உலகம்

நேபாள வெள்ளம்: இடிபாடுகளில் இருந்து மீட்கப்பட்ட 97 வயது மூதாட்டி- போர் வீரனை போல் காட்சியளித்ததாக பேரன் உருக்கம்

ஜேசிபி மூலம் இடிபாடுகளில் சிக்கியிருந்த 97 வயது மூதாட்டியை நேபாள ராணுவத்தினர் மீட்டனர்.

நேபாள வெள்ளத்தில் மீட்பு பணிகள் மேற்கொள்ளப்பட்டு வரும் நிலையில் 97 வயதான மூதாட்டி ஒருவரை மீட்பு படையினர் ஜேசிபி இயந்திரத்தின் மூலமாக மீட்கும் காணொளி சமூக வலைதளத்தில் வெளியாகியுள்ளது.

97 வயது மூதாட்டி

நேபாள வெள்ளத்தில் சிக்கி மாயமாகி கட்டிட இடிபாடுகளுக்குள் சிக்கி இருந்த 97 வயதான மூதாட்டி குணா மாயா போஹரா என்பவரை மீட்பு குழுவினர் ஜேசிபி வாகனத்தின் மூலம் பத்திரமாக மீட்டனர்.

அந்த மூதாட்டியை கட்டிட இடிபாடுகளில் இருந்து வெளியே எடுப்பதற்கு, நேபாள ராணுவத்திற்கு சுமார் நான்கு மணி நேரம் ஆனது. இதையடுத்து மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்ட மூதாட்டி பூரண உடல்நலத்துடன் இருப்பதாக தெரிவிக்கப்பட்டுள்ளது.

இந்த மீட்பு நடவடிக்கை குறித்து மூதாட்டியின் கொள்ளு பேரன் தீபக் போஹரா கூறுகையில், எனது மகனும், எனது சகோதரரும் கயிறு வழியாக கீழே இறங்கி மூதாட்டி உயிருடன் இருப்பதை உறுதி செய்தனர்.

மேலும் எனது பாட்டி போரில் வெற்றி பெற்று திரும்பும் ஒரு போர்வீரனை போல காட்சியளித்ததாகவும் அவரின் கொள்ளுப் பேரன் கூறினார்.

நேபாள வெள்ளம்

நேபாளத்தில் ஏற்பட்ட பேரழிவு வெள்ளத்தில் இதுவரையில் குறைந்தது 676 உடல்கள் மீட்கப்பட்டுள்ளன. மேலும் 300க்கும் மேற்பட்ட இந்தியர்கள் உட்பட, கிட்டத்தட்ட 3,000 பொதுமக்கள் வெள்ளத்தில் சிக்கி காணாமல் போயுள்ளனர்.

குடியிருப்பு பகுதிகளில் வெள்ளம் சூழ்ந்து வீடுகள் முதல் குடியிருப்புகள் வரை, அனைத்தையும் அடித்து கொண்டு போனது.

இதையடுத்து நேபாளத்தில் காணாமல் போனவர்களை மீட்கும் பணியில் பேரிடர் மற்றும் நிவாரண மீட்பு படையினர் ஈடுபட்டு வருகின்றனர்.

நேபாள மீட்பு படையினருடன், இந்தியா, சீனா, ஆஸ்திரேலியா மற்றும் தென் கொரியா ஆகிய நாடுகளை சேர்ந்த மீட்பு மற்றும் நிவாரண குழுவினர்களும் இணைந்து செயல்பட்டு வருகின்றனர்.

இதற்கிடையில் நேபாளத்தில் புதிதாக மழை மற்றும் இடியுட கூடிய மழை பெய்யக்கூடும் என்று வானிலை ஆய்வு மையம் எச்சரிக்கை விடுத்துள்ளது.

நேபாள வெள்ளம் குறித்து அந்நாட்டின் நிதி அமைச்சர் ஸ்வர்னிம் வாக்லே கூறுகையில், வெள்ளத்திற்கு பிறகு நாட்டை மீண்டும் கட்டியெழுப்ப சுமார் 4 பில்லியன் முதல் 5 பில்லியன் டாலர் வரை தேவைப்படும் என்றும், இது நாட்டின் பொருளாதாரத்தில் கிட்டத்தட்ட பத்தில் ஒரு பங்கிற்கு சமம் என்றும் கூறினார்.