உலகம்

மிசிசிபி ஆற்றில் கப்பல்கள் மோதி விபத்து: 30-க்கும் மேற்பட்டோர் மருத்துவமனையில் அனுமதி!

விபத்தில் 180 பயணிகள் மற்றும் பணியாளர்கள் மீட்கப்பட்டனர்.

அமெரிக்காவின் நியூ ஆர்லியன்ஸ் அருகே மிசிசிபி ஆற்றில் சரக்கு கப்பல் மோதியதில் சுற்றுலா பயணிகள் கப்பல் கவிழ்ந்து விபத்துக்குள்ளானது.

படகு கவிழ்ந்து நீரில் மூழ்கிய 100-க்கும் மேற்பட்டோர் மீட்கப்பட்ட நிலையில் காயமடைந்த 32 பேர் மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டுள்ளனர். அதிர்ஷ்டவசமாக உயிரிழப்பு ஏதும் இல்லை.

நியூ ஆர்லியன்ஸ் துறைமுகம் அருகே நிறுத்தி வைக்கப்பட்டிருந்த 'தி அமெரிக்கன் ஹெரிடேஜ்' என்ற சுற்றுலா கப்பல் மீது 'அட்லாண்டிக் அஸ்பால்ட்' என்ற சரக்கு கப்பல் மோதியது.

இதில் அந்த சுற்றுலா கப்பல் அப்படியே கவிழ்ந்தது. இந்த விபத்தில் 180 பயணிகள் மற்றும் பணியாளர்கள் மீட்கப்பட்டனர். கவிழ்ந்த கப்பலில் இருந்து லைஃப் ஜாக்கெட் அணிந்தபடி தண்ணீரில் தத்தளித்தவர்களை மீட்புக் குழுவினர் போராடி மீட்டனர்.

"இது மிசிசிப்பியில் நிகழ்ந்த அதிசயம்" என்று நியூ ஆர்லியன்ஸ் மேயர் ஹெலினா மொரேனோ தெரிவித்துள்ளார்.

மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டவர்களில் யாருக்கும் ஆபத்தான காயம் இல்லை என்றும் அவர் கூறினார்.

விபத்து நடந்த நிலையில், எங்கும் பரபரப்பாக இருந்ததாகவும், தண்ணீரில் இருந்தவர்களை காப்பாற்ற மற்ற கப்பல்களும் விரைந்து வந்ததாகவும் நேரில் பார்த்தவர்கள் தெரிவித்தனர்.

8 நாள் சுற்றுலா பயணத்தை முடித்துவிட்டு திரும்பியபோது இந்த விபத்து நடந்துள்ளது. விபத்து குறித்து விசாரணை நடைபெற்று வருகிறது.

SCROLL FOR NEXT