மியான்மர் 
உலகம்

மியான்மர்: புத்த மடாலயம் மீது ராணுவம் வான்வழி தாக்குதல் - 14 பொதுமக்கள் பலி, 20 பேர் காயம்

கடந்த 5 ஆண்டுகளில் 1,00,000க்கும் அதிகமானோர் உயிரிழந்துள்ளனர்.

மியான்மரில் புத்த மடாலயம் மீது அந்நாட்டு ராணுவம் நடத்திய வான்வழித் தாக்குதலில் 14 பேர் பலியாகினர். 20 பேர் காயமுற்றனர்.

ராணுவ ஆதிக்கம்

பிப்ரவரி 2021இல் ஆங் சான் சூச்சியின் தேர்ந்தெடுக்கப்பட்ட அரசாங்கத்தைக் கவிழ்த்து ராணுவம் ஆட்சியைக் கைப்பற்றியது.

ராணுவத்துக்கு எதிராக பல்வேறு கிளர்ச்சிக் குழுக்கள் மியான்மரில் செயல்பட்டு வருகின்றன.

அதில் குறிப்பிடத்தக்கது ஜனநாயக ஆதரவுப் படை. கிளர்ச்சியார்களை குறிவைத்து ராணுவம் நடத்தி வரும் தாக்குதலில் அப்பாவி மக்கள் பலர் கொல்லப்படுவது தொடர்கதையாகி வருகிறது.

2025-இல் மியான்மரில் தேர்தல் நடத்தப்பட்டு ராணுவ ஆதரவு பெற்ற USDP கட்சி வெற்றி பெற்றது. முன்னாள் ராணுவ ஜெனரல் மின் ஆங் ஹ்லேய்ங் அதிபராகபொறுப்பேற்றுக்கொண்டார்.

இது வெளியுலகிற்கு ராணுவம் நடத்திய கண்துடைப்பு நாடகமாக பார்க்கப்படுகிறது.

தாக்குதல்

இந்த நிலையில் தான் மத்திய மியான்மரில் உள்ள மியாவ்ங் பகுதியில் உள்ள ஸ்வெல் லே ஓ என்ற கிராமத்தில் நேற்று ராணுவம் வான்வெளித் தாக்குதல் நடத்தியுள்ளது.

ராணுவப் போர் விமானம் ஒன்று 15 நிமிட இடைவெளியில் இரண்டு குண்டுகளை வீசியுள்ளது. இதில் இரண்டாவது குண்டு அருகில் இருந்த வீடு ஒன்றையும் சேதப்படுத்தியது.

தகவலின்படி, இத்தாக்குதலில் 3 பெண்கள் உட்பட 14 பேர் உயிரிழந்தனர். 20 பேர் படுகாயமடைந்தனர்.

வழிபாட்டு நிகழ்வு

பௌத்தர்களின் புனித காலத்தை குறிக்கும் வகையில் மடாலயத்தில் ஒருங்கிணைக்கப்பட்ட ஒரு வார கால தியானப் பயிற்சியில் 100 க்கும் மேற்பட்ட பொதுமக்கள் பங்கேற்றிருந்த போது இத்தாக்குதல் நடத்தப்பட்டுள்ளது.

"இது தவறாக இலக்கு வைக்கப்பட்ட தாக்குதல் அல்ல; அவர்கள் வேண்டுமென்றே பௌத்த விகாரையை இலக்கு வைத்துத் தாக்கியுள்ளனர்" என்று ஜனநாயக ஆதரவு கிளர்ச்சியாளர் ஒருவர் குற்றம் சாட்டியுள்ளார்.

கண்டனம்

மியான்மரில் பொதுமக்களுக்கு எதிராக ராணுவம் திட்டமிட்ட வான்வழித் தாக்குதல்களை நடத்தி வருவதாக ஐக்கிய நாடுகள் சபையின் விசாரணை அமைப்பு குற்றம் சாட்டியுள்ளது.

திருமணங்கள் மற்றும் மத விழாக்களில் பொதுமக்கள் கூடும் இடங்களை இலக்கு வைத்து தாக்குதல் நடத்துவதை ராணுவம் ஒரு பயங்கரவாத உத்தியாகப் பயன்படுத்தி வருவதாக சர்வதேச மோதல் கண்காணிப்பு அமைப்பான ACLED தெரிவித்துள்ளது.

ராணுவ விளக்கம்

எனினும், பயங்கரவாதக் குழுக்களுக்கு எதிராகவே தாங்கள் நடவடிக்கை எடுப்பதாகவும், பொதுமக்களுக்குப் பாதிப்பு ஏற்படாதவாறு கட்டுப்பாட்டுடன் செயல்படுவதாகவும் மியான்மர் வெளியுறவு அமைச்சகம் தெரிவித்துள்ளது.

உள்நாட்டு போர்

நாட்டின் பெரும்பாலான பகுதிகள் ஆயுதமேந்திய உள்நாட்டுப் போருக்குள் தள்ளப்பட்டன. கடந்த 5 ஆண்டுகளில் 1,00,000க்கும் அதிகமானோர் இதில் உயிரிழந்துள்ளனர்.