உலகம்

ரூ.2,500-க்கு வாங்கிய பழைய ஓவியம் ரூ.11.3 கோடிக்கு ஏலம்: அமெரிக்காவில் அதிர்ஷ்டத்தை அள்ளிய நபர்!

45,000 மடங்கு அதிக லாபத்தைப் பெற்றுத் தந்த இந்த சம்பவம், ஏல உலகில் மிகப்பெரிய சாதனையாகப் பேசப்பட்டு வருகிறது.

அமெரிக்காவின் மிச்சிகன் மாநிலத்தில் சாதாரண பழைய பொருட்கள் விற்பனையில் $30-க்கு (இந்திய மதிப்பில் சுமார் ரூ.2,500) வாங்கப்பட்ட ஒரு சிறிய ஓவியம், ஏலத்தில் $1.35 மில்லியனுக்கு (சுமார் ரூ.11.3 கோடி) விற்பனையாகி உலகளவில் பெரும் வியப்பை ஏற்படுத்தியுள்ளது.

பழைய பொருட்கள் மற்றும் மரச்சாமான்களை வாங்கி விற்பனை செய்யும் நபர் ஒருவர், மிச்சிகன் மாநிலத்தில் உள்ள ஒரு வீட்டில் நடைபெற்ற பழைய பொருட்கள் விற்பனைக்குச் சென்றுள்ளார். அங்குள்ள கார் நிறுத்தும் இடத்திற்குச் செல்லும் நடைபாதையில், பத்து சிப்பிகள் வரையப்பட்ட சிறிய அளவிலான (8 x 11 அங்குலம்) ஓவியம் ஒன்று தூசி படிந்து கிடந்துள்ளது. அதன் கலைநயத்தைக் கண்டு ஈர்க்கப்பட்ட அவர், வெறும் $30 கொடுத்து அதை வாங்கினார்.

ஆராய்ச்சியில் வெளிவந்த உண்மை

அந்த ஓவியத்தை வீட்டிற்கு எடுத்துச் சென்று ஆய்வு செய்தபோது, அது 1951-ஆம் ஆண்டு பிரபல சிகாகோ பெண் ஓவியரான கெர்ட்ரூட் அபெர்குரோம்பி என்பவரால் வரையப்பட்ட "ஆல்டர்மேன் மெரியமின் சிப்பிகள்" என்ற புகழ்பெற்ற ஓவியம் என்பது தெரியவந்தது. கடந்த நூற்றாண்டில் அறுவை சிகிச்சை செய்த மருத்துவருக்குக் கட்டணமாக இந்த ஓவியத்தை அந்தப் பெண் ஓவியர் வழங்கியுள்ளார். 1980-களில் அருங்காட்சியகக் கண்காட்சிக்குப் பிறகு காணாமல் போன இந்த ஓவியம், பல தசாப்தங்களாக யாருக்கும் தெரியாமல் அந்த வீட்டின் நடைபாதையிலேயே முடங்கிக்கிடந்துள்ளது.

வரலாற்று சாதனை

மில்வாக்கி கலை அருங்காட்சியகத்தின் கண்காட்சிப் புத்தகத்தில் இருந்த குறிப்புகளையும், கலை வரலாற்றுப் பேராசிரியர் சூசன் வைனிங்கர் அளிக்கப்பட்ட சான்றிதழையும் கொண்டு இந்த ஓவியத்தின் உண்மைத்தன்மை உறுதி செய்யப்பட்டது.

இதனைத் தொடர்ந்து 'ஃப்ரீமேன்ஸ்' ஏல நிறுவனத்தின் மூலம் இந்த ஓவியம் விற்பனைக்குக் கொண்டு வரப்பட்டது. தொடக்கத்தில் $150,000 முதல் $250,000 வரை மட்டுமே ஏலம் போகும் என எதிர்பார்க்கப்பட்ட நிலையில், உலகெங்கிலும் உள்ள கலை சேகரிப்பாளர்களின் போட்டி காரணமாக $1,352,600-க்கு ஏலம் போனது. தான் முதலீடு செய்த தொகையை விட சுமார் 45,000 மடங்கு அதிக லாபத்தைப் பெற்றுத் தந்த இந்த சம்பவம், ஏல உலகில் மிகப்பெரிய சாதனையாகப் பேசப்பட்டு வருகிறது.

SCROLL FOR NEXT