சர்வதேச அளவில் ஆட்டோமொபைல் துறையை வியப்பில் ஆழ்த்தும் வகையில், பிரிட்டனின் பிரபல எஞ்சினியரிங் நிறுவனமான JCB உருவாக்கிய 'ஹைட்ரோமேக்ஸ்' ஹைட்ரஜன் வாகனம் புதிய உலக சாதனையைப் படைத்துள்ளது. அமெரிக்காவின் யுட்டா மாகாணத்தில் உள்ள போனிவில் உப்பளத்தில் நடைபெற்ற இந்த அதிவேகப் பயண சோதனையில், மணிக்கு 653.9 கி.மீ வேகத்தை எட்டி புதிய உலக நிலவேக சாதனையை பதிவு செய்துள்ளது.
சர்வதேச மோட்டார் விளையாட்டு கூட்டமைப்பான FIA (Federation Internationale de l'Automobile) விதிகளின்படி, உலக சாதனையாக அங்கீகரிக்கப்பட ஒரு வாகனம் ஒரு மணி நேரத்திற்குள் எதிர் எதிர் திசைகளில் இரண்டு முறை இயக்கப்பட்டிருக்க வேண்டும். அதன்படி தனது முதல் சுற்றில் மணிக்கு 644 கி.மீ (400.623 மைல்) வேகத்தையும், திரும்பிய இரண்டாவது சுற்றில் மணிக்கு 663 கி.மீ (412.135 மைல்) வேகத்தையும் தொட்டது. இந்த இரண்டு சுற்றுகளின் சராசரி வேகமான 653.9 கி.மீ வேகத்தின் அடிப்படையில் இந்த புதிய உலக சாதனை படைக்கப்பட்டு உள்ளது.
இதற்கு முன் 2004-இல் பி.எம்.டபிள்யூ ஹைட்ரஜன் வாகனம் பதிவு செய்த மணிக்கு 298 கி.மீ சாதனையை இந்த ஹைட்ரோமேக்ஸ் மிக எளிதாக முறியடித்துள்ளது. மேலும், 2006-ஆம் ஆண்டு இதே போனிவில் மைதானத்தில் JCB நிறுவனத்தின் டீசல்மேக்ஸ் வாகனம் படைத்த மணிக்கு 563 கி.மீ வேக சாதனையையும் மற்றும் ஹைட்ரஜன் ஃபியூல்-செல் முறையில் எட்டப்பட்ட மணிக்கு 486 கி.மீ வேகத்தையும் கடந்து வரலாற்றுச் சாதனை படைத்துள்ளது.
1997-ஆம் ஆண்டு 'த்ரஸ்ட் எஸ்.எஸ்.சி' என்ற ஜெட் வாகனத்தில் பயணித்து உலகின் ஒலியின் வேகத்தை நிலத்தில் கடந்து சாதனை படைத்த முன்னாள் விண்வெளிப் படை தளபதி ஆண்டி க்ரீன் இந்த சாதனையின் போதும் வாகனத்தை இயக்கியுள்ளார். 2006-இல் JCB டீசல் வாகனத்தை ஓட்டி சாதனை படைத்ததும் இவரே என்பது குறிப்பிடத்தக்கது.
32 அடி நீளம் கொண்ட இந்த ஹைட்ரோமேக்ஸ் வாகனம் ஃபியூல்-செல் மின்சாரத்திற்குப் பதிலாக, நேரடியாக ஹைட்ரஜனை எரிபொருளாகப் பயன்படுத்தும் என்ஜின்களைக் கொண்டுள்ளது. இதில் JCB கட்டுமான வாகனங்களில் பயன்படுத்தப்படும் தொழில்நுட்பத்தின் அடிப்படையில் உருவாக்கப்பட்ட இரண்டு ஹைட்ரஜன் என்ஜின்கள் பொருத்தப்பட்டு, மொத்தமாக 1,600 பி.ஹெச்.பி ஆற்றலை வெளிப்படுத்துகின்றன. புகைக் குழாய் வழியே பூஜ்ஜிய கார்பன் உமிழ்வைக் கொண்ட இந்த தொழில்நுட்பம், எதிர்கால போக்குவரத்து துறையில் ஹைட்ரஜன் ஆற்றலின் முக்கியத்துவத்தை உலகிற்கு நிரூபித்துள்ளது.