காட்டில் மிருகங்களுடன் வளர்ந்த தார்சன், ஜங்கிள் புக் கதையில் வரும் மௌக்லி உள்ளிட்ட கற்பனை கதாபாத்திரங்களை நாம் கேள்விப்பட்டிருப்போம்.
அவ்வாறு நிஜ வாழ்வில் ஓநாய்களுடன் வாழ்ந்து, 'ஓநாய் மனிதர்' என பெயரெடுத்த மார்கோஸ் ரோட்ரிகஸ் பாண்டோஜா என்பவர் தனது 80வது வயதில் கடந்த ஆகஸ்ட் 15 அன்று காலமானார்.
ஸ்பெயினில் 1946 இல் வறுமைச் சூழலில் பிறந்தவர் மார்கோஸ். வருக்கு 6 அல்லது 7 வயது இருக்கும்போது அவரை அவரது தந்தை ஒரு ஆடு மேய்ப்பரிடம் விற்றுவிட்டார்.
அந்த ஆடு மேய்ப்பரிடம் வேலை செய்து வளர்ந்த மார்கோஸ் அவர் இறந்த பிறகு, ஆதரவுமின்றி மலை காட்டில் தனித்து விடப்பட்டார்.
இருப்பினும் அங்குள்ள இயற்கையோடும் விலங்குகளோடும் மெல்ல மெல்ல வாழப் பழகிக் கொண்டார் மார்கோஸ்.
சுமார் 12 ஆண்டுகள் மனிதத் தொடர்பே இன்றி வாழ்ந்த அவர், படங்களில் வருவதுபோல விலங்குகளின் சத்தங்களை எழுப்பி அவற்றுடன் பேசப் பழகிக்கொண்டார்.
ஒரு ஓநாய் கூட்டத்தின் குட்டிகளுக்கு உணவளித்து, அவற்றின் நம்பிக்கையைப் பெற்று அந்தக் கூட்டத்தின் ஒரு உறுப்பினராகவே மாறினார். ஓநாய்களுடன் இணைந்து வேட்டையாடவும் கற்றுக்கொண்டார். பதின்பருவம் இவ்வாறாக காட்டில். கழிந்தது
1965இல்தனது 19வது வயதில் ஸ்பெயின் அதிகாரிகளால் காட்டில் கண்டெடுக்கப்பட்டு மனித சமூகத்திற்கு அழைத்து வரப்பட்டார் மார்கோஸ்.
ஆனால், மனிதர்கள் மத்தியில் வாழ்வது அவருக்குப் பிடிக்கவில்லை.
"காட்டில் ஓநாய்களுடன் வாழ்ந்த நாட்களே எனது வாழ்க்கையின் மகிழ்ச்சியான தருணங்கள்" என்று அவர் இதன்பின் பல சமயங்களில் கூறியுள்ளார்.
பின்னநாட்களில் பள்ளிகளுக்கு சென்று இயற்கையையும் விலங்குகளையும் பாதுகாப்பது குறித்துக் குழந்தைகளிடம் விழிப்புணர்வு ஏற்படுத்தும் பணியை செய்து வந்தார் அவர்.
அவரது வாழ்க்கை வரலாற்றை அடிப்படையாகக் கொண்டு 2010 இல் 'Entrelobos' (Among wolves) என்ற திரைப்படமும் வந்துள்ளது.
2001 முதல் ஸ்பெயினின் வடமேற்கில் உள்ள ரான்டே கிராமத்தில் அமைதியான வாழ்க்கை வாழ்ந்து வந்தார் அவர். அந்த கிராம மக்கள் அன்போடு கவனித்துக்கொண்டனர்.
தனது இறுதி நாட்களையும் அங்கேயே கழித்த அவர் கடந்த ஆகஸ்ட் 15 இல் 80வது வயதில் அமைதியான முறையில் இயற்கை எய்தியுள்ளார்.