உலகம்

அமெரிக்காவில் அடுத்தடுத்து அதிரவைக்கும் சம்பவங்கள்: மியாமி விமான நிலையத்தில் 2 விமானங்கள் மோதி விபத்து!

கோபா ஏர்லைன்ஸ் விமானத்தின் பாதையில், கொலம்பியா விமானம் தவறுதலாக வந்ததே இந்த மோதலுக்குக் காரணம் என்று கூறப்படுகிறது

அமெரிக்காவில் தொழில்நுட்பக் கோளாறு காரணமாக விமான சேவைகள் முடங்கிய பரபரப்பு அடங்குவதற்குள், மியாமி சர்வதேச விமான நிலையத்தில் இரண்டு விமானங்கள் ஓடுபாதையில் மோதிக்கொண்டு விபத்துக்குள்ளான சம்பவம் பெரும் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது.

ஓடுபாதையில் நேருக்கு நேர் மோதல்

அமெரிக்காவின் புளோரிடா மாகாணத்தில் உள்ள மியாமி சர்வதேச விமான நிலையத்தில் இரண்டு ஓடுபாதைகள் சந்திக்கும் இடத்தில் இந்த விபத்து நேரிட்டுள்ளது.

மியாமியிலிருந்து கொலம்பியாவின் பொகோட்டா நகரத்திற்குச் புறப்படத் தயாராக இருந்த விமானமும், பனாமாவிலிருந்து வந்திறங்கிய கோபா ஏர்லைன்ஸ் விமானமும் எதிர்பாராதவிதமாக அருகருகே வந்தன. அப்போது கோபா ஏர்லைன்ஸ் விமானத்தின் இறக்கை, கொலம்பியா செல்லவிருந்த விமானத்தின் முன்பகுதியில் பலமாக மோதியது.

பயணிகள் அதிர்ச்சி - மீட்புப் பணி தீவிரம்

இந்த மோதலில் கொலம்பியா விமானத்தின் முன்பகுதி பலத்த சேதமடைந்தது. இதனால் விமானத்திற்குள் இருந்த பயணிகள் கடும் அதிர்ச்சியடைந்து கூச்சலிட்டனர்.

விபத்து நடந்தவுடன் விமான நிலையத்தில் அவசரநிலை பிரகடனப்படுத்தப்பட்டு, தீயணைப்பு வீரர்களும் மீட்புக்குழுவினரும் சம்பவ இடத்திற்கு விரைந்து சென்று பயணிகளைப் பாதுகாப்பாக மீட்டனர். கோபா ஏர்லைன்ஸ் விமானம் வந்து கொண்டிருந்த பாதையில், கொலம்பியா விமானம் தவறுதலாக நுழைந்ததே இந்த மோதலுக்குக் காரணம் என்று முதற்கட்ட விசாரணையில் தெரியவந்துள்ளது.

தொழில்நுட்பக் கோளாறுக்கு மத்தியில் விபத்து

அமெரிக்காவில் நேற்று முன்தினம் நள்ளிரவு விமானப் போக்குவரத்து கட்டுப்பாட்டு மையங்களில் திடீரென ஏற்பட்ட தொழில்நுட்பக் கோளாறு காரணமாக, சுமார் 5 மணி நேரம் ஒட்டுமொத்த விமான சேவைகளும் முற்றிலும் முடங்கின.

அதன் பிறகு விமானங்கள் படிப்படியாக இயக்கப்பட்டு, இன்றுக்குள் அமெரிக்க விமானப் போக்குவரத்து முழுமையாக இயல்பு நிலைக்குத் திரும்பும் என்று அறிவிக்கப்பட்டிருந்தது. இந்த இக்கட்டான சூழ்நிலைக்கு மத்தியில்தான் மியாமியில் இந்த ரன்வே விபத்து நடந்துள்ளது குறிப்பிடத்தக்கது. இது குறித்து விமான போக்குவரத்து வாரியம் தீவிர விசாரணை மேற்கொண்டு வருகிறது.

SCROLL FOR NEXT