உலகம்

நீடித்த அமைதிக்கு பேச்சுவார்த்தையை தொடர வேண்டும்.. அமெரிக்கா - ஈரானுக்கு பாகிஸ்தான் வலியுறுத்தல்

இரண்டு, மூன்று முக்கிய பிரச்சனைகளில் கருத்து வேறுபாடுகள் நீடிக்கின்றன என்று பகாய் கூறினார்.

அமெரிக்கா- ஈரான் இடையிலான இடைக்கால போர் நிறுத்தம் கடந்த 7-ந்தேதி இரண்டு வார ஏற்பட்டது.

நிரந்தர போர் நிறுத்தத்திற்கான பேச்சுவார்த்தை நேற்று பாகிஸ்தானில் நடந்தது.

அமெரிக்காவின் துணை அதிபர் ஜே.டி. வான்ஸ் தலைமையிலான அமெரிக்கா பிரதிநிதிகள் மற்றும் ஈரான் பிரதிநிதிகள் நேற்று பாகிஸ்தான் தலைநகர் இஸ்லாமாபாத் வருகை தந்து 21 மணி நேரம் பேச்சுவார்த்தை நடத்தினர்.

பேச்சுவார்த்தை தோல்வி

ஆனாலும் எந்த உடன்படிக்கையும் ஏற்படவில்லை. ஜே.டி. வான்ஸ் அத்துடன் அமெரிக்கா புறப்பட்டுச் சென்றார். ஈரான் பிரதிநிதிகளும் புறப்பட்டனர்.

அமெரிக்கா, நியாயமற்ற கோரிக்கைகளை வைப்பதாக ஈரான் தரப்பில் தெரிவிக்கப்பட்டுள்ளது.

இந்த சூழலில் மத்தியஸ்தராக பாகிஸ்தான் இரு நாடுகளும் பேச்சுவார்த்தையை தொடர வேண்டும் என்று வலியுறுத்தியுள்ளது.

பாகிஸ்தான் சொல்வது என்ன?

அமெரிக்காவும் ஈரானும் போர் நிறுத்தத்திற்கு உறுதியுடன் இருக்க வேண்டும் என்றும், நேர்மறையான மனப்பான்மையுடன் பேச்சுவார்த்தைகளைத் தொடர வேண்டும் என்றும் பாகிஸ்தானின் துணைப் பிரதமர் இஷாக் டார் வலியுறுத்தியுள்ளார்.

"பிராந்தியத்தில் நீடித்த அமைதி மற்றும் செழிப்பை அடைவதற்கு இரு தரப்பினரும் இணைந்து செயல்படுவது அவசியம். இரு தரப்பினருக்கும் இடையிலான பேச்சுவார்த்தைகளுக்கு பாகிஸ்தான் தொடர்ந்து தளமாக இருக்கும்.

போர் நிறுத்தப் பேச்சுவார்த்தைகளில் பாகிஸ்தானின் பங்கை அங்கீகரித்ததற்காக இரு நாடுகளுக்கும் நன்றி" என்று அவர் தெரிவித்தார்.

ஈரான் சொல்வது என்ன?

இதற்கிடையே, ஒரே சுற்றுப் பேச்சுவார்த்தையில் அமெரிக்காவுடன் ஒரு உடன்பாட்டை எதிர்பார்ப்பது யதார்த்தமற்றது என்று ஈரான் வெளியுறவு அமைச்சகத்தின் செய்தித் தொடர்பாளர் இஸ்மாயில் பகாய் கூறினார்.

சில பிரச்சனைகளில் இரு தரப்பினரும் ஒரு உடன்பாட்டிற்கு வந்துள்ளனர், ஆனால் இரண்டு, மூன்று முக்கிய பிரச்சனைகளில் கருத்து வேறுபாடுகள் நீடிக்கின்றன என்று பகாய் கூறினார்.

இந்தப் பிரச்சினைக்கு அமெரிக்கா முக்கியத்துவம் அளிக்கும் அதேவேளை, ஈரானின் நியாயமான உரிமைகளும் நலன்களும் அங்கீகரிக்கப்படுவதை பொறுத்தே பேச்சுவார்த்தைகளின் முன்னேற்றம் அமையும் என்றும் அவர் மேலும் கூறினார்.