ஈரான் டிரோன் தாக்குதல்
உலகம்

ஏவுகணை, டிரோன் தாக்குதல் நடத்தப்படலாம்: பொது மக்களுக்கு எச்சரிக்கைவிடுத்த பஹ்ரைன், ஐக்கிய அரபு அமீரகம்

கத்தார் மீது ஈரான் டிரோன் தாக்குதல் நடத்தப்பட்டதாகவும், இதனால் மிகப்பெரிய வெடிச்சத்தம் கேட்டதாகவும் தகவல் வெளியாகியுள்ளது.

அமெரிக்கா- ஈரான் இடையிலான போர் நிறுத்தம் முடிவுக்கு வந்ததாக அறிவிக்கப்பட்டதால் கத்தார் மீது ஈரான் டிரோன் தாக்குதல் நடத்திய நிலையில், பஹ்ரைன் மற்றும் ஐக்கிய அரபு அமீரகம் பொது மக்களுக்கு எச்சரிக்கை விடுத்துள்ளது.

அமெரிக்கா- ஈரான் இடையிலான போரை நிரந்தரமாக முடிவுக்கு கொண்டு வர பாகிஸ்தான் உள்ளிட்ட நாடுகள் மத்தியஸ்தரராக செயல்பட்டு பேச்சுவார்த்தையில் ஈடுபட்டு வருகின்றன.

60 நாள் இடைக்கால போர் நிறுத்தம் ஒப்பந்தம்

பிரான்சில் நடைபெற்ற ஜி-7 மாநாட்டின்போது அமெரிக்கா- ஈரான் இடையிலான 60 நாட்கள் இடைக்கால போர் நிறுத்தம் ஏற்பட புரிந்துணர்வு ஒப்பந்தம் செய்யப்பட்டது. இதில் அமெரிக்க அதிபர் டொனால்டு டிரம்ப் கையெழுத்திட்டார்.

அதன்பின் சுவிட்சர்லாந்தில் டெக்னிக்கல் அளவிலான பேச்சுவார்த்தை நடைபெற்றது. இதற்கிடையே ஹார்முஸ் ஜலசந்தியில் செல்லும் கப்பல்கள் மீது ஈரான் தாக்குதல் நடத்தியது. இதனால் கோபம் அடைந்த அமெரிக்கா ஈரான் மீது தாக்குதல் நடத்தியது. இதனால் போர் நிறுத்த ஒப்பந்தம் என்னவானது என்ற கேள்வி எழுந்தது. பின்னர் இரு தரப்பிலும் தாக்குதல் நடத்தப்படவில்லை.

கடந்த 8-ந்தேதி திடீரென ஹார்முஸ் ஜலசந்தியில் சென்ற இரண்டு கப்பல்கள் மீது ஈரான் தாக்குதல் நடத்தியது. இதனால் டிரம்ப் கடும் கோபம் அடைந்தார். ஈரான் மீது பெரிய அளவில் தாக்குதல் நடத்த உத்தரவிட்டார். அமெரிக்க படைகள் ஈரான் மீது தாக்குதல் நடத்தியது. அத்துடன் போர் நிறுத்தம் முடிவடைந்து விட்டதாக அறிவித்தது.

அமெரிக்க தாக்குதலுக்கு பதிலடியாக ஈரானும், வளைகுடா நாடுகளில் உள்ள அமெரிக்க ராணுவ தளங்கள் மீது தாக்குதல் நடத்தியது.

போர் நிறுத்தம் முடிவுக்கு வந்தது

இதற்கிடையே அமெரிக்க அதிபர் டொனால்டு டிரம்ப் "ஈரான் கேட்டுக் கொண்டதால் மட்டுமே, அமைதிக்காக பேச்சுவார்த்தை தொடர அமெரிக்கா ஒப்புக் கொண்டுள்ளது. எனினும், சந்தேகத்திற்கு இடமின்றி, போர் நிறுத்தம் முடிவடைந்துவிட்டது" என்றார். அத்துடன் ஈரானை பகிரங்கமாக எச்சரித்தார்.

ஆனால், இன்று காலை கத்தார் மீது ஈரான் தாக்குதல் நடத்தியுள்ளது. தங்கள் மீதும் ஈரான் தாக்குதல் நடத்தலாம் என ஐக்கிய அரபு அமீரகம் நினைக்கிறது. இதனால் ஏவுகணை மற்றும் டிரோன் தாக்குதல் நடத்தப்படலாம் என்பதால் முன்னெச்சரிக்கை காரணமாக நாட்டு மக்களுக்கு எச்சரிக்கை விடுத்துள்ளது. அதேபோல் பஹ்ரைனிலும் எச்சரிக்கை விடுக்கப்பட்டுள்ளது. எங்கு பார்த்தாலும் சைரன் ஒலிப்பதால் பொதுமக்கள் அச்சத்துடன் பாதுகாப்பான இடத்திற்கு சென்ற வண்ணம் உள்ளனர்.