நேபாளத்தை உலுக்கிய வெள்ளப்பெருக்கில் பலர் சிக்கியுள்ள நிலையில், பலி எண்ணிக்கை 500-ஆக உயர்ந்துள்ளது.
நேபாளத்தில் நேற்று முன்தினம் ஏற்பட்ட காட்டாற்று வெள்ளம், அங்குள்ள மத்திய மாவட்டங்களை உருக்குலைத்து உள்ளது.
திபெத்தின் இமயமலை பகுதியில் உருவாகும் கோலா ஆறு, நேபாளம் எல்லைப்பகுதி வழியாக பாய்ந்து நேபாளத்தின் ரசுவா மாவட்டத்தை அடைகிறது.
அதன்பின் சிறு ஆறுகளுடன் இணைந்து ரசுவா பகுதியில் போடே கோஷி ஆறாக ஓடுகிறது. இதற்கிடையே பனிச்சரிவு காரணமாக லெண்டே கோலா ஆற்றில் கடும் வெள்ளப்பெருக்கு ஏற்பட்டு நேபாளத்தை நோக்கி அசுர வேகத்தில் பாய்ந்தது.
சுமார் 30 அடி உயரத்தில் பாறைகள், மண் உள்ளிட்டவைகளுடன் சீறி வந்த காட்டாற்று வெள்ளம் நேபாளத்தின் ரசுவா, தாடிங் ஆகிய மாவட்டங்களில் ஓடும் போடே கோஷி ஆற்றில் நுழைந்தது. அந்த ஆற்றின் வழியாக திரிசூலி ஆற்றில் கலந்து வெள்ளம் பெருக்கெடுத்து ஓடியது.
கட்டுக்கடங்காமல் சென்ற காட்டாற்று வெள்ளம் ஆறுகளின் இருபுறமும் உள்ள வீடுகள், பெரிய கட்டிடங்கள், சாலைகள், பாலங்கள், வாகனங்கள்,மின் நிலையங்களை அடித்துச் சென்றது. இதில் ஒரு கிராமத்தை சில வினாடிகளில் வெள்ளம் வாரி சுருட்டி சென்றது.
இந்த காட்டாற்று வெள்ளத்தில் 32 நாடுகளை சேர்ந்த சுற்றுலா பயணிகள் உள்பட ஆயிரக்கணக்கானோர் அடித்து செல்லப்பட்டனர்.
இதையடுத்து மீட்புப்பணிகளில் நேபாள ராணுவம், போலீசார் மற்றும் மீட்புக்குழுக்கள் ஈடுபட்டு வருகின்றன. அக்கு ழுக்கள் சேறு-சகதிகளில் இருந்து உடல்களை மீட்டு வருகிறார்கள்.
இதில் தோண்ட, தோண்ட உடல்கள் வந்த வண்ணம் உள்ளதாக அதிகாரிகள் தெரிவித்தனர். நேற்று நிலவரப்படி வெள்ளத்தில் சிக்கி பலியானவர்களின் எண்ணிக்கை 392-ஆக அதிகரித்தது. இன்று 3-வது நாளாக மீட்புப்பணிகள் நடந்து வரும் நிலையில் சேறு-சகதிகளில் இருந்து தொடர்ந்து உடல்கள் மீட்கப்பட்டு வருகின்றன.
பல கிலோ மீட்டர் தூரத்திற்கு வெள்ளம் பாய்ந்த பகுதிகளில் சேறு-சகதி, மண் குவியல்கள் காணப்படுகின்றன. அதில் உடல்கள் புதைந்திருந்த நிலையில் கடும் சவாலுக்கு மத்தியில் மீட்புப்பணிகள் நடந்து வருகிறது. சேறு-சகதிகள், பாறைகளை அகற்றி உடல்கள் மீட்கப்படுகின்றன.
