உலகம்

தொழில்நுட்ப உலகை அதிரவைத்த மைக்ரோசாஃப்ட் மாநாடு - 5 மெகா திட்டங்கள்!

மருத்துவப் புரட்சி செய்யும் மைக்ரோசாஃப்ட் டிஸ்கவரி... மனிதர்களுக்கு இணையாகச் சிந்திக்கும் புதிய தொழில்நுட்பங்கள்!

ஸ்மார்ட்போன்களில் ஆப்கள் பயன்படுத்துவதும், கணினிகளில் ஆப்ரேட்டிங் சிஸ்டம்களை நம்பியிருப்பதும் இனி பழங்கதையாக மாறப்போகிறது. எதிர்கால கணினி உலகம் முழுவதும் "AI ஏஜென்ட்களின்" கட்டுப்பாட்டிற்குள் வரவுள்ளது என்பதை மைக்ரோசாஃப்ட் நிறுவனம் அதிகாரப்பூர்வமாக அறிவித்துள்ளது.

மைக்ரோசாஃப்ட் நிறுவனத்தின் வருடாந்திர தொழில்நுட்ப மாநாடான 'Build 2026' சமீபத்தில் நடைபெற்றது. இதில் உரையாற்றிய அதன் சிஇஓ சத்யா நாதெல்லா, "ஆப்களின் காலம் முடிந்துவிட்டது; இனி ஏஐ ஏஜென்ட்களின் யுகம் தொடங்கிவிட்டது" என அதிரடி கணிப்பை வெளியிட்டார்.

உலகமே உற்றுநோக்கிய இந்த மாநாட்டில், கணினி மற்றும் மொபைல் பயன்பாட்டை ஒட்டுமொத்தமாக மாற்றியமைக்கக்கூடிய 5 பிரம்மாண்ட அறிவிப்புகளை விரிவாக விளக்கியுள்ளனர்.

1. புராஜெக்ட் சொலாரா (Project Solara): கிளவுட் மற்றும் சிப் இணைந்த புதிய ஏஐ புரட்சி

இதுவரை நாம் அனைவரும் CharGPT போன்ற AI தொழில்நுட்பங்களை ஏதேனும் ஒரு ஆப் அல்லது இணையதளம் வழியாகத்தான் பயன்படுத்தி வருகிறோம். ஆனால், புராஜெக்ட் சொலாரா என்பது மென்பொருளையும், சாதனத்தின் உள்ளே இருக்கும் சிப்பையும் நேரடியாக இணைக்கும் ஒரு பிரத்யேக தளமாக காட்டப்படுகிறது.

நிறுவனங்கள் தங்களுக்குத் தேவையான ஏஐ சாதனங்களை மிகக் குறைந்த செலவிலும், அதிவேகமாகவும் உருவாக்க இந்தத் தளம் உதவுகிறது. இது ஏஐ-க்கான பிரத்யேக அடித்தளமாக கருதப்படுகிறது.

2. மைக்ரோசாஃப்ட் ஸ்கவுட் (Microsoft Scout): உங்களுக்காக வேலை செய்யும் ஏஐ ஆட்டோபைலட்

தற்போதுள்ள ஏஐ-களிடம் நாம் "இதைச் செய்" என்று கட்டளை கொடுத்தால் மட்டுமே வேலை செய்யும். ஆனால், மைக்ரோசாஃப்ட் ஸ்கவுட் என்பது 'வொர்க் ஐக்யூ' என்ற பிரத்யேக தொழில்நுட்பத்தில் இயங்கும் ஒரு தன்னிச்சையான உதவியாளர். ஓபன் சோர்ஸ் 'ஓபன்கிளா' தொழில்நுட்பத்தில் இது உருவாக்கப்பட்டுள்ளது.

நாம் எந்தக் கட்டளையும் கொடுக்காமல், பின்னணியில் அமைதியாக இயங்கும். மைக்ரோசாஃப்ட் டீம்ஸ், அவுட்லுக் மெயில், ஒன்டிரைவ் ஃபைல்கள் அனைத்தையும் ஒருங்கிணைத்து, உங்களுக்கான மீட்டிங் விவரங்களை தயார் செய்வது, மெயில்களுக்குப் பதில் டிராஃப்ட் செய்வது போன்ற வேலைகளைத் தானாகவே செய்யும்.

நிறுவனங்களின் ரகசியத் தரவுகள் கசிந்துவிடக் கூடாது என்பதற்காக, ஒவ்வொரு ஸ்கவுட் ஏஜென்ட்டுக்கும் மனித ஊழியர்களைப் போல 'Entra Identity' என்ற டிஜிட்டல் அடையாளமும், அணுகல் கட்டுப்பாடுகளும் வழங்கப்பட்டுள்ளன.

