உலகம்

நேபாள வெள்ளப் பேரழிவு: அடையாளம் தெரியாத சடலங்களை அடக்கம் செய்யத் திட்டம்

உடல்கள் அடக்கம் செய்யப்பட்டாலும், எதிர்காலத்தில் உறவினர்கள் தங்களது குடும்பத்தினரை அடையாளம் கண்டுகொள்ளப் பல நவீன வழிமுறைகள் பின்பற்றப்படுகின்றன.

வெள்ளப்பெருக்கில் பலியானவர்களின் சடலங்கள் தொடர்ந்து அழுகும் அபாயத்தில் இருப்பதால், சுகாதாரச் சீர்கேட்டைத் தவிர்க்க அவற்றை உடனடியாக அடக்கம் செய்ய அதிகாரிகள் நடவடிக்கை எடுத்து வருகின்றனர்.

நேபாளத்தில் கடந்த புதன்கிழமை ஏற்பட்ட திடீர் வெள்ளப்பெருக்கு மற்றும் நிலச்சரிவு காரணமாக நாடு முழுவதும் பெரும் பேரழிவு ஏற்பட்டுள்ளது. மலைப்பகுதிகளில் ஏற்பட்ட சுனாமி போன்ற சேறு மற்றும் வெள்ளப் பெருக்கால் கிராமங்களும் நகரங்களும் கடுமையாகப் பாதிக்கப்பட்டுள்ளன.

இதுவரை மேற்கொள்ளப்பட்ட மீட்புப் பணிகளில் 734 சடலங்கள் மீட்டெடுக்கப்பட்டுள்ள நிலையில், மேலும் 2,400க்கும் மேற்பட்டோர் மாயமாகியுள்ளனர். பலியானவர்களின் சடலங்கள் தொடர்ந்து அழுகும் அபாயத்தில் இருப்பதால், சுகாதாரச் சீர்கேட்டைத் தவிர்க்க அவற்றை உடனடியாக அடக்கம் செய்ய அதிகாரிகள் நடவடிக்கை எடுத்து வருகின்றனர்.

இந்திய எல்லையோர மாவட்டமான சித்வானில் அதிகபட்சமாக 233 சடலங்கள் கண்டெடுக்கப்பட்டுள்ளன. இங்குள்ள மருத்துவமனைகளில் போதிய குளிரூட்டும் வசதிகள் இல்லாததால், தற்காலிக ஏற்பாடாகக் கட்டடங்களில் சடலங்கள் வைக்கப்பட்டன. எனினும், துர்நாற்றம் மற்றும் தொற்றுநோய் பரவும் அபாயம் கருதி, அடையாளம் தெரியாத உடல்களை உடனடியாக அடக்கம் செய்ய சுகாதார வல்லுநர்கள் அறிவுறுத்தியுள்ளனர்.

டிஎன்ஏ மாதிரிகள்

உடல்கள் அடக்கம் செய்யப்பட்டாலும், எதிர்காலத்தில் உறவினர்கள் தங்களது குடும்பத்தினரை அடையாளம் கண்டுகொள்ளப் பல நவீன வழிமுறைகள் பின்பற்றப்படுகின்றன. ஒவ்வொரு உடலிலும் டிஎன்ஏ மாதிரிகள் சேகரிக்கப்பட்டு, அவற்றுக்குத் தனித்துவமான குறிப்பு எண்கள் வழங்கப்படுகின்றன. சடலங்கள் 1.5 மீட்டர் ஆழமுள்ள குழிகளில் 40 சென்டிமீட்டர் இடைவெளியில் தனித்தனியாகப் புதைக்கப்படுகின்றன.

அடக்கம் செய்யப்படும் இடத்தை அடையாளப்படுத்த அதன் மேல் கான்கிரீட் தளமும், அதனுடன் கூடிய தகவல் பலகையும் அமைக்கப்படுகிறது. மேலும், இந்தப் புதைக்கும் நிகழ்வு முழுவதும் புகைப்படம் மற்றும் வீடியோ பதிவு செய்யப்படுவதோடு, அந்த இடத்தின் புவிசார் குறியீடும் பதிவு செய்யப்படுகிறது.

உறவினர்கள் கண்டறியும் நடைமுறை

காணாமல் போனவர்களைத் தேடும் உறவினர்கள் நேபாளத்தில் உள்ள பல்வேறு மருத்துவமனைகளில் தங்களது டிஎன்ஏ மாதிரிகளை வழங்கலாம். நேபாள சுகாதாரத் துறை, அடக்கம் செய்யப்பட்ட உடல்களிலிருந்து பெறப்பட்ட டிஎன்ஏ தரவுகளுடன் உறவினர்களின் மாதிரிகளை ஒப்பீடு செய்யும். டிஎன்ஏ பொருத்தம் உறுதி செய்யப்பட்டால், காவல்துறை பதிவேடுகளின் உதவியுடன் குறிப்பிட்ட புதைவிடம் கண்டறியப்பட்டு, சடலம் தோண்டி எடுக்கப்பட்டு உறவினர்களிடம் ஒப்படைக்கப்படும்.

பொதுமக்கள் எளிதில் அறியும் வகையில் அடையாளம் தெரியாத உடல்களின் விவரங்கள் மற்றும் புகைப்படங்கள் நேபாள காவல்துறையின் அதிகாரப்பூர்வ இணையதளத்திலும் பதிவேற்றம் செய்யப்பட்டுள்ளன.