பெரும்பாலும் உடல்கள் உருக்குலைந்த நிலையில் காணப்பட்டன. மீட்புப்பணிகளில் பொதுமக்களும் உதவி வருகிறார்கள். அவர்களும் சிலரது உடல்களை மீட்டனர்.
இந்த நிலையில் வெள்ளத்தில் சிக்கி பலியானவர்களின் எண்ணிக்கை 500-ஆக உயர்ந்து உள்ளது என்று அதிகாரிகள் தெரிவித்தனர். அவர்களது உடல்கள் 8 மாவட்டங்களில் இருந்து மீட்கப்பட்டுள்ளதாக நேபாள போலீசார் வெளியிட்ட அறிக்கையில் தெரிவிக்கப்பட்டு உள்ளது.
இதில் அதிகபட்சமாக சித்வான் மாவட்டத்தில் 178 உடல்கள் கண்டெடுக்கப்பட்டன. நவல்ப்பராசி கிழக்கு மாவட்டத்தில் 110 உடல்களும், கோர்கா மாவட் டத்தில் 44 உடல்களும், நுவாகோட் மாவட்டத்தில் 37 உடல்களும், தாடிங் மாவட்டத்தில் 33 உடல்களும் மீட்கப்பட்டுள்ளன.
தனஹு மாவட்டத்தில் 28 உடல்களும், நவல்ப்பராசி மேற்கு மாவட்டத்தில் 27 உடல்களும், ரசுவா மாவட் டத்தில் 12 உடல்களும் மீட்கப்பட்டுள்ளன.
பல்வேறு பகுதிகளில் இருந்து காயமடைந்த மற்றும் சிக்கித் தவித்த 1,545 பேர் மீட்கப்பட்டுள்ளனர். இவர்களில் 84 பேர் தலைநகர் காத்மாண்டுவில் உள்ள மருத்துவமனைகளில் சிகிச்சை பெற்று வருகின்றனர்.
மீட்பு - நிவாரணப் பணிகளுக்காக 14 ஹெலிகாப்டர்கள் மற்றும் பேரிடர் மீட்புக் குழுக்கள் பணியில் ஈடுபடுத்தப்பட்டு உள்ளதாக நேபாள ராணுவம் தெரிவித்துள்ளது.
இந்தியர்கள் நேபாளம், திபெத்தில் வெள்ள பாதிப்பில் சிக்கி வெளிநாட்டினர் உள்பட 1468 பேர் மாயமாகி உள்ளனர். இதில் நேபாளத்தில் உள்ள 517 வெளிநாட்டினர் உள்பட 910 பேரை இன்னும் தொடர்பு கொள்ள முடியவில்லை.
இதற்கிடையே நேபாளத்துக்கு ஆன்மிக சுற்றுலா சென்ற 21 தமிழர்கள் மீட்கப்பட்டு உள்ளதாக மத்திய அரசு நேற்று தெரிவித்து இருந்தது. இந்த நிலையில் நேபாளத்தின் திரிசூலி-1 மின் திட்ட பகுதியில் பணிபுரிந்த 63 இந்திய தொழிலாளர்கள் மீட்கப்பட்டு உள்ளதாக தெரிவிக்கப்பட்டு உள்ளது. மீட்கப்பட்ட தொழிலா ளர்களின் பெயர் விவரங்களை மத்திய வெளியுற வுத்துறை வெளியிட்டது.
இதற்கிடையே 90 அமெரிக்கர்கள் வெள்ளத்தில் சிக்கி மாயமாகி உள்ளனர் என்றும் அவர்களின் நிலை குறித்த தகவல் ஏதும் இல்லை என்றும் அமெரிக்க அதிகாரிகள் தெரிவித்தனர்.
இதுதொடர்பாக அமெ ரிக்க வெளியுறவுத்துறை கூறும்போது, அமெரிக்கர்கள் யாரும் உயிரிழந்ததாகத் தகவல் இல்லை என்றும், 3 அமெரிக்கர்கள் மீட்கப்பட்டுள்ளனர் என்றும் தெரிவித்தது.