அமெரிக்காவின் நியூயார்க் நகரில் பேசிய ராஷ்ட்ரிய ஸ்வயம்சேவக் சங் (ஆர்.எஸ்.எஸ்) தலைவர் மோகன் பகவத், இந்தியாவில் முஸ்லிம்கள் இருக்கக்கூடாது என்று நினைக்கும் இந்து மதத்தை சேர்ந்த ஒருவர், உண்மையான இந்துவாக இருக்க முடியாது என்று கூறினார்.
நியூயார்க்கில் புகழ்பெற்ற மேடிசன் ஸ்கொயர் கார்டனில் ஆர்.எஸ்.எஸ் அமைப்பின் நூற்றாண்டு விழா உலகளாவிய மக்கள் தொடர்புத் திட்டத்தின் கூட்டம் நடைபெற்றது. ‘ஒரே உலகம் ஒரே மனிதநேயம்’ என்ற தலைப்பில் நடைபெற்ற இந்த மாநாட்டில், ஆர்.எஸ்.எஸ் அமைப்பின் தலைவர் மோகன் பகவத் கலந்து கொண்டார்.
அப்போது அவர், “நீங்கள் உங்களை இந்து என்று அழைத்துக் கொண்டால், எல்லாப் பாதைகளும் ஒரே இலக்கை நோக்கியே செல்கின்றன என்று நீங்கள் நம்ப வேண்டும்.
ஒவ்வொரு மனிதனுக்கும் உள்ளார்ந்த கண்ணியம் உண்டு, நமக்கிடையே எந்த அடிப்படை வேறுபாடும் இல்லை.
உண்மையறிந்தவர்கள், கற்றறிந்த அறிஞராக இருந்தாலும் சரி, யாராக இருந்தாலும் சரி, அனைவரையும் சமமாகவே பார்க்கிறார்கள். இந்த வெளித்தோற்ற வேறுபாடுகள் இயற்கையை மட்டுமே அலங்கரிக்கின்றன, அவ்வளவுதான்.
அன்றாட வாழ்வில் நாம் அவற்றைக் கடந்து செல்ல வேண்டியிருந்தாலும், நாம் அனைவரும் ஒன்று என்பதே அடிப்படை உண்மை.
பிரிவினையின் மாயைகள் நீடிக்கலாம், ஒரு குறிப்பிட்ட காலம் வரை செழிக்கவும் கூடும், ஆனால் இறுதியில் அவை மங்கிவிடும்; புதிய மாயைகள் அவற்றின் இடத்தைப் பிடித்துக்கொள்ளும்.
2018-ல் டெல்லியில் நான் நடத்திய சொற்பொழிவுத் தொடரின்போது, அங்கு கூடியிருந்த பல முஸ்லிம் சகோதரர்கள் என்னிடம், 'நீங்கள் ஒரு இந்து அமைப்பு.
நீங்கள் இந்து ராஷ்டிரத்தைப் பற்றிப் பேசுகிறீர்கள். எங்களைப் போன்ற முஸ்லிம்களைப் பற்றி என்ன? எங்களை வெளியேற்றிவிடுவீர்களா?' என்று கேட்டார்கள்.
அதற்கு நான், 'இல்லை, அது இந்துத்துவா அல்ல. பாரதத்தில் முஸ்லிம்கள் இருக்கக்கூடாது என்று எந்த இந்து நினைத்தாலும், அவன் இந்துவாக இருப்பதை நிறுத்திவிடுவான்' என்று கூறினேன்.
மதங்கள் வேறுபட்டிருக்கலாம், ஆனால் மனிதநேயம் ஒன்றுதான் என்று பாரம்பரியமாகக் கூறும் ஒரு சமூகத்தில் நான் பணியாற்றுகிறேன். நான் உங்களைப் போல ஒரு மத அறிஞரோ, மத அதிகாரியோ அல்ல.
மதங்கள் வேறுபட்டிருக்கலாம், ஆனால் மனிதநேயம் ஒன்றுதான் என்று பாரம்பரியமாகக் கூறும் ஒரு சமூகத்தில் நான் பணியாற்றுகிறேன். உண்மை ஒன்றுதான், மனிதநேயம் அந்த உண்மையின் விளைபொருள். எனவே மனிதநேயம் ஒன்றுதான்.
அந்த உண்மை ஒரே உண்மைதான், ஆனால் அதை விவரிப்பவரைப் பொறுத்து அது பல வழிகளில் விவரிக்கப்படுகிறது. ஏனென்றால், மனிதர்களாகிய நாம், நமது தலையில் உருவாக்கப்பட்ட மென்பொருளின் கைதிகளாக இருக்கிறோம்.
பல மதங்கள் உள்ளன, இன்றைய உலகில் மதங்கள் பெரும்பாலும் சடங்குகளாலேயே வரையறுக்கப்படுகின்றன. ஒரு மத ஒழுக்கத்தைப் பின்பற்றுவதற்கும், தெய்வீகத்திற்கான அந்தப் பாதையைக் கையாள்வதற்கும், இந்த சடங்குகள் எனும் ஒழுக்கமும் அவசியமாகிறது” என்று அவர் கூறினார்.
முன்னதாக மோகன் பகவத் கலந்து கொள்ளும் நிகழ்ச்சிக்கு நியூயார்க் மேயர் ஜோஹ்ரான் மம்தானி எதிர்ப்பு தெரிவித்திருந்தார்.
மேலும் அவர், ஆர்.எஸ்.எஸ் தலைவர் கலந்துகொள்ளும் திட்டமிடப்பட்ட நிகழ்வை தான் ஆதரிக்கவில்லை என்றும், அந்த நிகழ்வை ரத்து செய்ய நகரத்திற்கு அதிகார வரம்பு இல்லாமல் இருக்கலாம் என்றும் குறிப்பிட்டார்.
இதையடுத்து நியூயார்க்கில் நடைபெற்ற ஆர்.எஸ்.எஸ் அமைப்பின் கூட்டத்திற்கு பல சிவில் உரிமை அமைப்புகள் எதிர்ப்பு தெரிவித்திருந்தன.