைகள் தொடர்பான விவகாரமாக விசாரணைக்கு எடுத்துக்கொள்ளுமாறு உச்ச நீதிமன்றத்திடம் கோரப்பட்டுள்ளதாக தெரிவித்தார்.
இந்த எதிர்க்கட்சி தலைவர்கள் இருவரும், தங்கள் அரசியலமைப்பு ரீதியான பொறுப்பை பயன்படுத்தி, உயர் நீதிமன்ற அமைப்புகளின் அதிகார வரம்பின் கீழ் இந்த கூட்டு கடிதத்தை எழுதியுள்ளதாகவும், இதை அடிப்படை உரிமைகளை அமல்படுத்துவதற்கான மனுவாக கருத வேண்டும் என்று கோரியுள்ளதாகவும் சௌத்ரி கூறினார்.
இந்த கடிதத்தில், இம்ரான் கான் மற்றும் புஷ்ரா பிபி ஆகிய இருவரின் உடல்நிலை மற்றும் அவர்கள் சிறையில் அடைக்கப்பட்டுள்ள சூழல் குறித்து கவலை தெரிவிக்கப்பட்டுள்ளது.
மேலும், 74 வயதான இம்ரான் கானை மருத்துவ சிகிச்சைக்காக ஷிஃபா சர்வதேச மருத்துவமனைக்கு மாற்ற வேண்டும், அவரை பரிசோதிக்க மருத்துவ குழுவை அமைக்க வேண்டும் மற்றும் அவர் தனது குடும்பத்தினருடன் பேச அனுமதிக்க வேண்டும் என்று உச்ச நீதிமன்றம் ஆகஸ்ட் 18 அன்று பிறப்பித்த உத்தரவை செயல்படுத்தாதது குறித்து, நீதிமன்ற உத்தரவு பிறப்பிக்கப்பட வேண்டும் என்றும் அந்த கடிதத்தில் கோரப்பட்டுள்ளது.