3. எம்ஏஐ-திங்கிங்-1 (MAI-Thinking-1): மனிதனைப் போல யோசிக்கும் மாடல்

மைக்ரோசாஃப்ட் நிறுவனம் முற்றிலும் உள்நாட்டிலேயே தயாரித்த அடுத்த தலைமுறை ஏஐ மாடல்களை அறிமுகப்படுத்தியுள்ளது. இதில் முதன்மையானது 35 பில்லியன் பாராமீட்டர்களைக் கொண்ட 'MAI-Thinking-1' என்ற ரீசனிங் மாடலாக இருக்கும். சாதாரண ஏஐ மாடல்கள் கேள்விகளுக்குப் பதில்களை யூகிக்க மட்டுமே செய்யும்.

ஆனால் இந்த 'திங்கிங்' மாடல், மனிதர்களைப் போல ஒரு சிக்கலை பல கட்டங்களாகப் பிரித்து, தர்க்கரீதியாக பல விதங்களாக யோசித்து, கோடிங் மற்றும் நீண்ட விவாதங்களுக்குத் துல்லியமான தீர்வை வழங்கும்.

பிற ஏஐ மாடல்களின் தரவுகளைத் திருடாமல், மைக்ரோசாஃப்ட் முறைப்படி உரிமம் பெற்ற எண்டர்பிரைஸ் டேட்டாவை வைத்து இதை உருவாக்கியுள்ளதால், நிறுவனங்கள் சட்டச் சிக்கல்கள் இன்றி இதைப் பயன்படுத்தலாம் என்று அறிவித்துள்ளது.

4. சர்ஃபேஸ் ஆர்டிஎக்ஸ் ஸ்பார்க் டெவ் பாக்ஸ் (Surface RTX Spark Dev Box): மேஜை மீதே ஒரு சூப்பர் கம்ப்யூட்டர்

பொதுவாகப் பெரிய ஏஐ மாடல்களை இயக்க வேண்டும் என்றால் பிரம்மாண்டமான கிளவுட் சர்வர்கள் தேவைப்படும். இந்த நிலையை மாற்றி, டெவலப்பர்கள் தங்கள் மேஜையிலேயே ஏஐ மாடல்களை உருவாக்க இந்த ஹார்டுவேர் கணினி அறிமுகம் செய்யப்பட்டுள்ளது.

என்விடியாவின் ஆர்டிஎக்ஸ் ஸ்பார்க் சிப் மூலம் இயங்கும் இந்த கணினி, 1 பெடாஃப்ளாப் (Petaflop) ஏஐ செயல்திறன் மற்றும் 128 ஜிபி மெமரியைக் கொண்டது. அதாவது, ஒரு நொடிக்கு ஒரு குவாட்ரில்லியன் கணக்குகளைச் செய்யும்.

இதன் மூலம் 120 பில்லியன் பாராமீட்டர்கள் வரையிலான பெரிய ஏஐ மாடல்களை, இணைய வசதி இல்லாமலேயே லோகலாக கணினியிலேயே ரன் செய்ய முடியும். இத்துடன் விண்டோஸ் 11-ல் ஏஐ கோடிங் செய்வதற்கான பல லினக்ஸ் டூல்களும் இணைக்கப்பட்டுள்ளன.

5. மஜோரானா 2 மற்றும் மைக்ரோசாஃப்ட் டிஸ்கவரி (Majorana 2 & Discovery): அறிவியல் உலகிற்கான குவாண்டம் பாய்ச்சல்

இது சாதாரண பயனர்களுக்கானது அல்ல, ஒட்டுமொத்த மனிதகுலத்தின் மருத்துவ மற்றும் அறிவியல் வளர்ச்சிக்கான தொழில்நுட்பமாகும்.

சாதாரண சூப்பர் கம்ப்யூட்டர்கள் பல ஆண்டுகள் எடுத்துக்கொள்ளும் கணக்குகளைச் சில நிமிடங்களில் முடிக்கும் குவாண்டம் கம்ப்யூட்டரை மைக்ரோசாஃப்ட் உருவாக்கி வருகிறது. இந்த புதிய சிப் அதன் முந்தைய பதிப்பை விட 1000 மடங்கு அதிக நம்பகத்தன்மை கொண்டது. இதன் மூலம், 2029-க்குள் முழுமையான குவாண்டம் கணினியை உருவாக்க மைக்ரோசாஃப்ட் திட்டமிட்டுள்ளது.

இது ஏஐ ஏஜென்ட்களைக் கொண்ட ஒரு சயின்டிஃபிக் பிளாட்ஃபார்ம். புதிய மருந்துகளைக் கண்டறிவது, புதிய வேதிப்பொருட்களை உருவாக்குவது போன்ற ஆராய்ச்சிகளை இது மிக வேகமாகச் செய்யும். ஏற்கனவே GSK மருந்து நிறுவனம் மற்றும் BHP சுரங்க நிறுவனம் போன்ற உலகின் முன்னணி நிறுவனங்கள் இந்தத் தளத்தைப் பயன்படுத்தத் தொடங்கியுள்ளன.