அமெரிக்க நீதிமன்றத்தில் வெனிசுலா முன்னாள் அதிபர் மதுரோ மற்றும் அவரின் மனைவி சிலியா மீது சித்திரவதை குற்றச்சாட்டுகள் சுமத்தப்பட்டுள்ளன.
இந்த ஆண்டு தொடக்கத்தில் வெனிசுலா நாட்டில் நள்ளிரவில் அத்துமீறி நுழைந்த அமெரிக்க ராணுவம், அதிபர் மாளிகையில் தூங்கிக்கொண்டிருந்த அப்போதைய அதிபர் நிகோலஸ் மதுரோ மற்றும் அவரது மனைவி சிலியா புளோரஸை கடத்திக்கொண்டு கப்பலில் அமெரிக்கா அழைத்து வந்தது.
மதுரோ தலைமையிலான வெனிசுலா அரசுக்கும் டிரம்ப்பின் அமெரிக்க அரசுக்கும் நீண்ட காலமாக பகைமை இருந்து வந்தது. எண்ணெய் வளமிக்க வெனிசுலாவில் இடதுசாரியான மதுரோவின் ஆட்சி நடைபெறுவதால் தங்கள் வர்த்தக நலன்களுக்கு பாதிப்பு ஏற்படுவதாக அமெரிக்கா கருதியது.
இதனிடையே வெனிசுலாவில் இருந்து மதுரோவின் ஒத்துழைப்புடன் போதை கும்பல்கள் அமெரிக்காவுக்கு போதைப் பொருள் கடத்துவதாக டிரம்ப் குற்றம்சாட்டி வந்தார்.
மதுரோ மற்றும் அவரின் மனைவி கடத்தி வரப்பட்ட பின் அமெரிக்க நீதிமன்றத்தில் ஆஜர்படுத்தப்பட்ட அவர்கள் மீது போதைப்பொருள் பயங்கரவாதம் உள்ளிட்ட கடுமையான குற்றச்சாட்டுகள் சுமத்தப்பட்டு சிறையில் அடைக்கப்பட்டனர். அவர்கள் மீதான விசாரணை நடைபெற்று வருகிறது.
இதனிடையே வெனிசுலா துணை அதிபர் டெல்சி ரோட்ரிக்ஸ் நாட்டின் அதிபரானார். அமெரிக்காவுக்கு ஒத்துழைக்க மறுத்தால் அவரும் பின்விளைவுகளை சந்திப்பார் என டிரம்ப் மிரட்டினார். மேலும் வெனிசுலாவில் உள்ள எண்ணெய்யை அமெரிக்க நிறுவனங்களே நிர்வகிக்கும் என அவர் அறிவித்தார்.
இதன் மூலம் மதுரோவை கைது செய்தது வர்த்தக நோக்கத்திற்காக என டிரம்ப் மீது குற்றச்சாட்டு எழுந்தது. ஆனால் காலப்போக்கில் இந்த விவகாரம் சர்வதேச பார்வையில் இருந்து கவனம் பெற தவறியது.
இந்த சூழலில் அமெரிக்க நீதிமன்றத்தில் அண்மையில் ஆஜர்படுத்தப்பட்ட மதுரா மற்றும் சிலியா மீது புதிய குற்றச்சாட்டுகளை அமெரிக்க அரசு வழக்கறிஞர்கள் சேர்த்துள்ளனர்.
மான்ஹாட்டனில் உள்ள அமெரிக்க கூட்டாட்சி நீதிமன்றத்தில் மதுரோ, சிலியா ஆஜர்படுத்தப்பட்டபோது, அமெரிக்க அரசு வழக்கறிஞர்கள், ஒரு பழைய போதைப்பொருள் கடத்தல் வழக்கில் சித்திரவதைச் சதி என்ற புதிய குற்றச்சாட்டைச் சேர்த்துள்ளனர்.
அதிகாரத்தில் நீடிப்பதற்காக, எதிர்க்கட்சித் தலைவர்களையும் கிளர்ச்சிப் படை வீரர்களையும் கடத்தி, கொடூரமாக சித்திரவதை செய்ய மதுரோ நேரடியாக உத்தரவிட்டார் என்று அரசுத் தரப்பு குற்றம் சாட்டுகிறது.
விசாரணைகளின் போது கடுமையான நிலைப்பாட்டை எடுத்தவர்களை இன்னும் கொடூரமாக சித்திரவதை செய்யுமாறு மதுரோ அதிகாரிகளுக்கு உத்தரவிட்டதாகவும், அவரது மனைவி சிலியா இதற்கு முழு ஆதரவு அளித்ததாகவும் குற்றப்பத்திரிகையில் கூறப்பட்டுள்ளது.
இருப்பினும், நீதிபதி ஆல்வின் ஹெலர்ஸ்டீன் முன்னிலையில் இருவரும், அனைத்து குற்றச்சாட்டுகளும் பொய்யானவை என்றும், தாங்கள் முற்றிலும் நிரபராதிகள் என்றும் மதுரோவும், சிலியாவும் சாட்சியம் அளித்துள்ளனர்.
அவர்கள் நேரடியாகக் குற்றங்கள் செய்ததாகக் குற்றம் சாட்டப்படவில்லை என்றாலும், குற்றவாளிகள் என நிரூபிக்கப்பட்டால், அவ்விருவரும் குறைந்தது 50 ஆண்டுகள் சிறைத்தண்டனையை எதிர்கொள்ள நேரிடும். இந்த வழக்கின் விசாரணை 2027 ஜூன் மாதம் தொடங்க உள்ளது.
மதுரோவின் கைதுக்குப் பிறகு, அதிபர் டெல்சி ரோட்ரிக்ஸ் தலைமையிலான வெனிசுலா நிர்வாகம் அமெரிக்காவுடனான ஒத்துழைப்பை வலுப்படுத்தியுள்ளது.