நேபாளம் மற்றும் திபெத் எல்லைப் பகுதிகளில் ஏற்பட்ட திடீர் வெள்ளப்பெருக்கு மற்றும் நிலச்சரிவு பெரும் பேரழிவை ஏற்படுத்தியுள்ளது. இந்த நிலையில், திபெத் பகுதியின் உள்ளூர் மக்கள் தங்களது சமூக வலைதளங்களில் பதிவிட்ட வெள்ளப் பாதிப்பு வீடியோக்கள் மற்றும் தகவல்களை சீனா அரசு தீவிரமாக நீக்கி வருவதாக அதிர்ச்சித் தகவல்கள் வெளியாகியுள்ளன.
நேபாளம் மற்றும் திபெத் எல்லைப் பகுதிகளில் ஏற்பட்ட திடீர் வெள்ளப்பெருக்கு மற்றும் நிலச்சரிவு பெரும் பேரழிவை ஏற்படுத்தியுள்ளது. இந்த நிலையில், திபெத் பகுதியின் உள்ளூர் மக்கள் தங்களது சமூக வலைதளங்களில் பதிவிட்ட வெள்ளப் பாதிப்பு வீடியோக்கள் மற்றும் தகவல்களை சீனா அரசு தீவிரமாக நீக்கி வருவதாக அதிர்ச்சித் தகவல்கள் வெளியாகியுள்ளன. ஜின்பிங் தலைமையிலான சீனக் கம்யூனிஸ்ட் கட்சியின் இந்த இணையத் தணிக்கை சர்வதேச அளவில் கடும் விமர்சனத்திற்கு உள்ளாகியுள்ளது.
திபெத்தின் கைரோங் எல்லைப் பகுதியில் வெள்ளம் வீடுகளையும் சுங்கச் சாவடியையும் அடித்துச் செல்லும் பயங்கர காட்சிகளை திபெத்திய மக்கள் விசாட் உள்ளிட்ட சமூக வலைதளங்களில் பதிவிட்டனர். ஆனால், அந்த வீடியோக்கள் வெளியான சில மணி நேரங்களிலேயே இணையத்திலிருந்து முழுமையாக நீக்கப்பட்டன. மேலும், பாதிக்கப்பட்ட மக்கள் உதவி கோரி வெளியிட்ட பதிவுகளும், கணக்குகளும் முடக்கப்பட்டுள்ளதாக சர்வதேச ஊடகங்கள் தெரிவிக்கின்றன. உண்மையான பாதிப்பின் அளவை மறைக்க சீனா முயல்வதாக குற்றச்சாட்டு எழுந்துள்ளது.
பாதிப்பின் தீவிரத்தை விளக்கும் வீடியோக்களை நீக்கிவிட்டு, அரசு ராணுவமும் மீட்புக் குழுவினரும் ஹெலிகாப்டர்கள் மூலம் மேற்கொண்டு வரும் மீட்பு நடவடிக்கைகளை மட்டுமே சீன அரசு ஊடகங்கள் பரப்பி வருகின்றன. ஜின்பிங்கின் வழிகாட்டுதலில் மீட்புப் பணிகள் தீவிரமாக நடைபெறுவதாக மட்டுமே செய்திகள் வெளியிடப்படுகின்றன. திபெத் பகுதியில் சுதந்திரமான ஊடகப் பதிவுகளுக்குக் கடும் கட்டுப்பாடுகள் விதிக்கப்பட்டுள்ளதால் உண்மையான சேத விவரங்கள் வெளிவராமல் முடக்கப்பட்டுள்ளன.
துல்லியமான தகவல்கள் மற்றும் பதிவுகள் மறைக்கப்படுவதால் மீட்புப் பணிகளின் வெளிப்படைத்தன்மை கேள்விக்குறியாகியுள்ளது. பாதிக்கப்பட்ட மக்களின் சரியான எண்ணிக்கை மற்றும் அவர்கள் இருக்கும் இடங்கள் குறித்த விவரங்கள் கிடைக்காததால், எல்லை தாண்டிய மீட்பு முயற்சிகள் பாதிக்கப்படலாம் என சர்வதேச வல்லுநர்கள் கவலை தெரிவித்துள்ளனர். கொரானா காலத்தில் தகவல்களை மூடி மறைத்ததைப் போலவே, தற்போதும் சீனா பேரழிவுச் செய்திகளை மறைப்பதாக ஆய்வாளர்கள் சுட்டிக்காட்டுகின்றனர்.