போலந்து அமைச்சர் 
உலகம்

உக்ரைன் மீது ரஷியா நடத்த இருந்த அணு ஆயுத தாக்குதலை மோடி தடுத்து நிறுத்தினார் - போலந்து அமைச்சர்

புதினைத் தொடர்பு கொண்டு பேசியதன் மூலமே அந்தப் பேராபத்து தவிர்க்கப்பட்டது.

உக்ரைன் மீது ரஷியா நடத்த இருந்த அணு ஆயுத தாக்குதலை பிரதமர் மோடி தடுத்து நிறுத்தியதாக போலந்து வெளியுறவுத்துறை இணை அமைச்சர் புதிய தகவல் ஒன்றை தெரிவித்துள்ளார்.

போர்

உக்ரைன், நேட்டோ நாடுகளில் இணைவதை எதிர்த்து 2022 இல் தொடங்கிய போர், 5 ஆண்டுகளை கடந்து முடிவின்றி நீடித்து வருகிறது.

ரஷியாவுக்கு சீனா, வட கொரியா மறைமுக ஆதரவு வழங்கி வரும் நிலையில் உக்ரைனுக்கு மேற்கத்திய நாடுகள் பொருளுதவியும் ஆயுத உதவியும் வழங்கி வருகின்றன.

உக்ரைனின் சில எல்லைப் பகுதிகளை ரஷியா கைப்பற்றியுள்ளது.

போலந்து அமைச்சர்

இந்தியா வருகை தந்துள்ள போலந்து நாட்டின் வெளியுறவுத்துறை இணை அமைச்சர் விளாடிஸ்லாவ் தியோபில் பார்டோசெவ்ஸ்கி டெல்லியில் நடைபெற்ற நிகழ்ச்சி ஒன்றில் பேசுகையில்,

கடந்த 2022ஆம் ஆண்டின் பிற்பகுதியில் உக்ரைன் போர் மிகத் தீவிரமடைந்த தருணத்தில், உக்ரைன் மீது அணு ஆயுதத் தாக்குதலை நடத்த ரஷியா தயாராகி வருவதாக உலகளவில் பெரும் அச்சம் எழுந்தது.

இந்த இக்கட்டான சூழ்நிலையில் பிரதமர் மோடி நேரடியாகத் தலையிட்டு, ரஷிய அதிபர் விளாடிமிர் புதினைத் தொடர்பு கொண்டு பேசியதன் மூலமே அந்தப் பேராபத்து தவிர்க்கப்பட்டது.

பிரதமர் மோடி சர்வதேச அளவில் பெரும் மதிப்புமிக்க ஒரு சிறந்த ராஜதந்திரி. இந்தியாவுக்கும் ரஷியாவுக்கும் இடையே வரலாற்று ரீதியான நட்புறவு உள்ளது.

அதனால்தான், பிரதமர் மோடியின் வார்த்தைகளை அதிபர் புதின் மிகக் கவனமாகக் கேட்டு மதிப்பு கொடுக்கிறார்.

ரஷியாவின் மீது செல்வாக்கு செலுத்தக்கூடிய உலகின் மிகச் சில தலைவர்களில் சீன அதிபர் ஷி ஜின்பிங் மற்றும் பிரதமர் மோடி முதன்மையானவர்கள் என குறிப்பிட்டுள்ளார்.

போலந்து அடித்த பல்டி

போரின் ஆரம்பக் காலகட்டத்தில், ரஷியாவிடம் இருந்து இந்தியா தள்ளுபடி விலையில் கச்சா எண்ணெய் வாங்குவதைப் போலந்து கடுமையாக விமர்சித்து வந்தது.

ஆனால், தற்போதைய சூழலில் இரு நாடுகளும் தங்களின் பரஸ்பர பொருளாதார மற்றும் பாதுகாப்புத் தேவைகளை மதித்து நடப்பதாக இந்தியா வந்துள்ள போலந்து இணை அமைச்சர் பேசியுள்ளார்.