உலகம்

ஜஸ்ட் மிஸ்ஸில் உயிர்தப்பிய உக்ரைன் அதிபர் - நார்வே பிரதமர் சொன்ன அதிர்ச்சி தகவல்

நார்வேயின் ராணுவ உதவி மற்றும் பொதுமக்களுக்கான உதவிகள் குறித்து பேச்சுவார்த்தை நடத்தினார்.

நார்வே மன்னர் ஹரால்டின் இறுதி சடங்கில் கலந்து கொள்வதற்காக, உக்ரைன் அதிபர் வோலோடிமிர் ஜெலென்ஸ்கி மோல்டோவாவில் இருந்து ஓஸ்லோவிற்கு சென்றுகொண்டிருந்த விமானம், டிரோன் ஒன்றால் கிட்டத்தட்ட தாக்கப்பட்டதாக நார்வே பிரதமர் ஜோனாஸ் கார் ஸ்டோர் தெரிவித்தார்.

"மோல்டோவாவில் இருந்து புறப்பட்டபோது அவரது விமானம் ஒரு டிரோனால் தாக்கப்பட இருந்தது. அதுதான் அவர் வாழும் யதார்த்தம்," என்று நார்வேயின் பொது ஒளிபரப்பு நிறுவனமான என்.ஆர்.கே-விடம் ஸ்டோர் கூறினார். அவர் அந்தச் சம்பவம் குறித்து வேறு எந்த விவரங்களையும் அளிக்கவில்லை.

முக்கிய பேச்சுவார்த்தை:

செவ்வாய்க்கிழமை மாலை ஓஸ்லோவிற்கு வந்தடைந்த ஜெலென்ஸ்கி, அங்கு ஸ்டோர், நிதி அமைச்சர் ஜென்ஸ் ஸ்டோல்டென்பெர்க் மற்றும் வெளியுறவு அமைச்சர் எஸ்பென் பார்த் ஈடே ஆகியோருடன், வான் பாதுகாப்பு ஆதரவு உள்ளிட்ட நார்வேயின் ராணுவ உதவி மற்றும் பொதுமக்களுக்கான உதவிகள் குறித்து பேச்சுவார்த்தை நடத்தினார்.

புதன்கிழமை அன்று, ஆகஸ்ட் 28 அன்று 89 வயதில் காலமான மன்னர் ஹரால்டின் இறுதி சடங்கில், ஜெலென்ஸ்கி பல வெளிநாட்டுப் பிரமுகர்களுடன் கலந்துகொண்டார்.

இறுதி சடங்கிற்கு பிறகு ஜெலென்ஸ்கி நார்வேயை விட்டு வெளியேறி, கனடாவுக்கு சென்று அங்குள்ள தலைவர்களுடன் பேச்சுவார்த்தை நடத்தவுள்ளதாக ஸ்டோர் என்.ஆர்.கே-விடம் தெரிவித்தார்.

SCROLL FOR NEXT