சூடானின் தென் டார்பூர் மாகாணத்தின் தலைநகரான நியாலா நகரில், மக்கள் நடமாட்டம் மிகுந்த சந்தை ஒன்றின் மீது சூடான் ராணுவம் நடத்திய டிரோன் தாக்குதலில் 100-க்கும் மேற்பட்டோர் கொல்லப்பட்டுள்ளனர் என்று, அந்நாட்டில் நடைபெறும் வன்முறைகளை கண்காணிக்கும் 'எமர்ஜென்சி லாயர்ஸ்' (Emergency Lawyers) எனும் மனித உரிமை அமைப்பு வெளியிட்ட அறிக்கையில் தெரிவித்துள்ளது.
அக்டோபர் 26-ஆம் தேதி (திங்கள்கிழமை) மாலை நடைபெற்ற இந்த தாக்குதலில் மேலும் 113 பேர் காயமடைந்துள்ளனர். கொல்லப்பட்டவர்கள் மற்றும் காயமடைந்தவர்களில் பலர் பெண்கள் மற்றும் குழந்தைகள் என்று அந்த அமைப்பு குறிப்பிட்டுள்ளது.
இந்த தாக்குதலுக்கு சூடான் ராணுவமே காரணம் என்று குற்றம் சாட்டியுள்ள அந்த அமைப்பு, இச்செயலை வன்மையாக கண்டித்துள்ளது.
"இந்த கொடூரமான தாக்குதல், பொதுமக்களுக்கான சந்தையை ஒரு படுகொலை மற்றும் காயங்கள் நிறைந்த இடமாக மாற்றியுள்ளது. இது அப்பகுதி மக்களின் உயிருக்கு அச்சுறுத்தலாக அமைவதுடன், ஏற்கனவே நடைபெற்று வரும் போரினால் அவர்கள் அனுபவிக்கும் துயரத்தை மேலும் தீவிரப்படுத்தியுள்ளது" என்று அந்த அமைப்பு தனது அறிக்கையில் தெரிவித்துள்ளது.
மேலும், இந்த தாக்குதல் குறித்து சுதந்திரமான விசாரணை நடத்தப்பட வேண்டும் என்றும் அது வலியுறுத்தியுள்ளது.
'டாக்டர்ஸ் வித்தவுட் பார்டர்ஸ்' (Doctors Without Borders - MSF) அமைப்பு, நியாலா நகரில் உள்ள தங்கள் மருத்துவமனைக்கு 36 உடல்கள் கொண்டு வரப்பட்டதாகவும், அவசர சிகிச்சைப் பிரிவில் 150 காயமடைந்தவர்கள் அனுமதிக்கப்பட்டதாகவும் தெரிவித்துள்ளது.
தென் டார்பூர் மாகாணத்தின் தலைநகரான நியாலா, தற்போது 'ராபிட் சப்போர்ட் போர்சஸ்' (RSF) எனும் துணை ராணுவ குழுவின் கட்டுப்பாட்டில் உள்ளது. இந்த குழு 2023-ஆம் ஆண்டு முதல் சூடான் ராணுவத்துடன் போரிட்டு வருகிறது.
இந்த மோதலில் டிரோன் தாக்குதல்கள் ஒரு முக்கிய அங்கமாக இருந்து வருகின்றன. குறிப்பாக, கடந்த சில வாரங்களாக ஆர்.எஸ்.எஃப் (RSF) மற்றும் சூடான் ராணுவம் ஆகிய இரு தரப்பினரும் டிரோன் தாக்குதல்களை தீவிரப்படுத்தியதன் விளைவாக நூற்றுக்கணக்கான மக்கள் உயிரிழந்துள்ளனர்.
இரு தரப்பினரும் வெடிபொருட்கள் நிரப்பப்பட்ட ட்ரோன்களைப் பயன்படுத்தி, மருத்துவமனைகள், அணைகள், பள்ளிகள், சந்தைகள் மற்றும் இடம்பெயர்ந்தோர் முகாம்கள் போன்ற பொதுமக்களுக்கான கட்டமைப்புகளைக் குறிவைத்து தாக்குதல் நடத்தி வருகின்றனர். ஐக்கிய நாடுகள் சபையின் கூற்றுப்படி, இந்த மோதலில் பொதுமக்களுக்கு ஏற்பட்டுள்ள மிக மோசமான அச்சுறுத்தலாக டிரோன் தாக்குதல்கள் மாறியுள்ளன.
ஐக்கிய நாடுகள் சபையின் தரவுகளின்படி, இந்த மோதலால் உலகில் மிகப்பெரிய மனிதாபிமான நெருக்கடி ஏற்பட்டுள்ளது. சூடானின் மொத்த மக்கள் தொகையில் மூன்றில் இரு பங்கினர், அதாவது சுமார் 34 மில்லியன் மக்கள், அவசர உதவி தேவைப்படும் நிலையில் உள்ளனர். சூடானில் போர் 2023 ஏப்ரல் மாதம் தொடங்கியது; அப்போது ராணுவத்திற்கும் ஆர்.எஸ்.எஃப் (RSF) அமைப்பிற்கும் இடையிலான பதற்றம் வெடித்து, தலைநகர் கார்டூமில் நேரடி மோதலாக மாறியதுடன், நாடு முழுவதும் பரவியது.