டிரம்பின் நிர்வாண சிலை ஐரோப்பிய நாடாளுமன்றத்தில் காட்சிக்கு வைக்கப்பட்டுள்ளது சர்ச்சையை ஏற்படுத்தியுள்ளது.
அமெரிக்க அதிபர் டொனால்ட் டிரம்பின் தங்க நிற நிர்வாண சிலையை ஐரோப்பிய நாடாளுமன்றம் காட்சிக்கு வைத்துள்ளது.
பிரான்சின் ஸ்ட்ராஸ்பர்க்கில் உள்ள ஐரோப்பிய நாடாளுமன்றக் கட்டிடத்தில், டேனிஷ் ஐரோப்பிய நாடாளுமன்ற உறுப்பினர் பெர் கிளாசென் இந்தக் கண்காட்சியை ஏற்பாடு செய்திருந்தார்.
சட்டத்தின் ஆட்சி, ஜனநாயக விழுமியங்கள் மற்றும் பருவநிலை மாற்றத்திற்கு எதிரான கூட்டு முயற்சிகளுக்கு டிரம்ப் ஓர் அச்சுறுத்தல் என்பதைச் சுட்டிக்காட்டும் வகையில் இந்த கலைப்படைப்பு காட்சிப்படுத்தப்பட்டுள்ளது.
ஐரோப்பிய நாடாளுமன்றத்தில் இந்தக் கண்காட்சிக்கு விமர்சனங்கள் எழுந்தபோதிலும், ஒருவர் அச்சத்திலும் சுய தணிக்கையிலும் வாழ முடியாது என்றும், உலக அரங்கில் தங்களைத் தாங்களே நிலைநிறுத்திக் கொள்ள முடியாத அளவுக்கு அதிக உணர்ச்சிவசப்படுபவர்களுக்கு இடமில்லை என்றும் பெர் கிளாசென் தெரிவித்துள்ள.
ஐரோப்பிய ஆணையர்கள் உள்ளிட்ட முக்கியப் பிரமுகர்கள் வருகை தரும் இந்த இடம், இதற்கு மிகச் சரியான இடம் என்றும் அவர் மேலும் கூறினார்.
இந்தச் சிலையை டேனிஷ் கலைஞர் ஜென்ஸ் கால்ஸ்ஜோட் உருவாக்கினார். 23 காரட் தங்கம் பூசப்பட்ட இந்தச் சிற்பம் 'ஆரஞ்சு பிளேக்' என்று அழைக்கப்படுகிறது.
8.5 அடி உயரமுள்ள இந்தச் சிற்பம், தன்னை விட சிறிய மற்றொரு மனிதனின் தோள்களின் மீது டிரம்ப் நிர்வாணமாக அமர்ந்திருப்பதைச் சித்தரிக்கிறது.
சிற்பத்தின் கீழே உள்ள வாசகம், "நான் ஒரு மனிதனுக்கு மேல் இருக்கிறேன். என் பாரத்தால் அவன் சரிந்து கொண்டிருக்கிறான். அவனுக்கு உதவ நான் எதையும் செய்வேன், ஆனால் அவன் முதுகிலிருந்து நான் இறங்க மாட்டேன்" என்று கூறுகிறது.
இந்த சிலை இன்றுவரை இங்கு காட்சிக்கு வைக்கப்படும். அதன்பிறகு, இது நவம்பர் மாதம் துருக்கியில் நடைபெறும் பருவநிலை உச்சிமாநாட்டிற்கு எடுத்துச் செல்லப்படும்.
இதற்கு முன்னர் இது, பிரேசிலில் நடைபெற்ற COP30, மியூனிக் பாதுகாப்பு மாநாடு, மற்றும் டென்மார்க், கோபன்ஹேகனில் நடைபெற்ற புனரமைப்பு விழா போன்ற முக்கிய இடங்களில் காட்சிப்படுத்தப்பட்டுள்ளது.
அமெரிக்காவின் குடியேற்றக் கொள்கைகள், பாதுகாப்புச் செலவினங்கள் மற்றும் நேட்டோ உறுதிமொழிகள் குறித்த டிரம்பின் நிலைப்பாடு, ஐரோப்பாவுடன் ஆழமான பிளவுகளை ஏற்படுத்தியுள்ளது.
டென்மார்க்கின் தன்னாட்சிப் பகுதியான கிரீன்லாந்தைக் கையகப்படுத்தும் டிரம்பின் நடவடிக்கையும், ஐரோப்பிய நாடுகளின் வலுவான எதிர்ப்பும் சமீபத்தில் பெரும் சர்ச்சைகளுக்கு வழிவகுத்துள்ளன.
கடந்த மாதம் அமெரிக்கா, டென்மார்க் மற்றும் கிரீன்லாந்துடன் ஒரு புதிய பாதுகாப்பு ஒப்பந்தத்தில் கையெழுத்திட்ட போதிலும், டிரம்பின் கொள்கைகள் ஐரோப்பிய ஒன்றியத்துடனான உறவுகளில் தொடர்ந்து உராய்வை ஏற்படுத்தி வருகின்றன.
பிரான்சில் நடந்த மாணவர் போராட்டங்கள் குறித்த டிரம்பின் கருத்துக்களும் சர்ச்சையை ஏற்படுத்தியுள்ளது.