POK 
உலகம்

POK-ஐ 'பாகிஸ்தானி காஷ்மீர்' என குறிப்பிட்ட நியூயார்க் டைம்ஸ்.. இந்தியா கடும் கண்டனம்

உள்ளாட்சித் தேர்தல் தொடங்கும் வேளையில் 'பாகிஸ்தானி காஷ்மீரில்' வன்முறை வெடித்தது.

அமெரிக்காவின் 'தி நியூயார்க் டைம்ஸ்' பத்திரிகை, பாகிஸ்தான் ஆக்கிரமிப்பில் உள்ள காஷ்மீரை (POK) "பாகிஸ்தானி காஷ்மீர்" என்ற எனக் குறிப்பிட்டுச் செய்தி வெளியிட்டதற்கு இந்தியா கண்டனம் தெரிவித்துள்ளது.

இந்தியா கண்டனம்

அமெரிக்காவில் உள்ள இந்தியத் தூதரகம் தனது எக்ஸ் தளத்தில், "நியூயார்க் டைம்ஸின் தலைப்பு தவறானது. 'பாகிஸ்தானி காஷ்மீர்' என்று ஒன்று கிடையாது. 'பாகிஸ்தான் ஆக்கிரமிப்பு காஷ்மீர்' மட்டுமே உள்ளது.

ஜம்மு காஷ்மீர் மற்றும் லடாக் ஆகிய யூனியன் பிரதேசங்கள் எப்போதும் இந்தியாவின் பிரிக்க முடியாத பகுதிகளாகவே இருந்துள்ளன, இருக்கின்றன, அதுவே தொடரும்.

பாகிஸ்தான் இந்த நிலப்பகுதிகளை சட்டவிரோதமாக ஆக்கிரமித்து, அங்குள்ள மக்கள் மீது வன்முறையைப் பிரயோகித்து வருகிறது." என தெரிவித்துள்ளது.

ஐ.நா.வுக்கான இந்தியாவின் நிரந்தரப் பிரதிநிதி அம்பாசிடர் பர்வதனேனி ஹரிஷ் பேசுகையில், "ஜம்மு-காஷ்மீர் இந்தியாவின் பிரிக்க முடியாத பகுதி என்பதே சட்டப்பூர்வ உண்மை. பாகிஸ்தானின் சட்டவிரோத ஆக்கிரமிப்பு மட்டுமே இங்கு தீர்க்கப்பட வேண்டிய ஒரே பிரச்சினை" எனக் குறிப்பிட்டிருந்தார்.

நியூயார்க் டைம்ஸ் செய்தி

"உள்ளாட்சித் தேர்தல் தொடங்கும் வேளையில் 'பாகிஸ்தானி காஷ்மீரில்' வன்முறை வெடித்தது" என்ற தலைப்பில் நியூயார்க் டைம்ஸ் பத்திரிகை வெளியிட்ட செய்திக்கே இந்தியா தற்போது கண்டனம் தெரிவித்துள்ளது.

தேர்தல்

பாக்கிஸ்தான் ஆக்கிரமிப்பு காஷ்மீரில் ஜூலை 27 முதற்கட்ட சட்டசபைத் தேர்தல் நடைபெற்றது. ஜாயிண்ட் அவாமி ஆக்ஷன் கமிட்டி (JAAC) என்ற அமைப்பு மக்களை தேர்தலை புறக்கணிக்கச் செய்து போராட்டங்களை முன்னெடுத்து வருகிறது.

துப்பாக்கிச்சூடு

ஜூலை 27, 28,29 ஆகிய நாட்களில் ராவலாகோட்டில் இருந்து முசாபராபாத் நோக்கி JAAC அமைப்பின் தலைமையில் மக்கள் சென்ற பேரணியில் பாகிஸ்தான் பாதுகாப்புப் படைகள் துப்பாக்கிச்சூடு மற்றும் பிற வகைகளில் தாக்குதல் நடத்தின.

இந்த தாக்குதலில் 30க்கும் மேற்பட்ட அப்பாவிப் பொதுமக்கள் கொல்லப்பட்டனர். இதில் JAAC மத்தியக் குழு உறுப்பினர் உமர் நசீரின் சகோதரர் உஸ்மான் நசீர் என்பவரும் உயிரிழந்துள்ளார்.