மத்திய ஆப்பிரிக்க குடியரசில் தங்கச் சுரங்கம் இடிந்து விழுந்த விபத்தில் பலியானோர் எண்ணிக்கை 100-ஐ தாண்டியுள்ளது.
மத்திய ஆப்பிரிக்கக் குடியரசின் மேற்குப் பகுதியில் கடந்த செவ்வாய்க்கிழமை அன்று செயல்பட்டு வந்த தங்கச் சுரங்கம் இடிந்து விழுந்தது. இதில் 30 சுரங்கத் தொழிலாளர்கள் உயிரிழந்தனர் என முதல் கட்ட தகவல் வெளியானது. மேலும் பலர் உள்ளே சிக்கி உள்ளனர் என அதிகாரிகள் தெரிவித்தனர்.
இந்நிலையில், சுரங்க விபத்தில் உயிரிழந்தோர் எண்ணிக்கை 100-ஐயும் தாண்டியுள்ளது. பலர் காயங்களுடன் மீட்கப்பட்டு மருத்துவமனைக்கு அனுப்பி வைக்கப்பட்டனர். காணாமல் போனவர்களைத் தேடும் பணி தொடர்ந்து நடந்து வருகிறது.
நானா-மாம்பெரே மாகாணத்தின் அப்பா பகுதியில் நடந்த சுரங்க விபத்து குறித்து பேசிய மாகாணத்தின் துணை மேயர், சுலைமான், மீட்புக்குழுவினரும் அப்பகுதி மக்களும் பல மணி நேரம் போராடி இடிந்து விழுந்த சுரங்கத்தில் இருந்து உடல்களை மீட்டனர். காயம் அடைந்த சுரங்க தொழிலாளர்களுக்கு சிகிச்சை அளிக்கப்பட்டு வருகிறது என தெரிவித்தார்.
பாதிக்கப்பட்டோர் குடும்பத்தினருக்கு இரங்கல் தெரிவித்த அரசு செய்தித் தொடர்பாளர் எவரிஸ்ட் என்கமானா, பாதிப்பு அடைந்தவர்களுக்கு நிவாரணமும் உதவியும் வழங்க அதிகாரிகள் கடுமையாக உழைத்து வருகின்றனர் என்றார்.
மத்திய ஆப்பிரிக்க குடியரசில் பல ஆயிரம் மக்கள் சிறு அளவிலான கனிம அகழ்வு சுரங்க தொழிலில் செய்வதால், அங்கு பாரம்பரிய சுரங்கங்கள் இடிந்து விழுவது சர்வ சாதாரணமாக நிகழ்கிறது. சுரங்க தொழிலாளர்களுக்கு பொதுவாக போதுமான பாதுகாப்பு இல்லாததாலும், இந்த விபத்துகள் பெரும்பாலும் உயிரிழப்பை ஏற்படுத்துவதாலும் இப்பணி அபாயகரமானது.