அமெரிக்காவின் உலகப் புகழ்பெற்ற சுற்றுலாத் தலமான நியூயார்க் நகரின் டைம்ஸ் சதுக்கத்தில் நேற்று மாலை மக்கள் கூட்ட நெரிசலுக்கு இடையே ஒரு பயங்கர கத்திக்குத்து சம்பவம் அரங்கேறியுள்ளது.
எவ்வித காரணமும் இன்றி பொதுமக்களைக் கத்தியால் குத்திய பெண் ஒருவரை நியூயார்க் நகர போலீசார் துப்பாக்கியால் சுட்டுக்கொன்றனர். இந்தத் தாக்குதலில் படுகாயமடைந்த இளம்பெண் ஒருவர் சிகிச்சை பலனின்றி பரிதாபமாக உயிரிழந்தார்.
டைம்ஸ் சதுக்கத்தின் 42வது வீதி மற்றும் 7வது அவென்யூ பகுதியில் நேற்று மாலை 4:30 மணியளவில் மக்கள் நடமாட்டம் அதிகமாக இருந்தபோது, கையில் இரண்டு பெரிய கத்திகளுடன் வந்த பெண் ஒருவர் திடீரென பொதுமக்களை நோக்கிப் பாய்ந்தார்.
அவர் முதலில் சாலையைக் கடக்கக் காத்திருந்த 68 வயது முதியவர் ஒருவரின் வயிற்றுப் பகுதியில் கத்தியால் பலமாகக் குத்தினார்.
அதற்கு அடுத்த 20 வினாடி இடைவெளியில், அங்கு நின்றுகொண்டிருந்த 32 வயது இளம்பெண் ஒருவரையும் வயிற்றுப் பகுதியில் கொடூரமாகக் குத்தினார்.
இரத்த வெள்ளத்தில் இரண்டு பேர் சரிந்ததைக் கண்டதும், டைம்ஸ் சதுக்கத்தில் இருந்த நூற்றுக்கணக்கான பொதுமக்கள் அலறியடித்துக்கொண்டு ஓடினர்.
தாக்குதலைத் தொடர்ந்து, அந்தப் பெண் அங்குள்ள போலீஸ் சப்ஸ்டேஷன் நோக்கி ஓடினார்.
தகவல் அறிந்து சம்பவ இடத்திற்கு விரைந்து வந்த நியூயார்க் நகர போலீசார், அந்தப் பெண்ணைச் சுற்றி வளைத்தனர். கத்திகளைக் கீழே போடுமாறு போலீசார் சுமார் 4 நிமிடங்கள் வரை அப்பெண்ணிடம் தொடர்ந்து எச்சரித்தனர்.
ஆனால், அதற்கு மறுப்புத் தெரிவித்த அந்தப் பெண், "நான் எதையும் கீழே போட மாட்டேன், உங்களை இருவரையும் கொன்றுவிடுவேன்" என்று போலீசாரை நோக்கி கத்திகளுடன் பாய்ந்தார்.
உடனடியாக போலீசார் அவரை நிலைநிறுத்த 'டேஸர்' கருவியைப் பயன்படுத்தினர். எனினும் அது பலனளிக்காததால், அதிகாரிகள் தற்காப்புக்காக அந்தப் பெண்ணை நோக்கி துப்பாக்கியால் சுட்டனர்.
துப்பாக்கிச் சூட்டில் குண்டு பாய்ந்து கீழே விழுந்த அந்தப் பெண்ணையும், கத்திக்குத்தால் பாதிக்கப்பட்ட இருவரையும் போலீசார் உடனடியாக மீட்டு பெல்லிவியூ மருத்துவமனைக்கு அனுப்பி வைத்தனர்.
அங்கு தீவிர சிகிச்சை அளிக்கப்பட்டும் பலனின்றி, வயிற்றுப் பகுதியில் பலத்த காயம் அடைந்திருந்த 32 வயது இளம்பெண் உயிரிழந்தார்.
அதேபோல், போலீசாரால் சுடப்பட்ட தாக்குதல் நடத்திய பெண்ணும் சிகிச்சை பலனின்றி உயிரிழந்தார். க
த்திக்குத்துக்கு உள்ளான 68 வயது முதியவருக்குத் தொடர்ந்து சிகிச்சை அளிக்கப்பட்டு வருவதாகவும், தற்போது அவரது உடல்நிலை சீராக உள்ளதாகவும் தெரிவிக்கப்பட்டுள்ளது.
இதுகுறித்து நியூயார்க் நகர மேயர் சோஹ்ரான் மம்தானி மற்றும் போலீஸ் கமிஷனர் ஜெசிகா டிஷ் ஆகியோர் செய்தியாளர்களைச் சந்தித்து விளக்கம் அளித்தனர்.
அவர்கள் கூறுகையில், தாக்குதல் நடத்திய பெண் குயின்ஸ் பகுதியைச் சேர்ந்த பாமெலா சிஸ்னெரோஸ் (49) என அடையாளம் காணப்பட்டுள்ளார். இவருக்கு ஏற்கனவே கடுமையான மனநலப் பாதிப்புகள் இருந்துள்ளன.
கடந்த 2018 மற்றும் 2019 ஆம் ஆண்டுகளில் இவரால் ஏற்பட்ட மனநலப் பிரச்சினைகள் குறித்து போலீஸ் பதிவேட்டில் தரவுகள் உள்ளன.
இந்த சம்பவத்திற்கும் பயங்கரவாதத்திற்கும் எந்தவிதமான தொடர்பும் இல்லை என்றும், இது முற்றிலும் மனநலம் பாதிக்கப்பட்ட ஒருவரால் எவ்வித தூண்டுதலும் இன்றி திடீரென நடத்தப்பட்ட தாக்குதல் என்றும் போலீசார் உறுதிப்படுத்தியுள்ளனர்.
மேலும், இந்தச் சம்பவம் தொடர்பாகத் துறை ரீதியான விரிவான விசாரணைக்கு உத்தரவிடப்பட்டுள்ளது.