உலகம்

எச்சரிக்கையை குப்பையில் வீசிய இஸ்ரேல் - லெபனான் மீது தாக்குதல் - 14 பேர் பலி

லெபனான் மண்ணிற்குள் நுழைய முயலும் ஒவ்வொரு இஸ்ரேலிய வீரனையும் முழு வலிமையை கொண்டு எதிர்த்துப் போராடுவோம்.

அமெரிக்கா தலைமையில் எட்டப்பட்ட போர் நிறுத்தத்தை மீறி லெபனான் மீது இஸ்ரேல் தொடர் தாக்குதல் நடத்தி வருகிறது.

இஸ்ரேல் மீது ஈரான் ஏவுகணை தாக்குதல்

லெபனானுக்கு ஆதரவாக கடந்த ஞாயிறன்று இஸ்ரேல் மீது ஈரான் ஏவுகணை தாக்குதல் நடத்தியது. பதிலுக்கு இஸ்ரேல் ஈரான் மீது வான்வழித் தாக்குதல் நடத்த நிலைமை மோசமான கட்டத்தை எட்டியது.

பின்னர் இரு நாடுகளும் தற்காலிகமாகத் தாக்குதல்களை நிறுத்துவதாக அறிவித்தன.

டிரம்ப் - நேதன்யாகு

ஏற்கனவே ஈரானுடன் அமைதிப் பேச்சுவார்த்தையை இறுதி செய்ய அமெரிக்கா தீவிரம் காட்டிய நிலையில் ஈரான் மீதான இஸ்ரேலின் தாக்குதல் அமெரிக்க அதிபர் டிரம்ப்-ஐ கோபப்படுத்தியது.

இஸ்ரேலின் பிரதர் நேதன்யாகுவுக்கு போன் செய்து, இஸ்ரேல் ஈரான் மீது இனி தாக்குதல் நடத்தினால் இஸ்ரேல் உலக நாடுகளில் இருந்து தனிமைப்படுத்தப்படும் என எச்சரித்ததாக டிரம்ப் நேற்று பேட்டியில் தெரிவித்தார்.

இதனிடையே லெபனான் மீதான எந்த ஒரு தாக்குதலையும் பொறுத்துக்கொள்ள முடியாது என ஈரான் திட்டவட்டமாக தெரிவித்துள்ளது.

தாக்குதல்

இந்த சூழ்நிலையில் இஸ்ரேல், மீண்டும் இன்று லெபனான் மீது தாக்குதல் நடத்தியுள்ளது.

தெற்கு லெபனானின் முக்கிய நகரங்கள் மற்றும் மக்கள் வசிக்கும் குடியிருப்புப் பகுதிகளைக் குறிவைத்து இஸ்ரேல் இந்தத் தாக்குதலை நடத்தியுள்ளது.

நபாத்தியா நகரில் இஸ்ரேல் நடத்திய டிரோன் தாக்குதலில் பல கட்டிடங்கள் கடுமையாக சேதமடைந்தன.

இதுதவிர, கபர்சிர் நகரிலும் இஸ்ரேல் தாக்குதல் நடத்தியுள்ளது. மேலும் டயர் மாகாணத்தில் உள்ள அல் அப்பாசியா மற்றும் அல் ரமாதியா ஆகிய பகுதிகள் மீதும் இஸ்ரேல் குண்டுவீசியுள்ளது.

இந்த வெவ்வேறு தாக்குதல்களில் லெபனானில் 14 பேர் கொல்லப்பட்டுள்ளனர். சேதம் அதிகமுள்ளதால் உயிரிழப்புகள் மேலும் அதிகரிக்கும் என அஞ்சப்படுகிறது

ஊடுருவல்

மேலும் லெபனானுக்குள் இஸ்ரேல் படைகள் தரைவழியாக முன்னேறி வருகின்றனர்.

இஸ்ரேல் ராணுவத்தின் இந்த ஊடுருவலை முறியடிக்கும் விதமாக எல்லையில் ஹிஸ்புல்லா ஆயுதக்குழு அவர்களின் பீரங்களில் மீது குண்டுவீசி தாக்குதல் நடத்தியுள்ளதாக தகவல் வெளியாகியுள்ளது.

லெபனான் மண்ணிற்குள் நுழைய முயலும் ஒவ்வொரு இஸ்ரேலிய வீரனையும் தங்களின் முழு வலிமையையும் கொண்டு எதிர்த்துப் போராடுவோம் என்று ஹிஸ்புல்லா செய்தித் தொடர்பாளர் தெரிவித்துள்ளார்.

இதனால் ஈரான் மீண்டும் இஸ்ரேல் மீது தாக்குதல் நடத்தலாம் என்ற நிலைமை உருவாகியுள்ளது.