உலகம்

ஹார்முஸ் ஜலசந்தியில் 27 இந்திய மாலுமிகள் சென்ற கப்பல் மீது கண்ணிவெடி தாக்குதல்

கப்பல் மீது கண்ணிவெடி தாக்குதல் நடத்தப்பட்டது.

அமெரிக்கா- ஈரான் இடையேயான மத்திய கிழக்கு போரில் ஹார்முஸ் ஜலசந்தியில் கப்பல் போக்குவரத்து பாதிக்கப்பட்டது. தங்களது அனுமதியின்றி செல்லும் கப்பல்கள் மீது ஈரான் தாக்குதல் நடத்துகிறது.

அதேபோல் ஈரான் துறைமுகங்களுக்கு செல்லும் மற்றும் அங்கிருந்து வெளியேறும் கப்பல்களை அமெரிக்க கடற்படை தடுத்து வருகிறது. இதில் இந்திய மாலுமிகள் இருந்த கப்பல்கள் மீது தாக்குதல் நடத்தப்பட்டன.

இந்தநிலையில் இந்திய மாலுமிகள் இருந்த கப்பல் மீது மீண்டும் தாக்குதல் நடத்தப்பட்டு உள்ளது. பனாமா கொடியுடன் எம்.டி. லூயிஸ்-1 என்ற கச்சா எண்ணை கப்பல் ஹார்முஸ் ஜலசந்தியில் சென்று கொண்டிருந்தது. அந்த கப்பலில் 27 இந்திய மாலுமிகள் இருந்தனர்.

அப்போது அக்கப்பல் மீது கண்ணிவெடி தாக்குதல் நடத்தப்பட்டது. கப்பல்களின் அடிப்பகுதியில் காந்தம் மூலம் ஒட்டிக்கொண்டு வெடிக்கக்கூடிய ஒரு வகையான கண்ணிவெடி மூலம் இத்தாக்குதல் நடத்தப்பட்டது.

இதில் கப்பலின் என்ஜின் அறை தீப்பிடித்து எரிந்தது. தீயை கப்பல் பணியாளர்கள் அணைத்தனர். இதையடுத்து அந்த கப்பல் தனது பயணத்தை தொடர்ந்தது. 27 இந்திய மாலுமிகளும் பாதுகாப்பாக இருப்பதாக தெரிவிக்கப்பட்டு உள்ளது.

இந்த தாக்குதல் சம்பவம் ஓமனில் உள்ள கசாப் நகருக்கு வடகிழக்கே சுமார் 46 கி.மீ தொலைவில் நடந்தது. ஒரு சிறிய படகில் வந்தவர்கள் கப்பலில் கண்ணி வெடியை பொருத்தி உள்ளனர் என்பது தெரியவந்து உள்ளது.

SCROLL FOR NEXT