அமெரிக்கா முழுவதும் விமான சேவைகள் திடீரென தற்காலிகமாக நிறுத்தப்பட்டதும், உலகளவில் மைக்ரோசாஃப்ட் நிறுவனத்தின் சேவைகள் கடுமையாகப் பாதிக்கப்பட்டதும் பொதுமக்களிடையே பெரும் பீதியையும், இது ஒரு பெரிய சைபர் தாக்குதலாக இருக்குமோ என்ற சந்தேகத்தையும் ஏற்படுத்தியுள்ளது.
அமெரிக்காவில் கடந்த வெள்ளி கிழமை பிற்பகலில் திடீரென அனைத்து விமானங்களும் உடனடியாகத் தரையிறக்கப்படும் என்று நாட்டின் வான்வெளிப் போக்குவரத்து அதிகாரிகள் அவசர உத்தரவு பிறப்பித்தனர். இதனால் ஆயிரக்கணக்கான பயணிகள் விமான நிலையங்களிலேயே தங்கிக்கொண்டனர்.
அதிகாரப்பூர்வ விளக்கத்தின்படி, நாட்டின் வான்வழிப் போக்குவரத்து அமைப்பில் மேற்கொள்ளப்பட்ட தொழில்நுட்ப மேம்பாட்டுப் பணியின் போது, பழமையான உபகரணங்களில் ஏற்பட்ட அதிகப்படியான சுமை காரணமாக இந்தத் தொடர்பு மற்றும் ரேடார் இடைவெளிகள் ஏற்பட்டதாகக் கூறப்பட்டது. அதே நேரத்தில், மைக்ரோசாஃப்ட் நிறுவனத்தில் ஏற்பட்ட பிணையக் கோளாறு காரணமாக மில்லியன் கணக்கான பயனர்களின் பணிகள் கடுமையாகப் பாதிக்கப்பட்டு, உலகம் முழுவதும் பெரும் குழப்பம் நிலவியது.
அமெரிக்காவில் ஒரே நேரத்தில் விமான சேவைகள் ஸ்தம்பித்துப் போனதும், மிகப்பெரிய தொழில்நுட்ப நிறுவனத்தின் சேவைகள் முடங்கியதும் சாதாரண பொதுமக்களிடையே பலத்த சந்தேகங்களை எழுப்பியுள்ளது. இது போன்ற முக்கியத் தடைகள் சாதாரண தொழில்நுட்பக் கோளாறுகளால் ஏற்படுவதை விட, எதிரிகளின் சைபர் தாக்குதல்களாகவோ அல்லது பொருளாதாரத்தை ஸ்தம்பிக்கச் செய்யும் திட்டமிட்ட நடவடிக்கைகளாகவோ இருக்கக்கூடும் என்று பல பயணிகள் அச்சம் தெரிவித்தனர். இருப்பினும், அமெரிக்க விமானப் போக்குவரத்துத் துறையும் (FAA) மைக்ரோசாஃப்ட் நிறுவனமும் இந்தச் சம்பவங்களுக்குப் பின்னால் எந்தவிதமான தீங்கிழைக்கும் நடவடிக்கைகளோ அல்லது சைபர் தாக்குதல்களோ இல்லை என்று திட்டவட்டமாக மறுத்துள்ளன.
இந்தச் சம்பவங்களைத் தொடர்ந்து, அமெரிக்காவின் போக்குவரத்துத் துறை செயலாளர் சீன் டஃபி , நாட்டின் பழமையான வான்வழிப் போக்குவரத்து அமைப்புகளை நவீனமயமாக்க பல பில்லியன் டாலர்கள் கூடுதல் நிதி தேவைப்படுவதாகத் தீவிரக் கோரிக்கை விடுத்துள்ளார். கடந்த ஆண்டு காங்கிரஸ் ஒப்புதல் அளித்த 12.5 பில்லியன் டாலர் நிதியைக் கொண்டு பல்லாயிரக்கணக்கான செப்பு கம்பி இணைப்புகளுக்கு மாற்றாக ஃபைபர் ஆப்டிக் கேபிள்கள் பொருத்தப்பட்டு வரும் நிலையில், முழுமையான பாதுகாப்புப் பணிகளை முடிக்க மேலும் பல கோடிகள் தேவைப்படுவதாக வெள்ளை மாறும் வலியுறுத்தி வருகிறது. தற்போது நிலைமைகள் படிப்படியாகச் சீரடைந்து வருவதாகவும், விமானச் சேவை அட்டவணைகள் விரைவில் இயல்பு நிலைக்குத் திரும்பும் என்றும் அதிகாரிகள் தரப்பில் தெரிவிக்கப்பட்டுள்ளது.