உலகம்

அணு ஆயுத நாடு என்பது மாற்ற முடியாத, முடிவுக்கு வந்த உண்மை - வடகொரியா திட்டவட்டம்

அணு ஆயுத ஒழிப்பு என்பது முற்றிலும் முடிந்துபோன ஒரு விஷயம்.

வடகொரியா ஒரு அணு ஆயுத நாடு என்பது மாற்ற முடியாத மற்றும் முடிவுக்கு வந்த உண்மை என்றும், பிராந்திய ஸ்திரத்தன்மையை உறுதி செய்வதற்கு அது முக்கியமானது என்றும் அந்நாட்டு அரசு திட்டவட்டமாக தெரிவித்துள்ளது.

“வட கொரியாவிற்கு எதிரான அமெரிக்கா மற்றும் அதன் அடிமைப் படைகளின் அர்த்தமற்ற சொல்லாடல்களும், அதற்கு அணு ஆயுத அச்சுறுத்தலை ஏற்படுத்துவதில் அவை காட்டும் ஒத்துழைப்பும், ஒருபோதும் வடகொரியாவின் ‘மாற்ற முடியாத அணுஆயுத நாடு’ என்ற அந்தஸ்தைப் பாதிக்க முடியாது” என்று வட கொரிய வெளியுறவு அமைச்சகம் வெளியிட்டுள்ள அறிக்கையில் தெரிவிக்கப்பட்டுள்ளது.

அணு ஆயுத ஒழிப்பு என்பது முற்றிலும் முடிந்துபோன ஒரு விஷயம் எனவும் குறிப்பிட்டுள்ளது.

வெள்ளிக்கிழமை (ஜூன்.12), டோக்கியோவில் நடைபெற்ற அமெரிக்கா, ஜப்பான் மற்றும் தென்கொரியா நாடுகளின் முத்தரப்பு கூட்டத்தில் எடுக்கப்பட்ட அணு ஆயுத ஒழிப்பு தீர்மானத்திற்குப் பதிலடி கொடுக்கும் வகையில் வடகொரிய வெளியுறவு அமைச்சகம் இந்த அதிகாரப்பூர்வ அறிக்கையை வெளியிட்டுள்ளது.