இஸ்ரேல் நாடாளுமன்றத்துக்கு நடைபெற்ற தேர்தலில் எந்த கட்சிக்கும் தனிப்பெரும்பான்மை கிடைக்காத நிலையில் ஆட்சி அமைப்பதில் இழுபறி நீடித்து வருகிறது.
இஸ்ரேல் நாட்டில் நடைபெற்ற பொதுத்தேர்தலில் நெதன்யாகு கட்சிக்கு பெரும்பான்மை கிடைக்கவில்லை. முன்னாள் ராணுவ தளபதி காடி ஐசன்கோட் கட்சி, அரபு கட்சிகளுடன் இணைந்து ஆட்சி அமைக்க முயற்சி செய்து வருகிறது. இதனால் நெதன்யாகு பிரதமர் பதவியில் இருந்து விலக வேண்டிய நிலை ஏற்பட்டுள்ளது.
இந்த நிலையில் தேர்தலுக்குப்பின் பாராளுமன்றம் கூடியது. பாராளுமன்ற முதல் செசனில் நெதன்யாகு பேசினார். அப்போது நெதன்யாகு "ஈரானிடம் இருந்து அதிகரித்து வரும் அச்சுறுத்தல்களை எதிர்கொள்ள, நாட்டில் தேசிய ஒற்றுமை அரசு அமைக்க வேண்டும்.
மிக விரைவில், அணு ஆயுதங்களை கொண்ட ஈரானையும், நம்மை அழித்தொழிக்க துடிக்கும் அந்த பயங்கரவாத ஆட்சியை தொடர்ந்து நீடிக்க செய்வதையும் ஏற்றுக் கொள்ளுமாறு சர்வதேச அழுத்தத்திற்கு நாம் ஆளாகப் போகிறோம்" என்றார்.
நெதன்யாகுவின் பேச்சுக்கு உடனடியாகப் பதிலளித்த காடி ஐசன்கோட், "நெதன்யாகு உரை அவமானகரமானது, பிரிவினையைத் தூண்டக்கூடியது. பதவியை விட்டு வெளியேறவுள்ள பிரதமரின் பேச்சு மாயையானது. வெறுப்புணர்வை தூண்டக்கூடியது. நெதன்யாகு அரசியல் ஆதாயத்திற்காக முக்கியமான அரசு நிகழ்வை பயன்படுத்தி கொண்டார். அவர் ஒரு நிமிடம்கூட பிரதமர் பதவியில் நீடிக்கத் தகுதியற்றவர்" என்றார்.
இஸ்ரேலின் 120 உறுப்பினர்களைக் கொண்ட நாடாளுமன்றத்தில் ஆட்சி அமைக்க 61 உறுப்பினர்களின் ஆதரவு தேவைப்படுகிறது.
நெதன்யாகுவின் கூட்டணிக்கு (46+7) 53 இடங்களும், ஐசன்கோட்டின் அணிக்கு 48 இடங்களும் உள்ளன. இதனால் புதிய அரசு அமைப்பதில் தொடர்ந்து இழுபறி நீடிக்கிறது. ஐசன்கோட் அரபு கட்சிகள் (19 இடங்கள்) கூட்டணியுடன் ஆட்சி அமைக்க முயற்சி மேற்கொண்டு வருகிறார்.